உலக கிண்ணத்தில் வாங்கிய காரை இன்னும் வைத்திருக்கிறாரா ஜயசூரிய!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாவுக்கு 1996 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆடி கார் ஒன்று வழங்கப்பட்டது. அந்த காரை இப்போதும் வைத்திருக்கும் ஜெயசூர்யா அந்த ஆடி காரின் தற்போதைய தோற்றத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளார். அதனை பற்றியும், ஜெயசூர்யாவிடம் உள்ள அந்த ஆடி காரை பற்றியும் இனி பார்க்கலாம்.

இன்றைய கால உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கார்கள் சிறந்த வீரர்களுக்கு வழங்கப்படுவது சாதாரணமானவைகளாக இருக்கலாம். ஆனால் 1990களின் பிற்பகுதியில் அந்த அளவிற்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அப்படிப்பட்ட காலத்திலேயே கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு ஆடி கார் பரிசாக வழங்கப்பட்டிருப்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதை விட ஆச்சிரியம் என்னவென்றால், அந்த காரை இப்போதும் அதனை வாங்கிய நபர் பத்திரமாக வைத்திருப்பதுதான்.

அந்த நபர் வேறு யாருமில்லை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜெயசூர்யா தான். இலங்கை கிரிக்கெட் அணியின் இன்றைய நிலைமை சற்று மோசமாக இருந்தாலும், 1996ஆம் காலக்கட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணி தான் உலகின் சிறந்த கிரிக்கெட் அணி. இதன் வெளிப்பாடாகவே 1996 உலக கோப்பை இலங்கை கிரிக்கெட் அணி வசம் சென்றது. ஜெயசூர்யா போன்றோர் எதிரணி பவுலர்களை வெளுத்து வாங்கி கொண்டிருந்த காலம் அது.

1996 உலக கோப்பையின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இலங்கை எதிர் கொண்டது. பாகிஸ்தானில் லாகூர் கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1996 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஜெயசூர்யாவுக்கு தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக தொடர் நாயகன் விருதாக ஆடி கார் வழங்கப்பட்டது.

இந்த காரை இப்போதும் அதே சிவப்பு நிற பெயிண்ட்டில் பயன்படுத்திவரும் ஜெயசூர்யா காரின் தற்போதைய தோற்றத்தையும், 1996இல் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில், “கோல்டன் மெமரீஸ்: 1996 உலக கோப்பை மேன் ஆஃப் தி சீரிஸ் காரின் 27ஆம் வருடம்” என 1996 உலககோப்பை குறித்து பதிவிட்டு ஜெயசூர்யா உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

இவரது இந்த பதிவு இலங்கை மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் வைரலாகி வருகிறது. இந்தியர்கள் உள்பட நெட்டிசன்கள் பலரும் ஜெயசூர்யாவின் இந்த பதிவிற்கு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் ஒரு நெட்டிசன், “வாகனத்தின் நம்பர் பிளேட் மாற்றபட்டுள்ளது. காரின் தற்போதைய தோற்றம் சற்று டல்லாக உள்ளது. இருப்பினும் 27 வருடங்களாக சிறப்பான சர்வீஸ்களை இந்த கார் பெற்று வந்துள்ளது” என கூற, மற்றொரு நெட்டிசன், “இந்த காரை இப்போதும் நான் நன்றாக நினைவு வைத்திருக்கிறேன்.

சிறு வயதில் நான் பார்த்த முதல் ஆடி கார் இதுவாகும்” என கிரிக்கெட்டர் ஜெயசூர்யாவை போல் தனது பழைய நினைவுகளை நினைத்து பார்த்துள்ளார். இந்த நெட்டிசன் மட்டுமின்றி, நம்மில் பெரும்பாலானோர் சிறு வயதில் சொகுசு கார்களை தொலைக்காட்சி மூலமாகவும், குறிப்பாக கிரிக்கெட்டின் வாயிலாகவே கண்டோம். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்தப்பட்ட 1996 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜெயசூர்யா மொத்தம் 221 ரன்களை குவித்தார் மற்றும் 7 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார்.

27 வருடங்களாக ஓர் சொகுசு காரை கிரிக்கெட் வீரர் ஒருவர் தொடர்ந்து பராமரித்து பயன்படுத்தி வந்து இருப்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. காரின் பெயிண்ட்டை கூட மாற்றாமல் வைத்திருப்பதில் இருந்து இந்த ஆடி காரின் மீதும், 1996 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதும் ஜெயசூர்யா வைத்திருக்கும் பிரியத்தையும், நெருங்கிய பிணைப்பையும் அறிய முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *