முதலில் தோன்றிய மொழி எது? மனிதர்கள் பேச தொடங்கியது எப்போது?

 

வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த, நெருப்பை பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் முதலில் எப்போது பேசத் தொடங்கினார்கள்?

இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான மொழிகளுக்கு மூலமான ஒரே மொழி எதுவென்று சுவடுகளைக் கண்டுபிடிப்பது சாத்தியமா?

பரிணாம வளர்ச்சியின் மாற்றம்
”மனிதர்கள் மட்டுமே மொழியைப் பயன்படுத்தும் உயிரினமாக இருக்கிறார்கள். விலங்குகளிடம் இருந்து நம்மை தனித்துவமாக்கிக் காட்டுவதும் அதுதான்,” என்று நியூகேசில் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை பேராசிரியராக இருக்கும் மேக்கி டாலர்மேன் கூறியுள்ளார்.

உரையாடுவதற்கான இந்தத் திறன்தான் பரிணாம வளர்ச்சியில் முக்கியமான நிலைமாறுதலாகக் கருதப்படுகிறது. வாழ்க்கை நிலையில் மாறுதலை ஏற்படுத்தியதில் மற்றவற்றைக் காட்டிலும், உண்மையான அம்சம் இதுதான். அதனால்தான் மொழியின் பூர்வீகத்தைக் கண்டறிவதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எப்போது மொழி தோன்றியிருக்கும் என ஆச்சர்யப்படுகிறார்கள்.

”நம்மை மனிதர்களாக ஆக்கும் சற்று சிக்கலான விஷயமாக மொழி இருக்கிறது,” என்று சொல்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மானிட பரிணாம வளர்ச்சித் துறை பேராசிரியரும், மானுடவியலாளருமான ராபர்ட் போலே.

5 லட்சம் ஆண்டுகள் பழமை
இப்போதைய காலக்கட்டத்தில் உலகில் 6,500 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் இவற்றில் மிகவும் பழமையானது எது என்பதை விஞ்ஞானிகள் எப்படி கண்டுபிடிப்பார்கள்?

”தொன்மையான மொழி” எது என்று கேட்டால் பாபிலோனிய மொழி, தமிழ், சமஸ்கிருதம் அல்லது பழங்கால எகிப்து மொழி என்று நாம் நினைக்கலாம்.

ஆனால், ஆரம்ப காலத்தின் அருகே இவையெல்லாம் செல்லவே முடியாது என்கிறார் பேராசிரியர் டாலர்மேன். தொன்மையான மொழிகள் நாம் குறிப்பிடும் பெரும்பாலான மொழிகள் எதுவுமே 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை அல்ல. இப்போதுள்ள நவீன மொழியாகவும் அவை இல்லை என்கிறார்.

உண்மையான தொடக்கம் குறைந்தபட்சம் 50,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்பதற்கான சுவடுகள் உள்ளன. மொழியின் தோற்றம் அதைவிடவும் பழமையானதாக இருக்கலாம் என்று பெரும்பாலான மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

”அது ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று எங்களில் பலரும் நம்புகிறோம்,” என்கிறார் டாலர்மேன்.

பொதுவான தொன்மை மொழி
இன்றைக்கு உலகில் பேசப்படும் பல்வேறு மொழிகள் பற்றிய ஆதாரங்கள் நிறைய இருந்தாலும், இப்போதைய மொழிகள் அனைத்துமே பொதுவான ஒரு தொன்மொழியில் இருந்து உருவானவையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்கிறார் பேராசிரியர் போலே.

நமது பரிணாம வளர்ச்சியின் உயிரியல், மரபியல் மாற்றத்தின்படி ஆப்பிரிக்காவில் சிறிய மக்கள் குழுவிடம் இருந்துதான் இந்த மொழிகள் தோன்றியிருக்க வேண்டும்.

இந்தத் தோன்றல் வழிகளில் இருந்து சில மொழிகள் மாறுபட்டவையாக இருந்தாலும், இப்போது நாம் காணும் மொழிகள், ஒரே மொழியில் இருந்து மாற்றங்களைப் பெற்று உருவானவையாகத் தோன்றுகிறது.

நமது மூதாதையர்களின் புதைபடிம எச்சங்களை ஆய்வு செய்து பார்த்ததில் அவர்கள் எப்போது பேசத் தொடங்கினார்கள் என்பதற்கான சில அறிகுறிகள் தெரிகின்றன.

”பேச்சு என்பது ஒரு வகையில் அழகான முறையில் சுவாசித்தல் என்பதாக இருந்திருக்கிறது,” என்கிறார் பேராசிரியர் போலே. ”ஒலிகளை உருவாக்குவதற்காக நாம் அதிகமான கட்டுப்பாட்டுடன் சுவாசிக்கிறோம்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

”அவ்வாறு செய்வதற்கு, நமது உடலில் மென்மையான தசைகளை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. சொல்லப்போனால், நமது உதர விதானமானது புதுமையாக பயன்படுத்தப்படுகிறது. பேசுவதில் தொடர்பில்லாத, பேச்சு இல்லாத மனித இனத்துக்கு நெருக்கமான மற்ற உயிரினங்களின் , மனிதக் குரங்குகளின் உதர விதானங்களைக் காட்டிலும், மனிதனின் உதர விதானத்தில் அதிக அளவில் நரம்புகள் செல்கின்றன.”

பரிணாம வளர்ச்சியில் நமக்கு முந்தைய தொடர்பு முறையாகக் கருதப்படும், அழிந்துபோய்விட்ட நியாண்டர்தால் மனிதர்களின் தொன்மை படிமங்களை ஆய்வு செய்து பார்த்தால், அவர்கள் 600,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் என்றும், உதர விதானம் அவர்களுக்கு விரிந்து இருந்ததும் தெரிய வருகிறது.

இந்திய ஒன்றியம் என்பது தேசிய இனங்களின் ஒன்றியம்: கோர்கோ சாட்டர்ஜி
ஆனால், ஆதியில் இரண்டு கால்களில் நடந்து திரிந்த ஹோமோ எரக்டஸ் எனப்படும் இனத்தவர்களின் தொன்மைப் படிமங்களில் இதுபோன்ற விரிவு இல்லை.

எனவே மனிதர்கள் எப்போது மொழியைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பார்கள் என்பதற்கான அடிப்படை கால வரையறை நமக்குக் கிடைத்திருக்கிறது.

மரபியலுக்கும் பங்கு உள்ளது
புதைப்படிமங்களின் ஆதாரத்துக்கு அப்பாற்பட்டு, மரபியல் ஆய்வுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், மொழியின் காலத்தைக் கண்டறிவதற்கு புதிய வழிமுறைகளை அளிக்கிறது.

“FOXP2 என்ற ஒரு மரபணு இருக்கிறது. எல்லா விலங்குகளுக்கும் பொதுவானது இது,” என்கிறார் பேராசிரியர் போலே. ஆனால் மனிதர்களான நம்மில் அது பிரிந்து கொண்டிருக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

இந்த மரபணுவின் பிரியும் தன்மை ”மனிதர்களால் ஏன் பேச முடிகிறது, மனிதக் குரங்குகளால் ஏன் பேச முடியவில்லை என்பதற்கு விளக்கம் தருகிறது. பேசுவதிலும், மொழி வளர்ச்சியிலும் அதற்கு முக்கிய பங்கு இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். பிரியும் தன்மை இல்லாத இந்த மரபணு உள்ள உயிரினங்களில் பேச்சு மற்றும் தொடரியலுக்கான பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுகின்றன.”

ஆனால் அவை முழுமையாக வளர்ச்சி பெற்ற பிறகு, பேச்சு என்பது முழுமையின் மற்றொரு அம்சம் என்ற அளவில்தான் இருக்கிறது.

‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது’
பேச்சு என்பது (பேச்சு மொழியின் உண்மையான ஒலி) மொழி என்பதாக (வார்த்தைகள் மற்றும் குறியீடுகளின் மொத்தத் தொகுப்பு) இல்லை என்று பேராசிரியர் டாலர்மேன் கூறுகிறார். ”மொழி என்பதை எது உருவாக்குகிறது என்பதை இப்போதைய மரபியல் ஆதாரங்களைக் கொண்டு, இப்போதைய அறிவுநுட்பங்களைக் கொண்டு கண்டுபிடிப்பது கடினமான விஷயம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூளையின் அளவு
முற்கால மனிதர்களின் மண்டை ஓட்டின் அளவை வைத்து, மொழி உருவான காலத்தைக் கண்டறிய முடியுமா? அப்படிச் சொல்ல முடியாது.

மொழியை உருவாக்குவதற்கு மூளை எந்த அளவுக்குப் பெரிதாக இருக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியாது என்பதுதான் அதற்குக் காரணம்.

”உண்மையில் நியாண்டர்தால் மனிதர்கள், நம்மைவிட பெரிய விலங்குகள் என்பதால், அவர்களுடைய மூளையின் அளவு நமது மூளையின் அளவைவிடப் பெரியதாக இருந்திருக்கிறது” என்று பேராசிரியர் டாலர்மேன் கூறுகிறார்.

”ஹே” என்பதுதான் மனிதனின் முதல் வார்த்தையாக இருந்திருக்கும்

முந்தைய காலத்தில் இருந்தது மொழி பற்றிப் பேசும்போது, முதலில் பேசப்பட்டது என்ன வார்த்தைகளாக இருந்திருக்கும் என்று நாம் சொல்ல முடியுமா?

நமக்கு எந்தக் குறிப்பும் இல்லை என்பது தான் நேர்மையான பதில் என்கிறார் பேராசிரியர் போலே.

`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம்
ஏதும் அறிகுறிகள் கிடைக்குமா என்பதற்காக, விலங்கினங்கள் பற்றி ஆய்வு செய்து பார்த்ததில், வேட்டையாடி வாழ்ந்தவர்கள் ”வார்த்தைகள்” என்று எதைப் பயன்படுத்தினார்கள் என்பதை விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ”கழுகு,” ”சிறுத்தை” போன்ற குழுவில் உள்ள மற்றவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அல்லது வெறுமனே ”தேடுவதற்கு” அவை சப்தம் எழுப்பும் முறையை பயன்படுத்தியிருக்கின்றன என்று விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நம்மைச் சுற்றியிருந்த சூழ்நிலைகளில் இருந்தவை குறித்து தான் மனிதர்கள் முதலில் பேசியிருப்பார்கள் என்பதுதானே எளிமையான விடையாக இருக்கும் என்று நீங்கள் வாதிடலாம்.

நாம் இப்போது பயன்படுத்தும் – ”ஸ்ஸ்ஸ்,” ”ப்ச்,” “ஹே!” ”நன்றி” அல்லது”குட் பை” என்பவை போன்று அவர்களும் அடிப்படையான வார்த்தைகளைத்தான் முதலில் பயன்படுத்தியிருப்பார்கள் என்று மாற்று கோட்பாடும் கூறப்படுகிறது.

இந்த அனைத்து வார்த்தைகளும் அனைத்து மொழிகளிலும் உள்ளன. ஆனால் ஒரு மொழியில் வார்த்தைகள் மற்றும் வாசகங்களை உருவாக்கி, வாக்கியங்களாக உருவாக்குவதற்கான தொடரியல் அம்சம் இல்லை என்பது பொதுவானதாக இருக்கிறது.

மொழி வளர்ச்சியின் பின்னணி
முற்கால மனிதர்கள் சுற்றுச்சூழலை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும், வெவ்வேறு உணவு சாப்பிடவும், அதிகம் பேசுவதற்கு, மற்றவர்களுடன் ஒத்துழைப்பதற்கு தொடங்கியிருக்கலாம் என்று பேராசிரியர் டாலர்மேன் தெரிவித்துள்ளார்.

பெரிய விலங்குகள் வேட்டையாடி, மிச்சம் விட்டுச் சென்ற மாமிசங்களை நமது முன்னோர்கள் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆனால் கழுதைப்புலிகள் வேட்டையாடி சாப்பிட்டுவிட்டு, மிச்சம் விட்டுச் சென்ற மாமிசத்தை சேகரிக்க வேண்டுமானால், உங்களுடன் வேறு சிலரும் இருக்க வேண்டும். ஏனென்றால் அது மிகவும் ஆபத்தானது, என்கிறார் பேராசிரியர் டாலர்மேன்.

”நீங்கள் உணவு தேடிச் செல்லும்போது, நல்ல மாமிசம் கிடப்பதைப் பார்த்தால், நல்ல உணவு அருகில் இருக்கிறது என்பதை குழுவில் மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்கு உங்களுக்கு மொழி உபயோகமாக இருக்கும்.”

மனிதர்களின் தகவல் தொடர்பில் மற்றொரு அம்சமாக இது இருக்கிறது. வேறொரு இடத்தில் நடந்திருக்கலாம் அல்லது வேறு நேரத்தில் நடந்திருக்கலாம் என்பதால், அங்கே இல்லாத விஷயம் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதற்கு நீங்கள் மொழியைப் பயன்படுத்துகிறீர்கள்.

உயிர்வாழ்வதற்கு சாப்பிட்டாக வேண்டும் என்ற உந்துதல் காரணமாக, உணவு போன்றவை கிடைத்திருக்கும் தகவலை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதற்கான திறனை மனிதன் உருவாக்கும் தேவை ஏற்பட்டிருக்கலாம். ”தாங்கள் பார்க்க முடியாத விஷயம், அங்கே கிடைக்கிறது” என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க இது தேவைப்பட்டிருக்கும் என்கிறார் பேராசிரியர் டாலர்மேன்.

வெறும் உரையாடலும் பங்கு வகித்திருக்கும்
எனவே ஒன்றாக பணியாற்றும் திறனை வளர்ப்பது தான் மொழியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. ஆனால் நமது தொடர்பியல் தேவைகள் அதிநவீனமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் அப்போது கிடையாது.

பட மூலாதாரம்,GETTY IMAGES
”ஒத்துழைப்பு என்பது தான் மையமான தேவையாக இருந்திருக்கிறது. அநேகமாக சமூக ஒத்துழைப்பு என்பது தான் சமூகமாக சேருவது என்றாகியிருக்கும்” என்கிறார் பேராசிரியர் போலே. ”தோழமைகளை உருவாக்கிக் கொண்டு, என்ன செய்ய வேண்டும் என கண்டறிவது என்பது தான் உண்மையில் நடந்திருக்கும்” என்கிறார் அவர்.

சாதாரணமாகப் பேசிக் கொண்டிருத்தலின் மதிப்பையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது: ”வெறுமனே பேசிக் கொண்டிருத்தல், அரட்டை அடித்தல் போன்றவை தான் பேச்சின் அன்றாட அம்சங்களாக இருக்கின்றன” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வரலாற்று மொழியியல் வல்லுநர் டாக்டர் லாரா ரைட் கூறியுள்ளார்.

திராவிட மொழி குடும்பத்திலேயே பழமை வாய்ந்த ‘தமிழ்’ மொழி: ஆய்வு சொல்லும் உண்மை என்ன?

சில நேரங்களில், என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வதோடு மட்டுமின்றி, விஷயங்கள் பற்றி அறிந்து கொள்வதும் மொழிக்கான தேவையாக இருந்திருக்கிறது.

எப்போது கதைகள் சொல்ல ஆரம்பித்தோம்?
”கதைகள் விவரித்துக் கூறுவதற்கும், சம்பிரதாயங்களை உருவாக்குவதற்கும் நிறைய மொழி அறிவு நமக்குத் தேவைப்பட்டது” என்று பேராசிரியர் டாலர்மேன் கூறுகிறார்.

பேசுவதற்கு ஆரம்பகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அநேகமாக அதற்கான முயற்சிகள் உருவாகியிருக்க வேண்டும்.

”ஆதிகால மொழியில் இருந்து நவீன மொழிக்கான மாற்றம் என்பது கடினமான மாறுதலாக இருந்திருக்கும். ஆனால், இன்றைக்குப் பேசப்படும் எல்லா மொழிகளுமே ஒரே அளவுக்கு கலப்பு கொண்டவைதான்” என்கிறார் பேராசிரியர் போலே.

”இந்த அனைத்து வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் குறைந்தபட்சம் 100,000 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்பு பன்முகத்தன்மையோடு வாழ்ந்திருப்பார்கள் என்று நமக்குத் தெரியும். எனவே, குறைந்தபட்சம் அப்போதும் கலப்புகள் இரு்திருக்கும்,” என்று அவர் கூறியுள்ளார்

நன்றி;பிபிசி தமிழ்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *