இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியா !

 

இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியா (Listeria) மொனோசைட்டஜன் பக்றீறியா தொற்று, உணவு மற்றும் நீரின் ஊடாக பரவக்கூடிய ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா (Listeria) நோயால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், லிஸ்டீரியா பக்றீரியா தொற்று அறிகுறியுடைய சந்தேகத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணை செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த 15 வயது சிறுவனின் பாட்டி, அண்மையில் சிவனொளிபாத மலைக்கு சென்று மீண்டும் சிறுவனின் வீட்டுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணை செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

இந்த நிலையில், லிஸ்டீரியா பக்றீரியா தொற்றினை கட்டுப்படுத்த, பொதுமக்கள் சமைத்த உணவுகளை உட்கொள்ளுமாறு எமது செய்திச் சேவைக்கு நோய் தொடர்பில் விளக்கமளித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடக குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *