திருமணத்தை தவிர்க்கும் இளைஞர்கள்!

தென் கொரியாவில் இளைஞர்கள் திருமணம் செய்வதனை தவிர்ப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், அங்கு பிறப்பு விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது.

தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ”2022-இல் சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4% குறைவு. திருமணங்கள் குறைந்து வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டில், தென் கொரியாவில் பிறந்தவர்கள் எண்ணிக்கையை விட இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து திருமணம் மற்றும் குழந்தைப் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தென் கொரியா அறிவித்தது. குறிப்பாக, குழந்தைகளைப் பராமரிக்கும் செலவுக்கான தொகையை அரசு வழங்கும் என்றும் கடந்த ஆண்டு தென் கொரியா அறிவித்தது. எனினும், தென் கொரியாவில் திருமணமும், குழந்தைப் பிறப்பு விகிதமும் இறங்குமுகத்தில் உள்ளதால் அரசு செய்வதறியாமல் திகைத்து வருகிறது.

உலகிலேயே குழந்தைப் பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பது தென் கொரியாவில்தான். தென் கொரியப் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் ஆண்டுக்கு 1.05 தான். மக்கள்தொகையைத் தக்கவைப்பதற்குத் தேவைப்படும் 2.1 எனும் விகிதத்துடன் ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவாகும்.

வேலைப் பளு, பெண்களுக்குக் குறைவான சம்பளம், கடுமையாக உயர்ந்துவரும் விலைவாசி என பல்வேறு காரணங்களால், தென் கொரிய இளம் தலைமுறையினரிடம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *