World

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம்: 24 மணி நேரத்தில் 117 குழந்தைகள் பலி!

 

காசாவின் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜபாலியா அகதிகள் முகாம் அருகில் உள்ள அல் ஷுஹாபா பகுதியில் இருந்த கட்டடத்தின் மீதான இந்தத் தாக்குதலின்போது அருகிலுள்ள கட்டடங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 117 குழந்தைகள் உட்பட 266 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மிகவும் தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் – ஹமாஸ் போர் 17 ஆவது நாளை எட்டியுள்ளது.அடுத்தக் கட்டமாக வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது.

எல்லையில் தனது துருப்புகளை இஸ்ரேல் குவித்து வருகிறது. முன்னதாக இஸ்ரேல் காசா மீது கடந்த ஞாயிற்றுக்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டருந்தது.

இந்த நிலையில் லெபனானில் உள்ள இரண்டு ஹிஸ்புல்லா நிலைகளின் மீது இன்று அதிகாலையில் தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தாக்குதல் குறித்த விபரங்களைத் தெரிவிக்காமல் தங்களின் வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று மாத்திரம் ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறுகையில், இந்தப் போரில் ஹிஸ்புல்லாக்கள் இணைவார்களேயானால் அது இரண்டாவது லெபனான் போருக்கு வழிவகுக்கும். அவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய தவறினை செய்கிறார்கள் என்று எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடப்பாளர் ஜோனாதன் கான்ரிகஸ் கருத்து தெரிவிக்கையில், ஹிஸ்புல்லாக்கள் மிகவும் அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறார்கள். அவர்கள் நிலைமையினை மேலும் தீவிரமாக்குகிறார்கள். நாங்கள் நாளுக்கு நாள் அதிகமான தாக்குதல்களைச் சந்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரானின் உயர் தூதரக அதிகாரி ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன் கருத்து தெரிவிக்கையில், இஸ்ரேலும், அமெரிக்காவும் காசா மீதான இனப்படுகொலைத் தாக்குதலை நிறுத்தாவிட்டால் அந்தப் பிராந்தியம் கட்டுப்பாட்டை மீறியதாக மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார்.

இதனிடையே நடைபெற்றுவரும் போர் சூழல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தனது மேற்கத்திய நட்பு நாடுகளான பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார். அப்போது இஸ்ரேலுக்கான தங்களின் ஆதரவையும், தீவிரவாதத்துக்கு எதிராக தன்னைத் தற்காத்துக்கொள்ளும் இஸ்ரேலுக்கான உரிமையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading