உள்வீட்டு குழப்பம் ஜனாதிபதிக்கு மூன்று பேர் கடிதம் மூலம் தெரிவிப்பு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோருக்கு ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

ஆணையாளர்களான கலாநிதி விஜித நாணயக்கார, கலாநிதி நிமல் கருணாசிறி மற்றும் களுபான பியரதன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்துக்கு முரணாக ஆணைக்குழுவின் தலைவர் செயற்படுவதாகவும், ஆணைக்குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு செவிசாய்க்காமல் தனது தனிப்பட்ட விருப்பத்திற்கு அமைய செயற்படுவதாகவும்  குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தலைவர் தொடர்ந்து புறக்கணித்ததால், கடந்த பெப்ரவரி மாதம் ஆணைக்குழுவின் முன்மொழிவுகளுக்கு உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உயர் பதவியை எதிர்பார்த்தே அவர் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துமாறு  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தலைவர் உட்பட 5 பேர் அங்கம் வகிக்கின்ற நிலையில், அவர்களில் மூவர் தமது கையொப்பத்துடன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *