முள்ளும் மலரும்’ படம்-இதுவரை நடிகர் சரத்பாபு சொல்லாத ரகசியம்!

 

“மகேந்திரன் இயக்கிய அத்தனை படங்களும் இன்றும் முத்து முத்தான முத்திரைப் படங்கள் தான்.

‘முள்ளும் மலரும்’ படப்பிடிப்பு நடந்தபோது நாங்கள் வேலை பார்ப்பது போலவே தோன்றாது. எத்தனை நாட்கள் படப்பிடிப்பு என்று கூட எங்களுக்கு நினைவிருக்காது.

அந்த அளவுக்கு மகிழ்ச்சியாகவும், ஒரு குடும்பத்தைப் போலவும் அவர் நடத்தினார். நாங்களும் அப்படிப் பழகினோம்.

‘முள்ளும் மலரும்’ படப்பிடிப்பு சுற்றுலா சென்று வந்தது போல அவ்வளவு ஜாலியாக இருந்தது. அதில் வரும் ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ பாடலை, இன்றைய காலகட்டத்தில் கூட என் காலர் டியூனாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு அழைப்பின்போதும் இந்தப் பாடலை நான் கேட்கலாம். அந்தளவு எனக்குள் அந்தப் பாடல் நிறைந்திருக்கிறது.

இந்தப் படம் பற்றி இதுவரை வெளிவராத ரகசியம் ஒன்று சொல்கிறேன்.

இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்திற்குப் பெயரே இல்லை. படம் பார்த்து யாரும் அதைக் கேட்டதே இல்லை.

அதற்கு அவசியமே இல்லை என்கிற அளவில் அதை உருவாக்கியுள்ளார். படத்தில் ரஜினி என்னை “லா பாயிண்ட்… லா பாயிண்ட்’ என்று தான் கூப்பிடுவார்.

அவர் படங்களில் கதாநாயகர்கள் மரத்தைச் சுற்றி டூயட் பாட மாட்டார்கள். நடனம் ஆட மாட்டார்கள். வாயசைத்துக் கூடப் பாட மாட்டார்கள். பாடல் பின்னணியில் தான் ஒலிக்கும்.

‘முள்ளும் மலரும்’ படத்தில் வரும் ‘ராமன் ஆண்டாலும்’ பாடல் கூட, அந்தக் கதாபாத்திரத்தின் குரலாகவே இருந்தது. ரஜினி குடித்துவிட்டுப் பாடுவதாக அது இருந்தது.

முள்ளும் மலரும்-படத்திற்கான காட்சகள் 95% அவுட்டோரில் தான் எடுக்கப்பட்டன.

அதில் வரும் காளி பாத்திரம் இன்றும் பேசப்படுகிறது. அந்த வசனம் “கெட்ட பய சார் இந்த காளி” என்கிற வசனம் எவ்வளவு புகழ் பெற்றிருக்கிறது தெரியுமா? அதே பெயரில் படம் கூட எடுத்திருக்கிறார்கள்,

நாங்கள் படப்பிடிப்பில் நடித்திருப்பது சரியா என்பதை அவருடைய முகபாவனையில் இருந்தே அறிந்து கொள்வோம். அவரது பாத்திரங்களுக்கு மட்டுமல்ல, அவருக்கும் சுற்றி வளைத்துப் பேசத் தெரியாது.

அவரது படைப்புகளில் அதிகமாக நான் பங்கேற்று இருக்கிறேன். இருவருக்குமான நட்பு குடும்ப பந்தம் போன்றது. அன்று அவர் படங்களில் நடித்த அனைவரும் நாங்கள் ஒரு பாச வட்டத்திற்குள் இருப்பதைப் போல் உணர்வுபூர்வமாக உணர்வோம்.”

இயக்குநர் மகேந்திரனைப் பற்றித் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிற சரத்பாபுவைப் போலவே, பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், விக்ரமன், சசி, வசந்தபாலன், பேரரசு, வி.சேகர், நடிகர் நாசர், மோகன், நக்கீரன் கோபால் என்று மொத்தம் 56 பேர் மகேந்திரனைப் பற்றிய தங்கள் பார்வையைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

இயக்குநர் மகேந்திரனுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிற, ‘சொல்லித்தந்த வானம்’ என்ற இந்த அருமையான நினைவுத் தொகுப்பை நூலாக வெளிக்கொண்டு வந்திருப்பவர் பத்திரிகையாளரான அருள்செல்வன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *