குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது, இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் மற்றும் கான்வே சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

ருதுராஜ் 44 பந்துகளில் 60 ஓட்டங்களும், கான்வே 34 பந்துகளில் 40 ஓட்டங்களும் குவித்தனர், இருப்பினும் முதல் பேட்டிங்கின் இரண்டாவது பாதியில் குஜராத் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சென்னை அணியின் ஓட்டங்கள் குவிக்கும் வேகம் நிதானமானது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

குஜராத் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை முகமது சமி 2 விக்கெட்டுகளையும், மோகித் சர்மா 2 விக்கெட்டுகளையும் சாய்த்து இருந்தனர்.

இறுதிப்போட்டி முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்

இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா 12 ஓட்டங்களுடனும், பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 பந்துகளில் 42 ஓட்டங்களை குவித்து இருந்த போது தீபக் சாஹர் வீசிய பந்தில் கான்வே-யிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஆனால் இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் யாரும் சிறப்பான ஓட்டங்களை குவிக்க தவறியதால் குஜராத் அணி சற்று தடுமாற தொடங்கியது. இந்நிலையில் களமிறங்கிய ரஷித் கான் சென்னை அணியின் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்ட ஆட்டத்தில் மீண்டும் சூடு கிளப்பினார்.

அவரும் 16 பந்துகளில் 30 ஓட்டங்கள் குவித்து இருந்த போது தேஷ்பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

இதனால் 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன் ஐபிஎல் தொடரில் 10 வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *