டெல்லியை வீழ்த்தியது சென்னை!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிருத்விஷா தொடக்கத்திலேயே 5 ரன்களுடன் கிளம்பினார். வழக்கம் போல டேவிட் வார்னர் நங்கூரமிட்டு ஆட, மறுபுறம் வந்த பிலிப் சால்ட் 3 ரன்களிலும், ரிலீ ரோசோவ் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர். தீபக் சாஹர் வீசிய 5ஆவது ஓவரில் மட்டும் இந்த இரண்டு விக்கெட்டுகளை இழந்தது டெல்லி.

யாஷ் துள் 13 ரன்களில் வெளியேற, அக்சர் படேல் 15 ரன்களிலும், அமன் ஹக்கீம் கான் 7 ரன்களிலும் விக்கெட்டாகி டெல்லி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினர். டேவிட் வார்னர் மட்டும் சிக்சர்களை விளாசி ரன்களை ஒருபுறம் குவிக்க, டெல்லி ரசிகர்கள் ‘தோற்றாலும் டேவிட் வார்னரின் போராட்டத்தால் தோற்றோம்’ என்று வரலாறு எழுதட்டும்’ என ஆனந்த கண்ணீரில் ஆறுதல் அடைந்தனர்.

ஓவர் செல்லச் செல்ல டெல்லியின் நிலை மோசமடைய 58 பந்துகளில் 86 ரன்களை குவித்த ‘மீட்பர்’ டேவிட் வார்னரும் அவுட்டாக, 19 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 146 ரன்களை சேர்த்திருந்தது. 6 பந்துகளில் 78 ரன்கள் என்ற நிலையில் லலித் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே களத்தில் இருந்தனர். லிலித் யாதவ் 6 ரன்களில் நடையைக் கட்டியதும் அவருக்கு பதிலாக வந்த குல்தீப் யாதவ் பிரிய மனமில்லாமல் அடுத்த பந்தே டக் அவுட்டாகி திரும்ப, அவரை பின்தொடர்ந்து வந்த சேதன் சகாரியாவும் சேம் டக் அவுட்டாக 20 ஓவர் முடிய டெல்லியின் 10 விக்கெட்டுகளும் சரியாக முடிந்தன.

இதன் மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சிஎஸ்கே தரப்பில் தீபக் சாஹர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்‌ஷனா, மதீஷ பத்திரனா தலா 2 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸ்: டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்வாட்டும், டெவோன் கான்வேவும் இணைந்து டெல்லியைப் பந்தாடினர். 12-வது ஓவரில் மட்டும் தொடர்ந்து 3 சிக்சர்களை விளாசி ருதுராஜ் அதிரடி காட்டினார்.

14 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி பார்த்துக்கொண்ட இந்த இணையை 15-ஆவது ஓவரில் சேதன் சகாரியா பிரித்தார். 7 சிக்சர்களை விளாசி வெளுத்து வாங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 79 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த சிவம் தூபே வந்த வேகத்தில் 3 சிக்ஸ்களை பறக்க விட்டு 22 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவோன் கான்வே 52 பந்துகளில் 87 ரன்களை குவித்து சென்சூரி அடிக்காமல் போனது ஏமாற்றம்.

தொடர்ந்து வந்த ஜடேஜா அடித்த சிக்ஸ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இறுதி பந்தில் ஸ்ட்ரைக்கிலிருந்த தோனி தூக்கி அடிக்க சிக்ஸ் மிஸ்ஸானது. அத்துடன் அது ஃப்ரீ ஹிட்டானதால் ரசிகர்கள் தோனியின் சிக்ஸுக்காக காத்திருந்த நிலையில், சிங்கிளுடன் முடிந்த இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 223 ரன்களை குவித்து 224 என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டெல்லி அணி தரப்பில் சேதன் சகாரியா, கலீல் அஹமத், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *