திருமலையில் புதிய மதவழிபாட்டுத் தலங்களை அமைக்க ரணில் மறுப்பு
திருகோணமலை மாவட்டத்தில் புதிய மத வழிபாட்டுத் தலங்களை எதிர்காலத்தில் நிர்மாணிக்கும்போது, கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்குமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளார்.
அதேநேரம் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை மாவட்டத்தை பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் இன்று திருகோணமலை விமானப்படை தளத்தில் நடைபெற்றது.
சிறிலங்கா அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் இந்தியாவின் உதவியுடன் வலுசக்தி, போக்குவரத்து, துறை முகம், கப்பற்துறை, விமானம் , கைத்தொழில் மற்றும் சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யும் இலக்குடன் கூடிய வேலைத்திட்டம் விரைவில் திருகோணமலையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச காணிகள் மற்றும் மகாவலி காணிகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், 2019 முதல் 2023 ஆண்டு காலப்பகுதியில் அந்தக் காணிகளை வழங்குதல் குறித்து அறிக்கையொன்றை தமக்கு வழங்குமாறும் அதிபர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
அபிவிருத்திச் செயன்முறையில் காணிகள் முதன்மையான காரணி எனவும், அதில் சரியான முகாமைத்துவத்துடன் பேணப்படாவிட்டால், எதிர்பார்க்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், போட்டிபோட்டு மத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதை நிறுத்துமாறும், எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும்போது, ஆளுநர், மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டுமெனவும் அதிபர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை சர்பானா ஜூரோன் நிறுவனம் தயாரித்துள்ளதாகவும் அந்தத் திட்டத்தினை அடிப்படையாகக்கொண்டு திருகோணமலையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் ரணில் கூறினார்.
அபிவிருத்தித் திட்டத்தின் பிரகாரம் வெருகல் முதல் பானம, குமன கடற்கரையை அபிவிருத்தி செய்வதற்கும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் கடற்றொழில், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஏற்படும் இந்த புதிய முன்னேற்றத்துடன் திருகோணமலை நகரத்தை ஒரு முக்கிய வர்த்தக நகரமாக மாற்ற வேண்டும் என்றும் திருகோணமலைக்குப் பின்னர் மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் இந்த அபிவிருத்தியைக் கொண்டு செல்வதே தமது நோக்கம் என்றும் கூறினார்.
குறிப்பாக காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறிய அதிபர், மகாவலி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 1985 திட்டத்தின் பிரகாரம் காணிகளை பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் சில காணிகள் அமைச்சரவையின் அனுமதியின்றி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.