ஆணுடன் இணை சேராமலே 14 குட்டிகளை ஈன்ற மண்ணுளிப் பாம்பு – எப்படி?

ஆண் பாம்பு எனத் தவறுதலாகக் கருதப்பட்ட பெண் மண்ணுளிப் பாம்பு ஒன்று 14 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில், இந்தப் பெண் பாம்பு கருத்தரிப்பதற்காக எந்த ஆண் பாம்புடனும் இணை சேரவில்லை.

ரொனால்டோ என்று பெயரிடப்பட்டுள்ள 13 வயதான இந்த மண்ணுளிப் பாம்பு (Boa Constrictor), பிரிட்டனின் சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் அண்மையில் சில குட்டிகளை ஈன்றது.

மண்ணுளிப் பாம்பு வகையைச் சேர்ந்த இது, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய அந்தக் கல்லூரியின் விலங்குகள் பராமரிப்பு நிபுணரான பீட் குவின்லான், குட்டிகளை ஈன்றதற்கு முன்பு வரை ரொனால்டோ ஒரு ஆண் பாம்பு என்றே தான் நம்பியதாகக் கூறினார்.

தன்னுடைய பராமரிப்பில் இருந்த ஒன்பது ஆண்டுகளில் ரொனால்டோ எந்த ஒரு ஆணுடனும் இணை சேரவில்லை என்கிறார் பீட்.

இணை சேராமல் குட்டியை ஈன்றெடுக்கும் இதுபோன்ற நிகழ்வு பார்தெனோஜெனிசீஸ் என்று அழைக்கப்படுகிறது.

  • தானாக கருத்தரித்த பாம்பு

இதுபோன்ற நிகழ்வு பிரேசிலிய போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை மண்ணுளிப் பாம்புகளில் இதுவரை மூன்று முறை மட்டுமே நடந்துள்ளது.

விலங்குகள் வன்கொடுமை தடுப்புக்கான ராயல் சொசைட்டியிடம் இருந்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ரொனால்டோவை பெற்றதாக பீட் கூறுகிறார்.

சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகள் பராமரிப்பாளராகப் பணியில் சேர்ந்ததாகவும், அப்போது தன்னுடன் இந்தப் பாம்புகளையும் எடுத்து வந்ததாகவும் அவர் விவரித்தார்.

ரொனால்டோ குட்டியை ஈன்ற நாளன்று பீட் குவின்லான் வேறு இடத்தில் இருந்துள்ளார். அங்கு பயிலும் மாணவர் ஒருவர், ரொனால்டோ இருந்த பெட்டிக்குள் சில பாம்புக் குட்டிகள் நெளிவதை அடையாளம் கண்டு, பணியில் இருந்த காவலர்களிடம் கூறியுள்ளார்.

“உடனடியாக நான் கல்லூரிக்கு விரைந்தேன். அங்கு நான் பார்த்தபோது அந்தப் பெட்டிக்குள் எங்கு பார்த்தாலும் பாம்புக் குட்டிகள் நிறைந்திருந்தன.”

சில உயிரினங்களில் இணையில்லாமல் கருத்தரிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.

தானாக கருத்தரித்த பாம்பு

குறிப்பாக முதுகெலும்பில்லாத சில பூச்சிகள், துணையுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடாமலேயே இனப்பெருக்கம் செய்கின்றன.

இதுபோன்ற நடைமுறையின்போது தன்னைப் போலவே மரபணு ரீதியாக ஒத்திருக்கும் சந்ததிகளை அவை உயிரி நகலாக்கம்(க்ளோனிங்) செய்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் இணையின் உதவியில்லாமல் ஒரு திருக்கை மீன் தாமாகவே கருத்தரித்தது.

அதேபோல ஆணின் துணையில்லாமல் பெண் முதலை தானாகவே கருத்தரித்த சம்பவம் கோஸ்டாரிகாவில் கடந்த ஆண்டு நடந்தது.

ஆனால் பாம்பு போன்ற முதுகெலும்பு உள்ள விலங்குகளில் இத்தகைய நிகழ்வு அரிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *