உலகம் முழுவதும் வெறுப்பு அதிகரித்து வருகிறது ; ஐ.நா. கவலை
உலகம் முழுவதும் வெறுப்பு, வெறுப்பு தொடர்பான பேச்சுகள், குற்றங்கள் ஆகியவை அதிகரித்து வருவதாக ஐ.நா. பொதுச்சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில்,
“இந்த உலகில் வெறுப்புக்கு இடம் இல்லை. கடந்த அக்டோபர் 7 முதல் (இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதல் தொடங்கிய தினம்) உலகம் முழுவதும் வெறுப்பும், வெறுப்பு தொடர்பான பேச்சுகள், குற்றங்கள் ஆகியவை அதிகரித்துள்ளன. இது சந்தேகத்துக்கு இடமின்றி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
ஆன்லைனிலோ அல்லது ஆஃப்லைனிலோ எந்தவொரு அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்படுவதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும் ஒரு நபரின் இனம் அல்லது மதத்தில் வேரூன்றியிருக்கும் அச்சுறுத்தல் அல்லது வன்முறைக்கான தூண்டுதலையும் நிராகரிக்கிறேன்.
எல்லா மனிதர்களும் பிறப்பின் அடிப்படையில், சுதந்திரத்திலும் கண்ணியத்திலும் உரிமைகளிலும் சமமானவர்கள்’ என்ற மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தின் முதல் வரியை நான் நினைவு கூர்கிறேன்.
வெறுப்புப் பேச்சுகள் வலிமிகுந்த காயங்களை ஆழமாக்குவது மட்டுமின்றி மோதல்களையும், புரிதலின்மைகளையும் தீர்க்கமுடியாது என்கிற அவநம்பிக்கையின் சுழற்சியையும் தூண்டுகிறது. ஆக்கபூர்வமான உரையாடல்களால் மட்டுமே, அனைத்து மக்களிடையே நல்லிணக்கம், பரஸ்பர புரிதல் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்த முடியும்.
எனவே, வெறுப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்” இவ்வாறு டென்னிஸ் பிரான்சிஸ் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.