இலங்கை கிரிக்கெட்டுக்கு பதிரன மிகப்பெரிய சொத்து தோனி தெரிவிப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனி பதிரன நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கப்போகிறார் என கூறியுள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது பாதி ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் 7 ஆட்டங்களில் அபாரமாக செய்யப்பட்ட சென்னை அணி அதன்பின்னர் அடுத்தடுத்த தோல்விகள், மழையால் ஒருபோட்டி ரத்து என சிறிது தடுமாறியது.

இந்த நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் சென்னை அணி பரம வைரியான மும்பை அணியை சந்தித்தது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது. சென்னை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பதிரன 4 ஓவர்கள் வீசி 15 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய சென்னை அணி 17.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாங்க பந்துவீசிய பதிரனவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இறுதிக்கட்டத்தில் மலிங்கவை போல சிறப்பாக பந்துவீசி வரும் பதிரனவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் தோனி பதிரன நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கப்போகிறார் என கூறியுள்ளார். இது குறித்து பேசிய தோனி ” பதிரன போன்ற வித்தியாசமான ஆக்ஷன் கொண்ட பௌலர்களை எதிர்கொள்வது எப்போதுமே சவால் வாய்ந்தது. அவரின் வேகம், அவரது கன்சிஸ்டென்ஸி என அனைத்துமே அவர் பந்துவீச்சை எதிர்கொள்வதை மிகவும் கடினமான ஒன்றாக மாற்றுகிறது.

அவரை ரெட் பால் கிரிக்கெட் போட்டிகளில் ஆட வைப்பதை இலங்கை நிர்வாகம் தவிர்க்க வேண்டும். மேலும் ஐசிசி தொடர்களுக்காக அவரை பாதுகாக்க வேண்டும். கடைசியாகப் பார்க்கும் போது மிகவும் ஒல்லியாக இருந்தார். இப்போது தசைகளுக்கு இன்னும் வலுவேற்றியிருக்கிறார். அவர் நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கப்போகிறார்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *