World

மலேசியாவில் சீனா கட்டிய சொர்க்க நகரம், பேய் நகரமானது எப்படி?

“நான் இந்த இடத்திலிருந்து எப்படியோ தப்பிவிட்டேன்” நஸ்மி ஹனாஃபியா சற்று பதற்றத்துடன் கூறிச் சிரிக்கிறார்.

ஓராண்டுக்கு முன்பு, 30 வயதான தகவல் தொழில்நுட்பப் பொறியாளரான இவர், தெற்கு மலேசியாவில் உள்ள ஜோகூரில், சீனாவால் கட்டப்பட்ட பரந்து விரிந்த குடியிருப்பு வளாகமான ஃபாரஸ்ட் சிட்டிக்கு குடிபெயர்ந்தார். கடலை நோக்கிய ஒரு டவர் பிளாக்கில் ஒரு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார்.

ஆறு மாதங்களில் அவருக்கு அந்த நகரம் அவருக்கு அச்சத்தை அளிக்கத் தொடங்கிவிட்டது. “பேய் நகரம்” என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் தொடர்ந்து வாழ அவர் விரும்பவில்லை.

“நான் எனது வைப்புத்தொகையைப் பற்றி கவலைப்படவில்லை, பணத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை, நான் வெளியேறி விட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்” என்று அவர் கூறினார். அவர் வாழ்ந்த அதே டவர் பிளாக்கில் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தோம்.

“திரும்பி வந்தவுடன் எனக்கு நெஞ்சு வலிக்கிறது”, என்றார். “இங்கே தனிமையாக இருக்கிறது. துணைக்கு இருப்பது நீங்களும் உங்கள் எண்ணங்களும் மட்டும்தான்.”

சீனாவின் மிகப்பெரிய சொத்து மேம்பாட்டாளரான கன்ட்ரி கார்டன் 2016- இல் வன நகர திட்டத்தை அறிவித்தது. சுமார் 8 லட்சம் கோடி மெகா திட்டமாக, பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் அங்கமாக இது அமைக்கப்பட்டது.

அந்த நேரத்தில், சீனாவின் ரியல் எஸ்டேட் தொழில் ஏற்றத்தில் இருந்தது. நடுத்தர வர்க்க மக்கள் வாங்குவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வீடுகளைக் கட்டுவதற்காக டெவலப்பர்கள் பெரும் தொகையை கடன் வாங்கி முதலீடு செய்தனர்.

  • மலேசியாவில்  சீனாவால் கட்டப்பட்ட வன நகரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மலேசியாவில், கோல்ஃப் மைதானம், வாட்டர்பார்க், அலுவலகங்கள், பார்கள் மற்றும் உணவகங்களைக் கொண்ட சுற்றுச்சூழல் நட்பு கொண்ட பெருநகரத்தை உருவாக்குவது கண்ட்ரி கார்டனின் திட்டமாக இருந்தது. ஃபாரஸ்ட் சிட்டி இறுதியில் கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்கள் வசிக்கும் திட்டமாக இருக்கும் என்று நிறுவனம் கூறியது.

பிறகு சீனாவின் ரியல் எஸ்டேட் துறை சரிவைச் சந்தித்தது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் விளைவுகள் கொடூமாகத் தென்படத் தொடங்கின. அதற்கு உதாரணம்தான் வன நகரம் எனப்படும் இந்த ஃபாரஸ்ட் சிட்ட. இப்போது முழு திட்டத்திலும் 15 சதவிகிதம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதிலும் வெறும் 1 சதவிகித வீடுகளில் மட்டுமே மக்கள் குடியேறியுள்ளனர்.

ஏறக்குறைய 16 லட்சம் கோடி அளவுக்கு கடன்கள் இருந்தாலும், இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றப் போவதாக உறுதி கூறுகிறது இதை மேம்படுத்தி வரும் கன்ட்ரி கார்டன் நிறுவனம்.

  • மலேசியாவில்  சீனாவால் கட்டப்பட்ட வன நகரம்

‘இங்கே பயமாக இருக்கிறது’

வன நகரம் “அனைத்து மனிதகுலத்திற்கும் ஒரு கனவு சொர்க்கம்” என்று அது தொடங்கப்படும்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில், இது உள்நாட்டு சீன சந்தையை இலக்காகக் கொண்டது. ஆர்வமுள்ள மக்களுக்கு வெளிநாட்டில் இரண்டாவது வீட்டை சொந்தமாக்குவதற்கான வாய்ப்பை வழங்குவதுதான் இதன் நோக்கம். ஏனென்றால் அதன் விற்பனை விலை பெரும்பாலான சாதாரண மலேசியர்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்தது.

இந்தத் திட்டத்தில் வீடு வாங்கும் சீனர்கள், இதை மலேசியர்களுக்கு வாடகைக்கு விடலாம் அல்லது விடுமுறை இல்லாமாகப் பயன்படுத்தலாம். அதுவும் இல்லையென்றால் அதை முதலீடாகப் பயன்படுத்தலாம்.

ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடமாகத்தான் வனத் தோட்டத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. பெரிய நகரமான ஜோகூர் பாருவிலிருந்து வெகு தொலைவில் செயற்கைத் தீவில் இது கட்டப்பட்டிருக்கிறது. அதுவே இப்போது “கோஸ்ட் சிட்டி” என்ற பெயரைப் பெறக் காரணமாகிவிட்டது.

“எனக்கு இந்த இடத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் இது ஒரு மோசமான அனுபவம். இங்கு செய்வதற்கு ஒன்றுமில்லை” என்கிறார் நஸ்மி.

வன நகரம் நிச்சயமாக ஒரு விசித்திரமான அனுபவம். கைவிடப்பட்ட விடுமுறை விடுதி போல் காணப்படுகிறது.

மலேசியாவில்  சீனாவால் கட்டப்பட்ட வன நகரம்

வெறிச்சோடிய கடற்கரையில், ஒரு மோசமான குழந்தைகள் விளையாட்டு மைதானம், துருப்பிடித்த விண்டேஜ் கார், ஒரு வெள்ளை கான்கிரீட் படிக்கட்டு உள்ளது. தண்ணீருக்கு அருகில் முதலைகள் இருப்பதால் நீச்சல் அடிக்க வேண்டாம் என எச்சரிக்கை பலகைகள் உள்ளன.

ஷாப்பிங் மாலில், பல கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. கடற்கரையில் குடித்துவிட்டு எறிந்த மது பாட்டில்களைக் காணலாம்.

இரவு வந்தால் வன நகரம் இருளில் மூழ்கிவிடும். அப்போதுதான் இது பேய் நகரம் போலத் தோன்றும். மகத்தான அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி வீடுகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் விளக்குகள் பெரும்பாலும் எரியவில்லை. யாரும் உண்மையில் இங்கு வாழ்கிறார்கள் என்று நம்புவதே கடினம்.

நான் சந்திக்கும் சில குடியிருப்பாளர்களில் ஒருவரான ஜோன்னே கவுர் கூறுகையில், “இந்த இடம் பயங்கரமானது. “பகலில் கூட, நீங்கள் உங்கள் முன் வாசலில் இருந்து வெளியே வரும்போது இருட்டாக இருக்கும்.”

அவரும் அவரது கணவரும் ஒரு கோபுரத் தொகுதியின் 28-ஆவது மாடியில் வசிக்கிறார்கள். முழுத் தளத்திலும் அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நஸ்மியைப் போலவே, அவர்களும் வாடகைக்கு இருப்பவர்கள். நஸ்மியைப் போலவே, அவர்களும் தங்களால் முடிந்தவரை விரைவில் வெளியேற திட்டமிட்டுள்ளனர்.

“உண்மையில் முதலீடு செய்து இங்கு ஒரு இடத்தை வாங்கியவர்களுக்காக நான் வருந்துகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

“இது வாக்குறுதியளிக்கப்பட்டபடி இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

வன நகரத்தில் வீடுகளை வாங்கிய சீனாவில் உள்ளவர்களிடம் பேசுவது எளிதானது அல்ல. பிபிசி ஒரு சில உரிமையாளர்களை மறைமுகமாகச் சென்றடைய முடிந்தது. ஆனால் அவர்கள் அநாமதேயமாகக் கூட கருத்து தெரிவிக்கத் தயங்கினார்கள்.

இருப்பினும், சமூக ஊடகங்கள் சில ஆதாரங்களைக் காண முடிகிறது. வளர்ச்சியைப் பாராட்டி ஒரு இடுகையின் கீழ், லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த வீடு வாங்கியவர் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார். “இது மிகவும் தவறானது. தற்போதைய வன நகரம் ஒரு பேய் நகரம். மக்கள் யாரும் இல்லை. இது நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது, முழுமையற்ற வாழ்க்கை வசதிகளைக் கொண்டுள்ளது. கார் இல்லாமல் எங்கும் போவது கடினம்”.

“எனது வீட்டின் விலை மிகவும் குறைந்துவிட்டது, நான் பேசாமல் இருக்கிறேன்” என்று ஒரு வாசகத்துடன், அவர்கள் வாங்கிய வீட்டின் மீதான பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது என்றும் பலர் கேட்டுள்ளனர்.

மலேசியாவில்  சீனாவால் கட்டப்பட்ட வன நகரம்

இது பேய் நகரமானது எப்படி?

ரியல் எஸ்டேட் சந்தை சீர்குலைந்துள்ள சீனா முழுவதும் இந்த வகையான ஏமாற்றம் உணரப்படுகிறது.

பல வருடங்களாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கடனைப் பெற்ற பிறகு, ஒரு சரிவு வரும் என சீனா ஏற்கெனவே அஞ்சியது. 2021-இல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. “வீடுகள் என்பது ஊகங்களுக்கு அல்ல” என்பது சீனாவின் தலைவர் ஷி ஜின்பிங்கின் மந்திரம்.

இந்த நடவடிக்கைகளின் விளைவாக, பெரிய நிறுவனங்களில் பெரிய திட்டங்களை முடிக்க பணம் இல்லாமல் போய்விட்டது.

அக்டோபரில், கன்ட்ரி கார்டன் ஆஸ்திரேலியாவில் இரண்டு திட்டங்களை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மெல்போர்னில் முடிக்கப்படாத ஒரு திட்டத்தை விற்றது. சிட்னியிலும் இதே நிலைதான்.

வன நகரத்தின் தற்போதைய நிலைமைக்கு உள்ளூர் அரசியல் காரணிகளும் காரணமாக இருக்கின்றன. 2018 ஆம் ஆண்டில், மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமது,, “வெளிநாட்டினருக்காக கட்டப்பட்ட நகரத்திற்கு” தனது ஆட்சேபத்தைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சீன மக்களுக்கு விசாக்களை கட்டுப்படுத்தினார்.

அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் நிலையற்ற நிலையில் உள்ள ஒரு நாட்டில் மெகா வளர்ச்சியைக் கட்டியெழுப்புவது புத்திசாலித்தனமா என்றும் சில ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போதைய மலேசிய அரசாங்கம் ஃபாரஸ்ட் சிட்டி திட்டத்திற்கு ஆதரவாக உள்ளது, ஆனால், சீன மக்களுக்கு இந்தத் திட்டத்தின் மீது இன்னும் நம்பிக்கை பிறக்கவில்லை.

கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சீன குடிமக்கள் வெளிநாட்டில் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்பதற்கான கட்டுப்பாடுகள் போன்ற பிற எதிர்பாராத சிக்கல்கள், குறிப்பாக கன்ட்ரி கார்டன் போன்ற ராட்சத நிறுவனங்களால் தொடங்கப்பட்ட வெளிநாட்டு திட்டங்களுக்கு இடையூறாக உள்ளன.

கேஜிவி இன்டர்நேஷனல் ப்ராப்பர்ட்டி கன்சல்டன்ட் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த டான் வீ டியாம் கூறுகையில், “இது போன்ற ஒரு பெரிய லட்சியத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன், கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம், உங்களிடம் போதுமான பணப்புழக்கம் இருப்பதை உறுதி செய்வதாகும்.”

சீன சொத்து சந்தையில் தற்போதைய நிலைமை வெறும் தற்காலிகமானது என்றும், “வழக்கம் போல் அதன் வணிகம் செயல்படுகிறது” என்று கன்ட்ரி கார்டன் கூறுகிறது.

மலேசியா மற்றும் அண்டை நாடான சிங்கப்பூர் இடையே ஒரு புதிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வன நகரத்தை சேர்க்கும் முயற்சிகளை அந்த நிறுவனம் சுட்டிக் காட்டுகிறது.

ஆனால் பண வசதி இல்லாமல், வன நகரம் போன்ற திட்டங்களை எப்படி முடிக்க முடியும் அல்லது எந்த நேரத்திலும் மக்களை அங்கு வாழ எப்படி ஈர்க்கும் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

“இது ஒரு கோழி மற்றும் முட்டையின் நிலைமை. அதாவது ஒரு டெவலப்பர் ஒரு வீட்டைக் கட்டுவதற்கு முன்பே அதை விற்று கிடைக்கும் நிதியை நம்பியிருக்கிறார்” என்று கட்டுமான நிதி நிபுணர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

“ஆனால் வாங்குபவர்கள் தங்களுடைய அபார்ட்மெண்ட் சாவியை இறுதியில் பெறுவார்களா என்று உறுதியாக தெரியாவிட்டால், தங்கள் பணத்தை எடுத்து வைக்க மாட்டார்கள்.”

ஆகப்பெரிய ஆசையும் உண்மையும்

சீனாவின் ரியல் எஸ்டேட் நெருக்கடிக்கு வன நகரம் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு. சில உள்ளூர் காரணிகள் தற்போதைய நிலைமைக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை எங்கோ தொலைவில் கட்டுவது மட்டுமேமக்களை நம்பவைக்க போதுமானதாக இல்லை என்பதற்கு இது சான்றாகும்.

இறுதியில், வன நகரத்தின் தலைவிதி சீன அரசின் முடிவைப் பொறுத்தது. கடந்த மாதம், சீன அரசிடம் இருந்து நிதி உதவி பெறும் டெவலப்பர்களின் பட்டியலில் கன்ட்ரி கார்டன் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் வந்தன. இருப்பினும் அந்த நிதி ஆதரவின் அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

நஸ்மி போன்றவர்கள் இந்தப் ‘பேய் நகரத்துக்கு’ திரும்பி வருவார்கள் என்பது சாத்தியமில்லை.

“அடுத்த முறை நான் நிச்சயமாக மிகவும் கவனமாக தேர்வு செய்வேன்,” என்று அவர் கூறுகிறார். “ஆனால் நான் இந்த இடத்தை விட்டு வெளியேறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் – இப்போது என் உயிர் மீண்டும் கிடைத்துவிட்டது.”

பிபிசி தமிழ்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading