பெண்ணை போலி திருமணம் செய்து ஏமாற்றினாரா ஆசாத் மௌலானா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் “செனல் 4” ஆவணப்படத்தின் முக்கிய சாட்சியான ஆசாத் மௌலானா மீது வழக்கு தாக்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆசாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக தெரிவித்தே குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இன்று(12) கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த முறைப்பாட்டில் “முதல் திருமணத்தை மறைத்து போலியான ஆவணங்களை சமர்ப்பித்து தன்னை மறுமணம் செய்தார். பின்னர் மட்டக்களப்பு தனியார் விருந்தினர் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அங்கு சில நாட்கள் தங்க வைத்து குடும்பம் நடாத்தினார். அதன்பின்னர் தன்னை ஏமாற்றி தலைமைறைவாகி உள்ளார்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் “செனல் 4”ஆவணப்படத்தின் முக்கிய சாட்சியாக ஆசாத் மௌலானா காணொளிகளில் தென்பட்டதன் பின்னரே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி திருமணம் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் திகதியன்று இறக்காமம் பள்ளிவாசலில் நடைபெற்றது. எனினும் இறக்காமம் பள்ளிவாசல் குறித்த திருமணத்தை மறுத்துள்ளதுடன், எமது பள்ளிவாசல் ஆவணங்கள் போலியாக தயார் செய்யப்பட்டு இம்மோசடி திருமணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிள்ளையானுடன் நீண்டகாலம் நெருக்கமாக இருந்து வந்த ஆசாத் மௌலானா, 2022ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது அவர் சுவிஸ்ரலாந்தில் தஞ்சமடைந்துள்ளார்.
ஆசாத் மௌலானா வெளிநாடொன்றில் தஞ்சமடைந்துள்ள நிலையில் வெளிநாட்டு தஞ்சம் மறுக்கப்பட்டு நாடு கடத்தப்படும் நிலை காணப்படுவதால் இவ்வழக்கினை மேலும் வலுவாக்குவதற்கு மூன்றாம் தரப்பினர் சதி முயற்சியே இதுவெனவும் தெரிவிக்கப்படுகின்றது.