கம்பளை யுவதியை கொலை செய்தவரின் பரபரப்பு வாக்குமூலம்?

கம்பளை பகுதியில் 22 வயதான இளம் யுவதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞரின் குரல்பதிவு என கூறப்படும் பதிவொன்று வெளியாகியுள்ளது.

இதில், தான் போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும், அதனால் தனது வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், இன்று ஒரு கொலையும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


அஹமட் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இந்த இளைஞர் பழையப்பிட்டி பகுதியில் பிறந்து வளர்ந்ததாகவும், தனது பாடசாலை காலம் முழுவதும் சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், பின்னர் போதைப்பொருளுக்கு அடிமையானதாகவும், தான் வசிக்கும் பகுதியில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை அடையாளம் காட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் மதனமோதகம் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருளுக்கு அடிமையானதாகவும் தெரிவித்துள்ளார். இன்று போதைப்பொருள் காரணமாகவே தான் கொலைகாரனாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் தினமும் ஆடுகளுக்கு புல் வெட்டச் செல்வதாகவும், தினமும் போதைப்பொருள் பயன்படுத்திய பின்னரே புல் வெட்டச் செல்வதாக குறிப்பிட்ட அவர், சம்பவத் தினத்தன்றும் கஞ்சா போதைப்பொருள் பாவித்த நிலையிலேயே புல் வெட்டச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று குறித்த யுவதியிடம் காசு கேட்டதாகவும், இதனையடுத்து அந்த யுவதி சத்தமிட்டதாகவும்,  இதனால் கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், தான் இப்படி செய்வேன் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ள அந்த இளைஞன், தானே கொலையை செய்ததாகவும், இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஒரு வார காலமாக காணாமல் போயிருந்த பாத்திமா முனவ்வரா என்ற யுவதியின் சடலம் நேற்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாத்திமா முனவ்வரா என்ற யுவதியை கொன்று புதைத்ததாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 24 வயதுடைய சந்தேக நபர் நேற்று (24) பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கம்பளை பிரதேசத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இந்த யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பணியிடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *