மறக்க முடியுமா இசையோடு வாழும் அந்தக் காதலை?
தில்லானா மோகனாம்பாள்- திரைப்படத்திற்கு வயது 53
எப்படிச் சொன்னாலும் தித்திப்பாகவே இருப்பது காதல் மட்டுமே. அதனால்தான் காலங்கள் தாண்டியும் காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மொழி, இனம், நாடு என எதையும் தாண்டும் இருமுனை கூர்கொண்ட ஆயுதம் காதல்.
அது இங்கும் அங்குமென எப்படியும் தாக்கும். அதன் சக்தி தெரிந்ததால்தான் உலகம், காதல் திரைப்படங்களால் நிரம்பி இருக்கிறது.
உலகளவில் தயாராகும் படங்கள், காதலையே அதிகம் பேசுகின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம். புள்ளி விவரங்கள் எந்தப் புள்ளிகளுக்கும் சிக்காதவை.
காலங்கள் தோறும் வந்துகொண்டிருக்கும் காதல் படங்களில் ஒரு சிலதான் சாகாவரம் பெற்றிருக்கிறது. அந்த ஒரு சில-க்களில் ஒன்று ‘தில்லானா மோகனாம்பாள்’!
உச்சரிக்கும்போதே சங்கீதமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் டைட்டில்.
1968 ஆம் ஆண்டு, ஜூலை 27 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு வயது 56.
இத்தனை வருடமாகியும் அதே ரசனையோடும்,
அதே இளமையோடும் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறது
இந்தப் படமும்,
படம் சொல்லும் காதலும்!
கொத்தமங்கலம் சுப்புவின் நாவலான ‘தில்லானா மோகனாம்பாள்’
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது, கதைக்காகவும் கோபுலுவின் ஓவியத்துக்காகவும் தேடித் தேடி வாசித்தவர்கள் ஏராளம்.
அது அந்தக் கால ஆச்சரியம்.
இந்தக் கதையின் உரிமையை வைத்திருந்த எஸ்.எஸ்.வாசன், தனது ஜெமினி ஸ்டூடியோஸ் சார்பில் திரைப்படமாக்க நினைத்திருந்தார்.
அப்போது இயக்குநர் ஏ.பி.நாகராஜன், அதைப் படமாக்க இரண்டு முறை கேட்டும், கதையின் உரிமையை கொடுக்க மறுத்துவிட்டார் வாசன். ஆனால், மூன்றாவது முறை கேட்டபோது மறுக்க முடியவில்லை. சரி என்று கொடுத்துவிட்டார் கதையை.
பிறகு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் உருவானதுதான், காலம் தோறும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ’தில்லானா மோகனாம்பாள்’!
அந்தக் காலகட்டத்தில்
25 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது இந்தக் கதை. (அப்போது, இது அடேங்கப்பா தொகை).
சிவாஜி கணேசன், சிக்கல் சண்முகசுந்தரமாகவும் பத்மினி மோகனாம்பாளாகவும் ஜில்ஜில்-லாக மனோரமாவும் நகைச்சுவையில் பார்த்த நாகேஷ், சவடால் வைத்தியாக வேறு அவதாரம் எடுத்திருப்பதையும் இந்தப் படம் இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
ஒரு நாதஸ்வர வித்வானின் நடை, உடை, பாவனையை தனது தேர்ந்த நடிப்பால், இயல்பாக அள்ளி வீசியிருப்பார் சிவாஜி.
தான்,
‘நாட்டிய பேரொளி’தான் என்பதை பத்மினி ஆணித்தரமாக நிரூபித்த படமும் இதுதான்.
கே.வி.மகாதேவன் இசையில், பி.சுசீலாவின் குரலில் வரும்,
‘நலம்தானா, உடலும் உள்ளமும் நலம்தானா?’-வும், ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?’ பாடலும் நம்மை நோக்கியே கேட்பதாக இப்போதும் இருப்பதுதான், அந்தப் படத்தின், அந்தக் காட்சியின், அந்த இசையின் மேஜிக்.
வருடங்கள் வரும், போகும். ஆனால் காதல் இருக்கும்வரை ‘தில்லானா மோகனாம்பாள்’ வாழ்ந்துகொண்டே இருப்பாள்
ஒரு காதலாக,
காதலியாக,
ரசிகையாக!
– நன்றி;அலாவுதீன்