இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவிப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை இராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அவர் ஊழல் செய்து, பாகிஸ்தான் அரசுக்கு ரூ.5,000 கோடிக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக்கூறப்படுகிற அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.அவர் கோர்ட்டு வளாகத்தில் இருந்தபோது, துணை இராணுவத்தினர் கைது செய்த விதம் சர்ச்சைக்குள்ளாகி,

இது தொடர்பாக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.இம்ரான்கான் மீதான 2 வழக்குகளை விசாரிப்பதற்காக இஸ்லாமாபாத்தில் பொலீஸ் லைன்ஸ் தலைமையக வளாகத்தில் உள்ள புதிய பொலீஸ் விருந்தினர் மாளிகையை சிறப்பு கோர்ட்டாக மாற்றி உள்ளனர்.

இந்த ஊழல் தடுப்பு கோர்ட்டு எண்.1-ல் நீதிபதி முகமது பஷீர் முன்னிலையில் இம்ரான்கான் நேற்று பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அந்தப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து சாலைகளிலும் தடைகளை ஏற்படுத்தி, மற்றவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த நீதிபதி முகமது பஷீர்தான் மற்றொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீபையும், அவரது மகள் மரியம் நவாஸ்சையும் ஊழல் வழக்கில் தண்டித்தவர். மரியம் நவாசை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. அனால் நவாஸ் ஷெரீப் ஆஜராகாததால் அவரது மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இம்ரான்கான் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு போலீஸ் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, இம்ரான்கானிடம் விசாரணை நடத்துவதற்கு 14 நாட்கள் ஊழல் தடுப்பு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினர்.ஆனால் இம்ரான் வக்கீல், இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு எனக் கூறி, இம்ரான்கானை விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பஷீர், இம்ரான்கானை 8 நாட்கள் ஊழல் தடுப்பு பொலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இம்ரான் கான் கைதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இருந்த நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட சுப்ரீம் கோர்ட், இம்ரான்கைது சட்ட விரோதம் என்றும் ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *