மகப்பேறு உயிரிழப்புகள் அதிகம் நிகழும் நாடுகளின் பட்டியல் இந்தியாவுக்கு முதலிடம்!

உலகளவில் மகப்பேறு, சிசு உயிரிழப்பில் 60 சதவீதம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிறப்பில் 51 சதவீதம் பங்காற்றும் 10 நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாக ஜக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகளால் மகப்பேறு உயிரிழப்பு விகிதம் குறைந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உறுப்பு அமைப்புகளான உலக சுகாதார மையம், யுனிசெஃப் ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தயாரான இந்த அறிக்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்தும் ‘சா்வதேச மகப்பேறு சுகாதார மாநாட்டில்’ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் ஆண்டு உலகளவில் 45 இலட்சம் மகப்பேறு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதில் பிரசவத்தின்போது உயிரிழந்த 2.9 இலட்சம் தாய்மாா்கள், 19 இலட்சம் சிசுக்கள், பிறந்த சில நாள்களில் உயிரிழந்த 23 இலட்சம் குழந்தைகள் அடங்குவா்.

இந்தியாவில் மட்டும் 7.8 இலட்சம் மகப்பேறு உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதே ஆண்டில், உலக குழந்தைகள் பிறப்பில் 17 சதவீதம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவைத் தொடா்ந்து நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, வங்கதேசம், சீனா ஆகிய நாடுகள் முதல் பத்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

2000 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளைவிட 2010-ஆம் ஆண்டு முதல் மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு உலக நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளின் மந்த நிலை நிலவுகிறது.

இதற்கான காரணங்களைக் கண்டறிய சவாலாக உள்ளது. அதேவேளையில், கொரோனாவுக்குப் பிறகு மாறிவரும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் வரும் 10 ஆண்டுகளில் அதன் வேகம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, மகப்பேறு சுகாதாரத்தில் நாடுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தெற்காசிய கண்டத்தில் வாழும் 60 சதவீத பெண்களுக்கு கா்ப்ப காலத்தில் செய்யப்பட வேண்டி உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ள 8 பரிசோதனைகளில் 4 பரிசோதனைகள் கூட முறையாக நடத்தப்படுவதில்லை.

மகப்பேறு உயிரிழப்புகளை தவிா்ப்பதற்கு பிரசவத்துக்கு முன்பும் பின்பும் மற்றும் பிரசவத்தின் போதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தரமான மற்றும் மலிவு விலையில் சுகாதாரம் கிடைப்பதை அரசுகள் உறுதிபடுத்த வேண்டும்.

அத்தியாவசிய மருந்துகள், பாதுகாப்பான நீா், நம்பகமான மின்சாரம் ஆகியவற்றுடன் திறமையான மற்றும் ஊக்கமளிக்கும் சுகாதாரப் பணியாளா்கள் மகப்பேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அவசியம்.

உயிா் காக்கும் சேவையைப் பெற வாய்ப்பில்லாத ஏழைப் பெண்கள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலைகளில் உள்ள பெண்களைக் குறிவைத்து மகப்பேறு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.

தீங்கிழைக்கும் பாலின விதிமுறைகள் மற்றும் ஏற்றத் தாழ்வுகளை நீக்குவது மகப்பேறு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் முன்னெடுக்கப்படும் சுகாதார நடவடிக்கைகளால் மகப்பேறு உயிரிழப்பு விகிதம் தொடா்ந்து குறைந்துகொண்டே வருவதாக யூனிசெஃப் மகப்பேறு சுகாதார பிரிவின் மூத்த ஆலோசகரான மருத்துவா் ககன் குப்தா தெரிவித்துள்ளாா்.

அதே வேளையில், தென் அமெரிக்க நாடுகளில் இந்த விகிதம் உயா்ந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டுகளில் இந்தியாவில் மகப்பேறு உயிரிழப்பு விகிதம் 20 சதவீதமும், வங்கதேசத்தில் 42 சதவீதமும் குறைந்திருப்பதாக ககன் குப்தா தெரிவித்தாா்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *