திருடர்களுக்கும் சவால் விடும் திண்டுக்கல் பூட்டுகள்!

வீடு பூட்டி இருக்கிறது. இரவு வேளையில் யாரோ பூட்டைத் திறக்க முனைந்து கொண்டிருக்கிறார்கள். எப்படியோத் துருவித்துருவி முயற்சித்தும் முடியாத நிலை. வியர்த்துப் போய் விடுகிறது.

அதற்கிடையில் சந்தடி கேட்டு சிலர் வந்து விரட்ட திருட முயன்ற நபர் பிடிபடுகிறான்.

திண்டுக்கல்லில் நடந்த சம்பவத்தைச் சொல்லிவிட்டு “திருடுகிறவனுக்குக் கூட சவால் விடுகிற மாதிரி பூட்டுன்னா… திண்டுக்கல் பூட்டுதான்… என்கிறார் நம்மிடம் ஒரு திண்டுக்கல்வாசி.

கேட்பதற்குச் சுவாரசியமாக இருந்தாலும், மிகைப்படுத்துகிறாரோ என்று தோன்றவும் செய்தது. திண்டுக்கலுக்குப் போய் வந்த பிறகு அப்படிச் சந்தேகப்பட முடியவில்லை.

விதவிதமான நவீனமான பூட்டுக்கள் மார்க்கெட்டுக்கு வந்து விட்டாலும் திண்டுக்கல் பூட்டுகளுக்கு தனி மவுசு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

திண்டுக்கல்லை அடுத்துள்ள நல்லாம்பட்டி, யாகப்பன்பட்டி, பாறைப்பட்டி, புதூர், அனுமந்த நகர் என்று பல பகுதிகளிலும் பூட்டுத் தயாரிப்பது ஒரு குடிசை தொழில்.

திண்டுக்கல் பூட்டில் அப்படி என்ன விஷேசம்?

இங்கு விதவிதமான பூக்கள் எல்லாம் உண்டு. 4 சாவிகள் போட்டால் மட்டுமே திறக்கக்கூடிய பூட்டுகள்; கள்ளச் சாவி போட்டால் கையைக் கவ்வுகிற மாதிரியான பூட்டுகள்; இன்றும் தவறாகத் திறக்க முயற்சித்தால் ஸ்பிரிங் துணையுடன் கத்தி பாயும் வசதி கொண்ட பூட்டுகள் என்று எத்தனை வகைகள் இருந்தன.

இங்கு மாங்காய் சைஸ் பூட்டுகள் பிரசித்தம். அதில் பக்கவாட்டில் ஒரு ‘பட்டன்’ இருக்கும். அதை அழுத்தினால் தான் திறக்க முடியும்” என்று பெருமையுடன் சொல்கிறார், திண்டுக்கலில் சந்துக் கடைத் தெருவில் பூட்டு விற்பனைக் கடை வைத்திருக்கும் சந்திரசேகரன்.

“மாங்காய்ப் பூட்டு, கதவுக்கான சதுர சைஸ் பூட்டு, அலமாரி பூட்டு, டிராயர் பூட்டு என்று பலவிதமான பூட்டுக்கள் தயாராகின்றன. இதில் கதவுடன் பொருத்தக் கூடிய மணி பூட்டு இங்கு மட்டுமே தயாராகிறது.

எட்டு இன்ச் வரை உள்ள இந்தப்  பூட்டு  ஒவ்வொருமுறை சாவியைச் சுழற்றும் போதும் மணிச் சத்தம் வரும். 5 லிருந்து 10 முறை மணியடிக்கும் பூட்டுகளும் உண்டு. பித்தளைப் பூட்டுகளும், குரோமியப் பூச்சு பூசின பூட்டுகளும் அதிகம் விற்பனையாகின்றன.

மாங்காய்ப் பூட்டுகளில் ஆறிலிருந்து எட்டு லீவர்கள் இருப்பதால் பாதுகாப்புத் தன்மை கூடுதல்” என்கிறார் இவர்.

வரிசையாக உள்ள இந்தப் பூட்டு, மொத்த விற்பனைக் கடைகளில் இருந்து தமிழகம் முழுவதற்கும் கேரளாவிற்கும் விநியோகம் ஆகின்றன திண்டுக்கல் பூட்டுக்கள்.

திண்டுக்கல்லில் உள்ள நாகல் நகரில் பூட்டுகள் செய்யும் பட்டறைகள் நிரம்பியிருக்கின்றன. “ஒரு நாளைக்கு 40 பூட்டுகள் தயார் பண்ணுகிறோம்.

பூட்டின் ஒவ்வொரு பாகத்தைத் தயாரிக்கவும் இங்கு தனிப்பட்டறைகள்; பிறகு இணைத்து முழுப் பூட்டாக்கத் தனிப்பட்டறை. மிகவும் கவனத்துடன் செய்யவேண்டிய தொழில்” என்கிறார் இங்கு பட்டறை வைத்திருக்கும் பிச்சைமணி.

அனுமந்த நகரில் நாம் சந்தித்த ஆதிமூலத்திற்கு உடம்பெல்லாம் தளர்ந்து போய்விட்டது. இருந்தாலும் இன்னமும் பூட்டுத் தயாரிக்கிறார். கைகளில் இருக்கிற தொழில் நுணுக்கம் தொலைந்து போய் விடவில்லை.

நாம் போனபோது கை அகல பூட்டுத் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் பூட்டில் ஏழு லீவர்கள். பூட்டின் சாவி போடும் இடத்தில் சின்னதான ஸ்கிரீன் மாதிரித் தகடு.

அந்தத் தகட்டைச் சுழற்றி ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தினால் தான் ஏழு லீவர்களும் பொருத்தி பூட்டு திறக்கிறது.

அபூர்வமாகி வரும் இந்தப் பூட்டை அவ்வப்போது வரும் ஆர்டர்களின் பேரில் தயாரிக்கிறார். “பத்து வயதிலிருந்தே இதுதான் தொழில்.

இங்கு தயாரிக்கப்படும் சதுர்ப்பூட்டை (கதவில் பாதிக்கக்கூடியது) நல்ல கணத்துடனும், நுணுக்கத்துடனும் தயாரிப்பதால் கள்ளச்சாவி போட்டுத் திறக்க முடியாது.

மிஷின்களில் இந்த அளவு நுணுக்கம் கிடையாது. தொழில்நுட்பம் கிடையாது. இப்போது என்னை மாதிரி சில குறிப்பிட்ட பூட்டுகளைச் செய்கிறவர்கள் குறைந்து கொண்டு வருகிறார்கள்.

இப்படியே போனால் பிரசித்தியான திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பு இந்தத் தலைமுறையோடு நின்று போனாலும் போய்விடும்” என்கிறார் ஆதிமூலம்.

“முன்பு தொழிலுக்கு ‘டிமாண்ட்’ இருந்தது. கடைக்காரர்கள் அட்வான்ஸ் கொடுத்து பூட்டு வாங்கிக்கொண்டு போவார்கள். 2000 பேர் வரை தொழில் புரிந்த பூட்டுத் தொழில், இன்று 500 பேர்களுக்குள் அடங்கிவிட்டது.

நல்ல தொழில் நுணுக்கத்துடன் எவ்வளவுதான் ஈடுபாட்டுடன் தொழிலாளி இதில் வேலை பார்த்தாலும் கிடைப்பது 20 ரூபாயிலிருந்து 25-க்குள் என்கிறபோது, எப்படி இந்தத் தொழிலை தொடர்ந்து செய்வார்கள்?” என்கிறார் இன்னொரு பூட்டுத் தொழிலில் இருப்பவரான வெங்கடசாமி.

திண்டுக்கல் பூட்டுத் தொழிலைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இங்கேயே அரசு சார்பில் தனியாக பூட்டுத் தயாரிப்புக்கென்று சங்கம் ஆரம்பித்து, பூட்டுத் தயாரிப்பு நடக்கிறது.

கெட்டியான பூட்டுத் தயாரிப்பில் இருப்பதால் என்னவோ, சங்கம் சார்ந்த அரசு அதிகாரிகள் லேசில் வாயைத் திறப்பதாக இல்லை(!). பூட்டுத் தொழிலின் இன்னொரு வளர்ச்சியாக இங்கு தயாராகின்றவை இரும்புப் பெட்டிகள்.

இரும்பில் கைப்பிடியுடன் பல வியாபார ஸ்தலங்களில் பார்த்திருப்பீர்களே. அதே இரும்புப் பெட்டிதான். சின்ன சைஸில் இருந்து ஆளுயர சைஸ் வரை வகைவகையான பெட்டிகள்.

இவற்றை நகர்த்தவே இரண்டு, மூன்று ஆட்கள் தேவைப்படுகிற மாதிரியான கனம். அந்தக் கால டிசைனுடனும், வடிவமைப்புடனும் இன்னும் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன இந்தப் பெட்டிகள்.

இதற்கென்றே பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் ஒன்றான ரத்னா அண்ட் கோ-வின் உரிமையாளரான ஆர்.பாலசுப்பிரமணியன் “இதுவும் குடிசைத்தொழிலுடன் இணைந்தது தான்” என்கிறார்.

இரும்புப் பெட்டி ஒன்று தயாராக 25 நாட்களுக்கு மேலாகிவிடுகிறது. இரும்புப் பெட்டியில் எங்கும் வெல்டிங் வைப்பதில்லை. ‘ரிவிட்’ மூலம் இணைத்துத் தயாரிப்பதால் வலு கூடுதல் என்கிறார்கள்.

இரும்புப் பெட்டி சாதாரணமாக 200 கிலோவில் இருந்து 400 கிலோ வரையிலான கனத்துடன் இருக்கிறது. கோவில்களுக்கான கனத்த பெட்டி வடிவிலான உண்டியல்களும் இங்கு தயாராகின்றன.

பழனி, கன்னியாகுமரி, சமயபுரம் மாரியம்மன் கோவில், சுவாமிமலை, திருத்தணி, மருதமலை, திருப்பரங்குன்றம் என்று பல கோவில்களுக்கும் இங்கிருந்து உண்டியல் தயாராகிப் போயிருக்கின்றன.

கேரள சர்ச்களுக்கும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோவில்களுக்கும் பிரயாணப்பட்டுக் கொண்டிருக்கின்றன திண்டுக்கல்லில் தயாரான இந்த கனத்த உண்டியல்கள்.

இதுதவிர நல்ல கனத்துடனும் நவீனமான தோற்றத்துடனும் தயாராகின்றன  இந்த ‘சேப்டி லாக்கர்கள்’.  “இந்த லாக்கர்கள் அதிக எடை இருக்கிறபடி தயார் செய்கிறோம்.

இம்மாதிரியான லாக்கர்களில் 7 சாவிகள் வரை உண்டு. அனைத்தையும் உபயோகித்தால் மட்டுமே திறக்கும்.

சில லாக்கரில் ஒரே பூட்டில் 4 சாவிகள் போடுகிற மாதிரி வசதி இருக்கும். இவற்றைச் சாத்தினவுடன் தானாகவே ‘லாக்’ ஆகிவிடும். இந்த லாக்கர்களைத் தூக்க முடியாது. பைப் மூலம் உருட்டிக்கொண்டு தான் போக முடியும்.

இங்கு தயாரிக்கின்ற ஒவ்வொரு லாக்கரின் பூட்டு, சாவிகளும் வேறு வேறு விதமாக இருக்கும். இதற்கு டூப்ளிகேட் சாவி கிடையாது. சாவி தொலைந்து போனால் பூட்டை உடைத்து தான் திறக்க முடியும்.

இந்த அளவு பாதுகாப்புத் தன்மை தான் திண்டுக்கல்லின் ஸ்பெஸாலிடி. பேங்குகளுக்கான பிரத்தியேகமான இரும்பு அறையையும் உருவாக்கிக் கொடுக்கிறோம்.

பீரோவுடன் இணைந்த இரும்புப் பெட்டிகளையும் தனித்த கவனத்துடன் செய்து கொடுக்கிறோம். இந்தியாவில் உள்ள உயர் தரமான கம்பெனிகளுக்கு இணையான தொழில் நேர்த்தியுடன் இங்கு தயாராகின்றன இரும்பு பெட்டிகளும், லாக்கர்களும்.

இங்கு மிஷின்கள் கிடையாது. எல்லாம் மனித உழைப்பு. பரம்பரையாக தொழில்திறன் மிக்க தொழிலாளர்கள் இங்கு இருக்கிறார்கள்.

சிவகாசியில் முக்கியமான ஒருவர் அமெரிக்காவில் இருந்து  ‘சேப்டி லாக்கர்’ வாங்கி வந்து, அதில் ஒரு பிரச்சனை. அமெரிக்காவுக்கு எழுதிக் கேட்டு பதில் வராத நிலையில் எங்களை அணுகினார்கள்.

இங்கிருக்கிற தொழிலாளர்கள் சென்று பார்த்ததும் சரியாயிற்று. இப்படி வளர்ந்த நாடுகளுக்கு இணையான தொழில்நுட்பம் இருந்தாலும், சரியான விளம்பரம் இல்லை. வசதிகள் இல்லை” என்கிறார் பாலசுப்ரமணியன்.

சிங்கப்பூர், இலங்கை வரை பிரபலமாகி இருந்த திண்டுக்கல் பூட்டுகளும், இரும்புப் பெட்டிகளும் வியாபாரப் போட்டிகள் அதிகமாகிப் போனதில் சற்றுப் பின்தங்கி விட்டன.

டெல்லிக்கு அருகில் தயாராகும் அலிகார் பூட்டுகளும், பம்பாயில் தயாராகும் காட்ரிஜ் பூட்டுகளும் இன்று விற்பனையில் முன்னணியில் இருக்கின்றபோது, திண்டுக்கல்லில் உள்ள வெவ்வேறு திறமைகளும் தொழில்நுணுக்கங்களும் நிரம்பின பாரம்பரியமிக்க பூட்டுத் தொழில் மட்டும் ஏன் நசிந்து கொண்டு வருகிறது?

– மணாவின்  ‘தமிழகத் தொழில் முகங்கள்’ (முதற்பதிப்பு-1996) நூலில் இருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *