வறுமையால் பானிபூரி விற்பனை செய்து IPL இல் புது வரலாறு படைக்கும் ஜெய்ஸ்வால்!

நடப்பு ஐபிஎல் சீசனில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிவீரர் ஜெய்ஸ்வால் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல. தனது கிரிக்கெட் கனவை நனவாக்க, டெண்ட்டில் தங்கி, தோட்டக்காரராக, பானிபூரி விற்பனை செய்பவராக அவர் பட்ட கஷ்டங்கள் நிச்சயம் இளம்வீரர்களுக்கு உத்வேகம் தரக்கூடிய ஒன்றுதான்.

வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னணியிலுமே அவர்கள் கடந்து வந்த கடினமான பாதை ஒன்று இருக்கும். சோதனைகளைத் தாண்டினால்தான் சாதனைகள் வசமாகும் என்பதற்கு சாட்சியாக நம் நாட்டில் பல நிஜ ஹீரோக்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவரானவர் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

இவரின் கதைதான், இப்போது இணையத்தில் பலருக்கு உத்வேகம் அளிக்கும் உதாரணக் கதையாகி இருக்கிறது. யார் இந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்? ஐபிஎல் ரசிகர்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான பெயர்தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.  ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரரான இவர், கடந்த 2020ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அதே அணியில் விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான கிரிக்கெட் லீக் போட்டியில் மிகவும் அற்புதமாக விளையாடி ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து, ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்த இவர், 62 பந்துகளைச் சந்தித்து 124 ரன்களைக் குவித்து ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 200-ஐ கடக்க உதவினார்.

இந்திய அணிக்காக விளையாடாத ஒரு இந்திய வீரரால், ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதில் 8 பந்துகளை இமாலய சிக்ஸர்களாக விளாசிய அவரது ஸ்கோரில் 16 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம் ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை மிகுந்த வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார். இந்த சதம் தவிர, இந்த சீசனில் இதுவரை 3 அரை சதங்கள் விளாசியிருக்கிறார் ஜெய்ஸ்வால்.

மேலும், இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து ஆரஞ்சு தொப்பியையும் வசப்படுத்தியுள்ளார். 159.70 ஸ்டிரைக் ரேட்டுடன் 428 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் மூலம் இன்று தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள ஜெய்ஸ்வால், அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் கேட்பவரை நிச்சயம் ஆச்சர்யப்படுத்தும். ஆம், ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கிரிக்கெட் வீரராக வேண்டும், இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற கனவுகளைச் சுமந்தவாறு, ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தெருவில் பானிப்பூரி விற்றவர்தான் இந்த வெற்றி நாயகன். கிரிக்கெட் கனவு 2001ம் ஆண்டு டிசம்பர் 28ம் திகதி உத்தரபிரதேச மாநிலம் சூரியவான் பகுதியில் பிறந்தவர் ஜெய்ஸ்வால்.

அப்போது இவரின் தந்தை ஒரு சிறிய ஹார்டுவேர் கடையை நடத்தி வந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதுதான் கனவு. எனவே, கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக தனது 11 வயதில், மும்பையில் இருந்த மாமா வீட்டிற்கு சென்று தங்கினார்.

ஆனால், அதுவும் ஏழ்மையான குடும்பம் என்பதால், அங்கு தங்குவதற்கு அவருக்கு இடம் போதவில்லை. எனவே, சிறிது காலத்திலேயே தனக்கென தனி தங்குமிடம் தேட வேண்டிய சூழல் ஜெய்ஸ்வாலுக்கு ஏற்பட்டது. இதனால் சிலகாலம் மாட்டுப்பண்ணை ஒன்றில் தங்கி, பகலில் அங்கு வேலை பார்த்துக் கொண்டே, இரவுகளையும் அங்கேயே கழித்தார். ஆனால், அந்த இடமும் அவருக்கு நிலையாக இருக்கவில்லை. தனது வேலைகளுக்கிடையே கிரிக்கெட் பயிற்சியையும் மேற்கொண்டதால், சரியாக பால் பண்ணையில் வேலை பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஜெய்ஸ்வால் மீது சுமத்தப்பட்டது. எனவே, வேலையை விட்டு துரத்தப்பட்டார். இதனால், அங்கு தங்குவதற்கு இருந்த இடமும் பறிபோனது. பிறகு அங்கிருந்து வெளியேறி, மும்பை ஆசாத் மைதானத்தில் உள்ள கூடாரமொன்றில் தங்க ஆரம்பித்தார்.

தங்குவதற்கு ஒரு இடம் கிடைத்தது என சந்தோசப்படுவதா அல்லது அங்கிருந்த நெருக்கடிகளை நினைத்து கவலைப்படுவதா என்றே தெரியாத நிலை ஜெய்ஸ்வாலுக்கு ஏற்பட்டது. காரணம் அந்த டெண்ட்டில் இருந்தவர்கள், தோட்டக்காரர்களால் மோசமாக நடத்தப்படுவது; உணவு சமைக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவது; கழிப்பறை வசதியில்லா நிலைமை; பொருளாதார ரீதியிலோ மனரீதியிலோ உதவியில்லாமல் அவதி என பற்பல போராட்டங்களை எதிர்கொண்டார் ஜெய்ஸ்வால்.

ஆனாலும் கிரிக்கெட் மீதிருந்த தீராக்காதலால் அனைத்து அசௌகரியங்களையும் துச்சமென நினைத்து, தீவிர கிரிக்கெட் பயிற்சியில் அவர் ஈடுபடலானார். “பகலில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு இரவில் அதே மைதானத்தில் படுத்துத் தூங்குவேன். இரவு 11 மணிக்குப் பிறகு பானிபூரி விற்பனை செய்வேன். பானிபூரி விற்பனை செய்த பணத்தையே, நான் சாப்பிடுவதற்கும், கிரிக்கெட் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்துவேன். சில வருடங்கள் வரை பானி பூரி விற்றேன். அதன் பின்னர், சில கிரிக்கெட் கிளப்களில் விளையாட இடம் கிடைத்தது. எனது பயிற்சியாளர் ஜுவாலா சிங் கண்ணில் நான் படும் வரை எனது கஷ்ட நிலை தொடர்ந்தது,” என தன் ஆரம்பகால கஷ்டங்களை நினைவு கூர்கிறார் ஜெய்ஸ்வால்.

தனது பயிற்சியாளர் ஜுவாலா சிங்குடன் ஜெய்ஸ்வால் முயற்சியால் கிடைத்த முன்னேற்றம் ஜுவாலா சிங்கின் பயிற்சியாலும், ஜெய்ஸ்வாலின் திறமையாலும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற கில்ஸ் ஷீல்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதில், 319 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் தொடர்ச்சியாக 2016-ல் 16 வயதிற்குட்பட்ட மும்பை அணியில் சேர்க்கப்பட்டார்.

2019ல் ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக களம்கண்டார். இதுவே அவரது முதல் அறிமுகப் போட்டி. 2020ம் ஆண்டு நடைபெற்ற, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அணிக்கான கிரிக்கெட் போட்டியில் தான் கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தையும் களமிறக்கினார். 6 போட்டிகளில் விளையாடி, 400 ரன்களைக் குவித்து, தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் சதம் அடித்து அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இதேபோல், ’விஜய் ஹசாரே’ தொடரில் 154 பந்துகளில், 203 ரன் எடுத்து, லிஸ்ட் ஏ தொடரில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஐபிஎல் அறிமுகம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்த ஜெய்ஸ்வால்,

2020ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அறிமுக வீரராக களமிறங்கினார். அவரை தங்களது அணிக்கு ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் 2.40 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்தப் போட்டியில் வென்றது. ஆனால், எதிர்பார்த்த வெற்றிய அந்த சீசனில் ஜெய்ஸ்வால் தரவில்லை. அவரது ஆட்டம் சோபிக்காததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் ஜெய்ஸ்வாலின் திறமையை நம்பிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களிலும் தங்களது அணியிலேயே அவரைத் தக்க வைத்துக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக 2021 ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் 249 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால், 2022 ஐபிஎல் தொடரிலும் 10 போட்டிகளில் விளையாடி 258 ரன்களை எடுத்திருந்தார். முதல் மூன்று தொடர்களில் சுமாராகவே ஆடிய ஜெய்ஸ்வால், இம்முறை தன் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை அசர வைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 3 அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 428 ரன்களைக் குவித்திருக்கிறார். நடப்பு ஐபிஎல் சீசனில் ஒட்டுமொத்த அணிகளிலும் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதலிடத்தில் இருக்கிறார். “ஜுவாலா சிங்கை பார்த்த பிறகுதான் எனது நிலைமை மாறியது என்று கூற வேண்டும். எனக்குப் பயிற்சியாளராக மட்டுமின்றி பாதுகாவலராகவும் அவர் மாறினார். அவர்தான் எனது குரு, வழிகாட்டி, ஆலோசகர் எல்லாமுமே. எனது கனவைப் பின்பற்றி அதற்காக கடினமாக உழைக்க விரும்புகிறேன். என்னுடைய பாணியில் எனது விளையாட்டை நான் விளையாடுகிறேன். எனது கனவை நனவாக்க தொடர்ந்து முயற்சி செய்வேன்,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெய்ஸ்வால்.

தனது அதிரடி ஆட்டத்தால் கலக்கி வரும், ஜெய்ஸ்வால் தேசிய அணியில் இடம்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே அவரது ரசிகர்களின் கருத்து. “ஜெய்ஸ்வால் சிறிய பையனாக இருக்கும்போதே அவரது திறமையைப் பார்த்து நான் வியந்துள்ளேன். அவரது விளையாட்டைப் பார்க்கும்போது, என்னையே நான் அவனுள் பார்த்தேன். அதனாலேயே ஜெய்ஸ்வால் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவரது முன்னேற்றத்தற்கு என்னாலான உதவிகளைச் செய்தேன்,” என்கிறார் ஜெய்ஸ்வாலின் குருவான ஜுவாலா சிங். குவியும் பாராட்டு இம்முறை ஐபிஎல் தொடரில் இளம் நாயகனாக பலரின் கவனத்தை ஈர்த்திருக்கும், ஜெய்ஸ்வாலின் திறமையை அவர் இடம் பெற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மாவும் பாராட்டத் தவறவில்லை. “மிகவும் சிறப்பாகவும், அதிரடியாகவும் விளையாடுகிறார் ஜெய்ஸ்வால்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அவரின் ஆட்டம் வேறு லெவலில் உள்ளது. அவரிடம் எங்கிருந்து இவ்வளவு சக்தி வருகிறது என்று கேள்வி கேட்டேன். அதற்கு ஜெய்ஸ்வால், ஜிம்மில் அதிக நேரம் செலவிடுவதாக தெரிவித்துள்ளார். அவரின் டைமிங் அற்புதமாக உள்ளது. இந்த சீசனில் கிரிக்கெட் விளையாட்டை புதிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார். இது ராஜஸ்தான் அணிக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்ல விஷயம்,” என ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.

இதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான டாம் மூடி, “யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான திறமை படைத்தவர். சிறப்பாக தனது கேமை விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார்,” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில சீசன்களாக பவர் பிளே ஓவர்களுக்கு பின் ரன்கள் சேர்க்க கஷ்டப்பட்டு வந்த ஜெய்ஸ்வால், நடப்பு சீசனில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மும்பை அணியின் பந்துவீச்சை தனி ஒருவனாக அடித்து நொறுக்கி, தனது 21-வது வயதில் இப்படியொரு அபாரமான இன்னிங்ஸை ஆடி அனைவரையும் வியக்க வைத்திருக்கும் ஜெய்ஸ்வாலை, இந்திய அணிக்கு கிடைத்த இன்னொரு கங்குலி என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தன் திறமை மீது தான் கொண்ட நம்பிக்கையால், தன் கிரிக்கெட் கனவிற்கு இடையூறாக வந்த கஷ்டங்களையெல்லாம், சிக்ஸர்களாக தூக்கி அடித்து, இன்று வளரும் இளம்வீரர்கள் பலருக்கு நம்பிக்கை தரும் முன்னுதாரணம் ஆகியிருக்கிறார் ஜெய்ஸ்வால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *