நடிகன் என்ற கிரீடம் நொறுங்கி விழுந்த கணம்!
நடிகர் மம்முட்டி தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும் “காழ்ச்சப்பாடு” என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார்.
அதனை “மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்” என்ற பெயரில் கே.வி.ஷைலஜா தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.
இந்த புத்தகத்தில் 23 கட்டுரைகள் இருக்கின்றது. அனைத்து கட்டுரைகளும் நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையிலே அமைந்துள்ளது.
இதனுள் ஒட்டுமொத்த சமூகச் சிந்தனைகள் அடங்கிய தத்துவார்த்தமான படிநிலைகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு கட்டுரை “வேகத்தின் விலை”.
கார் ஓட்டுவது அவருக்கு பிடித்தமான விஷயம். அதுவும் வேகமாக கட்டுப்பாடுடன் ஓட்டுவது அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
சென்னையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் போது பெரும்பாலும் அவரே தன்னுடைய காரை ஓட்டிச் செல்வார்.
ஒருமுறை ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் கோழிக்கோட்டிலிருந்து மஞ்ஞேரிக்கு சென்றுகொண்டிருக்கும் போது நகர எல்லைத் தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் அவருடைய கார் நுழைகிறது.
பனிப் படர்ந்த இரவில் ஒலி நாடாவை ஒலிக்க விட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தார். நகக்கீறலையொத்த நிலா அவரை துரத்திக் கொண்டே வந்தது. இருபுறமும் வாகை மரங்களுடன் இருந்த சாலையின் வழியாக சென்றுகொண்டிருந்தது.
இனி அவரின் மொழியில் வாசியுங்கள்.
அந்த அடர் இருளில் ஒரு மெல்லிய எளிய உருவம். பார்க்க ஒடிசலான வயசான முதியவர் ஒருவர் கையில் கை விளக்கு தலையில் முக்காடுடன் கை நீட்டி மின்னல் வேகத்தில் வழிமறித்தார்.
இடது பக்கம் ஒடித்து மீண்டும் வலப்பக்கம் சாய்ப்பதற்கு இடையில் வண்டி நிலை குறைந்தது.
இரவின் நிசப்தத்தில் பிரேக் அடித்தவுடன் ஏற்பட்ட அலரல் ஒலி எங்கோ இருளில் மோதி மீண்டும் என்னை வந்தடைந்தது.
வண்டியை கட்டுக்குள் கொண்டு கோபத்துடன் ரிவர்ஸ் எடுத்தேன்.
அந்த முதியவர் எதுவும் அறியாதது போல என் அருகில் வந்தார். அருகில் இருந்த ஒரு கல்மேடையில் ஒரு பெண் சுருண்டு படுத்து இருப்பதை அப்போது தான் பார்த்தேன்.
கைகூப்பியபடி முதியவர் பேச ஆரம்பித்தார்.
“பாப்பாவுக்கு பிரசவ நேரம். ஆஸ்பத்திரிக்கு போக நீங்க தான் உதவனும். கடவுள் உங்களை நல்ல இடத்துக்கு கொண்டு சேர்ப்பார்.”
திடீரென காருக்கு குறுக்கே வந்தபோது ஏற்பட்ட கோபமெல்லாம் சட்டென்று குறைந்து போனது.
இரவு இரண்டு மணிக்கு எந்த வாகனத்தையும் தேடிப்பிடிக்க முடியாது என்பதால் நான் அவர்களை என் வண்டியில் ஏற்றிக் கொண்டேன்.
அவள் அவருடைய பேத்தி அவள் என்பது தொடர் உரையாடலில் புரிந்து கொண்டேன். நான் மீண்டும் வேகம் எடுத்தேன் அரசு மருத்துவமனை வராண்டாவில் வண்டியை நிறுத்திய சத்தம் கேட்டு அவசரப் பிரிவில் இருந்து 4 ஊழியர்கள் ஓடி வந்தார்கள்.
அவசரத்தில் வந்த அவர்கள் என்னை யாரென்று அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. அவர்கள் அந்தப் பெண்ணை கைத்தாங்கலாக வண்டியிலிருந்து அழைத்துச் சென்றபின் தான் சமாதானமும் நிம்மதியும் என் முகத்தில்.
மெல்லிய புன்னகையுடன் நான் வண்டியை திருப்பிக் கொண்டிருக்கும் போது மீண்டும் முதியவர் அருகில் ஓடி வந்தார்.
ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்கீங்க. கடவுள் உங்களுக்கு ரொம்ப பெரிய உதவி செய்வார். கடவுள் தான் உங்களை எங்க கிட்ட கொண்டு சேர்த்து இருக்கார்.
உங்க பேர் என்ன என்று கேட்டார். மம்முட்டி என்ற பேரை கேட்டபோது கூட என்னை அவருக்கு தெரியவில்லை. எனது நடிகன் என்ற கிரீடமும் நொறுங்கி விழுந்த கணம் அது.
என்ன வேலை செய்றீங்க என்று கேட்டேன்.
அவர் வேட்டியின் மடிப்பில் இருந்து கசங்கிய ஒரு நோட்டு தாளை எடுத்து “இத டீ செலவுக்கு வச்சிக்க” என்று என்னிடம் தந்தார்.
என் மனத் திருப்திக்காக மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு என் கேள்விக்கு பதில் சொல்லாமல் விறுவென நடந்து மருத்துவமனைக்கு சென்று மறைந்தார்.
அவர் கொடுத்துச் சென்றது மடித்து வைக்கப்பட்ட ஒரு இரண்டு ரூபாய் தாள். அதை எதற்காக தந்தார் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை.
ஒருவேளை இரண்டு பேருக்குமான கட்டணமாக இருக்கும். என்னுடைய டிரைவிங் வேகத்தால் ஒரு ஜீவனை காப்பாற்றவும் புதியதொரு ஜீவனை இந்த பூவுலகில் கொண்டு வரவும் செய்த சிறிய உதவிக்காக அதிக சந்தோஷப்பட்டேன்.
நான் இது வரை நான்கு தேசிய விருது வாங்கி விட்டேன். ஆனாலும் அதை விட இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய் அந்த ரெண்டு ரூபாய் நோட்டை நான் பாதுகாத்து வருகிறேன்.
சிலநேரங்களில் நாம் செய்யும் சிறிய உதவிகள் கிடைப்பவர்களுக்கு பெரிய உதவியாகக் கூட இருக்கும். அதன் பலனாக பூக்கும் மகிழ்ச்சி பூக்கள் வாழ்க்கை பாதை முழுவதும் வெளிச்சம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
‘மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்’ நூலிலிருந்து ஒரு பகுதி.