ஒஸ்கார் விருதைத் தொடர்ந்து மற்றுமொரு சர்வதேச விருதுப் பட்டியலில் தமிழ் படைப்பு

 

சர்வதேச அளவில் எழுத்தாளர்களுக்கான பெறுமதிமிக்க விருதாகக் கருதப்படும் ‘புக்கர்‘ விருதுக்கு (BOOKER AWARD) தமிழ் எழுத்தாளரின் புத்தகம் ஒன்று பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘பூக்குழி‘ என்ற புத்தகமே 2023ஆம் ஆண்டுக்கான புக்கர் விருதுக்கான 13 நூல்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

உலகளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்களைக் கொண்ட குழுவின் மூலம் புக்கர் விருதுக்கு எழுத்தாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

இதன்படி, இம்முறை விருதுக்கு நூற்றுக்கணக்கான புத்தகங்கள் முன்மொழியப்பட்ட நிலையில் அதிலிருந்து, 13 புத்தகங்கள் நடுவர் குழுவின் மதிப்பீட்டின் பின்னர், அடுத்தக்கட்ட பரிந்துரைப் பட்டியலில் தெரிவாகியிருக்கின்றன.

அந்தப் பட்டியலில் பெருமாள் முருகன் எழுதிய ‘பூக்குழி‘ புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான பையர் (Pyre) என்ற புத்தகமும் இடம்பெற்றுள்ளது.

‘பூக்குழி‘ புத்தகம், 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதுடன் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் பின்னர் வெளியிடப்பட்டிருந்தது.

விருதுக்கான அடுத்தக் கட்டமாக, 6 புத்தகங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர் ஒரு புத்தகத்திற்கு ‘புக்கர்‘ விருது வழங்கப்படும். ‘புக்கர்‘ விருதுடன் ஐம்பதாயிரம் பவுண்ட் பணப்பரிசும் வழங்கப்படும்.

இந்த 6 புத்தகங்களின் பட்டியல் எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி வெளியிடப்படும் என்பதுடன் இறுதி ஒரு புத்தகத்துக்கான ‘புக்கர்‘ விருது இலண்டன், ஸ்கை கார்டனில் எதிர்வரும் மே 23ஆம் திகதி நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, அண்மையில் ‘தி எலிஃபன்ற் விஸ்பரர்ஸ்’ (The Elephant Whisperers) என்ற தமிழ் ஆவணக் குறும்படத்திற்கு ஒஸ்கார் விருது கிடைத்தது. இவ்வாறிருக்க மற்றுமொரு தமிழ் படைப்பாளிக்கு சர்வதேச விருதுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடக்கூடியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *