சர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நாவிடம் நேரில் கோருவேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ‘செனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நாவிடம் நேரில் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
செனல் – 4 தொடர்பில் விசாரணை அவசியம் என ஐ.நாவும் வலியுறுத்தியுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் ஐநாவின் இலங்கை பிரதிநிதியை சந்தித்து, சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
4 வருடங்களாக என்னை இலக்கு வைத்துதான் தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால் நடந்தது என்ன என்பது சனல் – 4 காணொளி ஊடாக தெளிவாகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த வாரம் பிரித்தானியாவை தளமாக கொண்ட செனல் 4 ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் திட்டமிட்ட வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.
எனினும், இந்த ஆவணப்படம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பலரும் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.