செனல் 4 தொலைக்காட்சி 2 ஆவது வீடியோ வௌியானது!

பிரித்தானியாவின் சேனல் 4 நேற்று (05) இரவு இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான 50 நிமிடங்கள் நிகழ்ச்சியில், பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா  பிரதானமாகத் தகவல்களை சமர்ப்பித்துள்ளார்.

இந்த நாட்டில் நிதிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர் அசாத் மௌலானா.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நீண்ட விமர்சனத்தை முன்வைத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட்டுள்ளன.

காணொளியில் பெரும்பாலான பகுதிகள்  லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்,  அசாத் மௌலானாவும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.

பிள்ளையான் குழுவுடன் இணைந்து ட்ரிபொலி பிளட்டூன் என்ற ஆயுதக் கும்பலை அன்றைய அரசாங்கம் உருவாக்கி, ஊடகங்களை அடக்குவதற்கும் எதிரணியினரை மௌனமாக்குவதற்கும் பயன்படுத்தியதாக அசாத் மௌலானா இதன்போது தெரிவித்திருந்தார்.

இதன்போது,  ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல்களுக்காக கானியா பிரான்சிஸ் , வௌ்ளை வேன் குற்றச்சாட்டின் போது நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி நிஷாந்த சில்வா, வௌ்ளை கொடி வழக்கின் சாட்சியாளராக இருந்த ஊடகவியலாளர் பிரட்ரிக்கா ஜேன்ஸ், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்  லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பிற நபர்கள் சிலரின் வாக்குமூலங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்த காணொளியில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  அம்பிகா சத்குணநாதன் மற்றும் முன்னாள் இராஜதந்திர அதிகாரி சரத் கொங்கஹகே ஆகியோரின் வாக்குமூலங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிள்ளையானின் அறிவுறுத்தலின் பேரில் 2018 ஜனவரி மாதம் புத்தளம் கரடிப்புல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்களுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த சுரேஷ் சலேவுக்கும்   இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் இதில்  சஹ்ரான் உள்ளிட்ட ஜமாஅத் உறுப்பினர்கள் 6 பேர்  கலந்து கொண்டதாக அசாத் மௌலானா தெரிவித்தார்.

அந்த சந்திப்பின் முடிவில் தன்னிடம் வந்த சுரேஷ் சலே, ராஜபக்ச ஆட்சிக்கு வர நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சேனல் 4  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பேஸ்மென்ட் பிலிமிஸ் நிறுவனத்தின் ‘பென் டி பெயார்’, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது நான்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கேள்விகளுக்கு பதில் கடிதம் அனுப்பி குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நிலையில்,  சேனல் 4 காணொளியில் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, இது தொடர்பான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் கூறப்படும் சந்திப்பின் போது தாம் மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் ஈஸ்டர் தாக்குதலின் போது இந்தியாவில் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல் தொடர்புடைய அறிக்கை நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பென் டி பியரிடம் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *