உலகின் முதல் தானியங்கி மருந்து விநியோக இயந்திரத்தை அறிமுகம் செய்த சவுதி!

 

(காலித் ரிஸ்வான் )

மருந்துகளை விநியோகிக்கும் உலகின் முதல் தானியங்கி இயந்திரத்தை, சவூதி அரேபியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள மன்னர் சல்மான் இராணுவ மருத்துவமனை பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் (MODHS) வெற்றிகரமாக அமைத்துள்ளது.

தொழில்நுட்பத் துறையில் சவூதி அரேபிய நிகழ்த்திய தொடர் சாதனைப் பட்டியலில் இந்த அதி நவீன கண்டுபிடிப்பும் இணைகிறது. உலக மக்களுக்கான ஒரு புது அனுபவமாக அமைகின்ற இந்த அமைப்பானது மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை எளிதாக்கும் வகையில், நோயாளிகள் மருத்துவமனையை நாடுவதன் அவசியமின்றி தானியங்கி முறையில் மருந்துகளை வழங்குகிறது.

இந்த இயந்திரம் மருந்துகளில் பரிந்துரைக்கப்பட்ட பார்கோட் (Barcode), பயனாளிகள் பயன்படுத்துவதற்கான தொடர்புத் திரை, ரோபோக்களை பயன்படுத்திய ஒரு சிறப்பு இயக்க முறைமை மற்றும் மருந்துச் சீட்டின் தயார்நிலையைப் பயனாளிக்குத் தெரிவிப்பதற்கான செய்தி தளம் போன்றவற்றை கையாளும் பணி அமைப்பைக் கொண்டுள்ளது.

24 மணி நேர சேவையை வழங்கும் இந்த இயந்திரம் 102-700 மருந்து வகைகளை சேமிக்கும் திறன் கொண்டது. ஒவ்வொரு மருந்து வகைகளுக்குக்கும் ஏற்றாற்போல் அவற்றை சேதம் மற்றும் திருட்டிலிருந்தை பாதுகாப்பதற்கான உயர் தொழிநுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டு இவ்வியந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு குறிப்பிட்ட மருந்துகளை தினசரி, மாதாந்தம் அல்லது வருடாந்த அடிப்படையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான தகவல்களையும் இவ்வியந்திரம் வழங்குகிறது.

சவூதி அரேபியாவின் மருத்துவமனை பாமசி துறைக்கான இயக்குநர் அல் அதாவி இவ்வியந்திரத்தின் இயக்கம் தொடர்பாக பின்வருமாறு விளக்கினார்:

பயனாளர்கள் மருந்துச் சீட்டில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்து தேவையான தகவல்களை இயந்திரத்தில் உள்ள திரையில் உள்ளீடு செய்ய வேண்டும். இலத்திரனியல் ஸ்கேனிங் முறையைப் பயன்படுத்தி பயனாளியின் மருந்துச் சீட்டுத் தரவைச் சரிபார்க்கும் நேரத்தில் பயனாளிகள் தங்கள் இருப்பிடத்திற்கு மிக அருகில் உள்ள விநியோக இயந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவர். மருந்துச் சீட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் பயனாளிகளுக்கான பிரத்தியேக குறியீட்டு இலக்கம், இயந்திரத்தின் இருப்பிடம் போன்ற சில தகவல்களைக் கொண்ட SMS ஒன்றைப் பயனர்கள் பெறுவார்கள், அவர்கள் 48 மணி நேரத்திற்குள் தங்கள் மருத்துகளை பெற்றுக் கொள்ளலாம். மருந்தைப் பெறுவதற்கு முன், பயனாளிகள் தங்களது முக்கிய தகவல்கள் மற்றும் அவர்களின் தொலைபேசிகளுக்கு வழங்கப்பட்ட சரிபார்ப்பு எண்ணை இயந்திரத்தின் திரையில் உள்ளிட வேண்டும்.

மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டிய மருந்துகளைத் தவிர்த்து, அனைத்து மருந்துப் பொருட்களையும் இயந்திரம் விநியோகிக்கிறது, மேலும் நோயாளிகள் பாமசிகளில் மருந்துகளைப் பெறுவதற்கு செலவாகும் பல மணி நேரத்தை 1 நிமிடத்திற்கும் குறைவாக இது மாற்றியிருக்கிறது என்றும் இந்த சேவை, மக்களின் தேவைகளை இலகுவாக்குதல் குறித்த அந்நாட்டுத் தலைமையின் அறிவார்ந்த அக்கறையை எடுத்துக்காட்டுகிறது என்றும் அல் அதாவி மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *