மீண்டும் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மிரட்டிய ஜெய்ஸ்வால்

ஐபிஎல்-லில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின, இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சென்னை அணி பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார்.

மொத்தமாக 43 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் விளாசி 77 ஓட்டங்கள் குவித்த நிலையில் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டை பறி கொடுத்தார்.

பின் இறுதிக் கட்டத்தில் மைதானத்திற்குள் நுழைந்த துருவ் ஜூரல் 15 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசி 34 ஓட்டங்களையும், படிக்கல் 13 பந்துகளில் 5 பவுண்டரிகள் விளாசி 27 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர்.

இதன்மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் குவித்து அசத்தியது. 

இதையடுத்து சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே ஓட்டங்கள் குவிக்க முடியாமல் திணறியது.

தொடக்க வீரர் கான்வே 16 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் வெறும் 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் 29 பந்துகளில் 47 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் வந்த ரஹானே (15), அம்பதி ராயுடு (0) மொயின் அலி(23) ஓட்டங்கள் எடுத்து இருந்த நிலையில் விக்கெட்டை பறி கொடுத்தனர்.

சிவம் துபே மட்டும் இறுதி வரை அணியின் வெற்றிக்காக போராடி 33 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 52 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டத்தின் இறுதி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை ஆடம் ஜம்பா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

ஆட்டத்தின் இறுதியில் சென்னை அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *