இலங்கை கிரிக்கெட் அணி வீரரைப் பாராட்டிய அஸ்வின்!

இலங்கை அணியின் இளம் கிரிக்கெட் வீரர் மதீஷ பதிரனாவின் பந்து வீச்சுத் திறனைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17-ம் திகதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின.

இதில் இலங்கை வீரர் மதீஷ பதிரனா, 7.4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதன் மூலம் வங்கதேச அணியை 164 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி ஆட்டமிழக்கச் செய்தது இலங்கை அணி. 20 வயதான பதிரனா, ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 14 ஐபிஎல் போட்டியில் விளையாடி 21 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். ஐபிஎல் 2023 சீசனில் இவர் 19 விக்கெட்களை வீழ்த்தி கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஐபிஎல் 2023 சீசனில் பதிரனாவின் செயல்பாடு பாராட்டும் வகையில் இருந்தது. ஆனால், இன்றைய போட்டியில் அவரது செயல்பாடு கடந்த 12 மாதங்களில் அவர் கண்டுள்ள செயல்திறன் மேம்பாட்டை சுட்டிக் காட்டுகிறது” என அஸ்வின் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *