ஒன்லைனில் விஷம் வாங்கி தற்கொலை செய்து கொண்ட பிள்ளைகள்!

பிரித்தானிய பிள்ளைகள் சிலர் கனேடியர் ஒருவரிடமிருந்து ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முக்கிய திருப்பமாக அந்த கனேடியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22) என்னும் இளைஞர் அதே ரசாயனத்தின் உதவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.

2019க்கும் 2020க்கும் இடையில் ஒன்ராறியோவில் இதேபோல, அதே ரசாயனத்தைப் பயன்படுத்தி குறைந்தது 23 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான அந்த ரசாயனம், ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட Kenneth Law (57)என்னும் கனேடியரின் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக The Times பத்திரிகை தெரிவித்துள்ளது. தனது தயாரிப்புகளை உலகம் முழுமைக்கும் அனுப்பிவருவதாக அந்த இணையதளத்தில் பெருமையாக விளம்பரமும் செய்துள்ளார் Kenneth Law.

இது தொடர்பாக Kenneth Lawவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என்று கூறிய அவர், அது தொடர்பாக மேலும் விவரமாக பேச மறுத்துவிட்டார்.

ஆனால், பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையில், Kenneth Law, 40 நாடுகளுக்கு சுமார் 1,200 பாக்கெட் ரசாயனங்களை அனுப்பியிருக்கலாம் என கருதப்படுவதாக தற்போது பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றில் எத்தனை பாக்கெட்களில் பிள்ளைகளின் உயிரைப் பறிப்பதற்கு காரணமாக இருந்த அந்த குறிப்பிட்ட ரசாயனம் இருந்தது என்பது தெரியவில்லை.

இந்நிலையில், தற்போது Kenneth Law கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது, இரண்டு பேருடைய தற்கொலைக்கு உதவியதாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *