அஞ்சறை பெட்டியின் அற்புதம்!

 

மிளகு, கடுகு, ஏலக்காய், சீரகம் என நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சின்னச்சின்னப் பொருட்கள்தான் உணவுக்குச் சுவையையும் ஊட்டச்சத்துக்களையும் தருகின்றன.

மருந்தே உணவாக இருந்த நம் பாரம்பரிய சமையல்முறையில், நாம் சேர்த்துக்கொள்ளும் பொருட்களில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்களைத் தெரிந்துகொள்வோம்…

#மஞ்சள்

பூண்டு வகையைச் சேர்ந்த மஞ்சள், ஒரு மருத்துவ மூலிகை.

மஞ்சள் செடியில் வேர்ப்பகுதிதான் மஞ்சள் கிழங்கு.

இந்தியாவின் மிகப் பழைமையான நறுமணப் பொருளான இதில், குர்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் உள்ளது. மஞ்சளுக்கான நிறத்தைத் தருவதும் இதுவே.

#வகைகள்:

ஏராளமான மருத்துவப் பயன்கள்கொண்ட மஞ்சளில், முட்டா மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள்… என ஏராளமான வகைகள் உள்ளன.

#பலன்கள் :-

மஞ்சள் ஒரு சிறந்த நுண்ணுயிர்க்கொல்லி. உணவு, குறிப்பிட்ட நேரம் வரை கெட்டுப்போகாமல் இருக்க, மஞ்சள் பயன்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

கிருமிநாசினியாகவும் செயல்படும்.

மஞ்சள், வியர்வையை உண்டாக்கும் ஒரு மருந்தாகும்.

உமிழ்நீரைச் சுரக்கவைக்கும்;

மலமிளக்கியாகவும் செயல்படும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல், மஞ்சளில் உள்ள குர்குமினுக்கு உண்டு.

மூளையில் கெடுதி தரும் படிவுகளான பீட்டா-அமைலாய்டு புரதங்களை ஒன்றுசேரவிடாமல் தடுப்பதால், அல்சைமர் நோயிலிருந்து காக்கும்.

சர்க்கரை நோய், தோல் நோய்கள், வீக்கம், ரத்தசோகை, புண், செரிமானக் குறைபாட்டைப் போக்க உதவும்.

#கிராம்பு

சமையலில் சுவை கூட்டவும், மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு பயன்படுகிறது.

அது மட்டுமல்லாமல், வாசனைத் திரவியங்கள், சோப்பு, பற்பசை போன்றவை தயாரிக்கவும் பயன்படும் கிராம்பின் மருத்துவப் பயன்கள் அதிகம்.

வேறு பெயர்கள்: இதற்கு அஞ்சுகம், உற்கடம், கிராம்பு, திரளி, சோசம், வராங்கம், இலவங்கம் எனப் பல பெயர்கள் உள்ளன.

#பலன்கள் :-

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலிக்கு, 10 கிராம் கிராம்புப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிடும்போது, அது ஒரு சிறந்த வலிநிவாரணியாகச் செயல்படும்.

கடும் தலைவலிக்கு, கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்துத் தடவினால், தலைவலி குணமாகும்.

கண் இமைகளில் ஏற்படும் அழற்சியைப் போக்க, கிராம்பு கலந்த நீரைப் பயன்படுத்தும்போது, நல்ல வித்தியாசம் தெரியும்.

தசைப்பிடிப்புள்ள பகுதியில் கிராம்பு எண்ணெயைத் தடவிவர குணம் தெரியும்.

அதிக வாந்தி ஏற்படும்போது, கிராம்புப் பொடியும் தேனும் கலந்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

ஐந்து கிராம் கிராம்பை, 1 லிட்டர் நீரில் போட்டு பாதியாகச் சுண்டும் வரை கொதிக்கவிட்டு, அந்த நீரைக் குடித்தால், காலராவால் ஏற்படும் வயிற்றுப்போக்கு சரியாகும்.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன், தேன் மற்றும் வெள்ளைச்சாறு சேர்த்துச் சாப்பிட, ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியைப் பற்பொடியுடன் கலந்து பயன்படுத்திவர பல் மற்றும் ஈறுகள் பலப்படும்.

இதில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளன.

#இஞ்சி

இஞ்சி என்பதற்கு ‘இஞ்சுதல்’ (நீரை உள்ளிழுத்தல்) என்பதுதான் பொருள்.

வியர்வையை உண்டாக்க, பசியின்மை, சளி, தொண்டைக் கம்மல், காய்ச்சல் போன்றவற்றுக்கு இஞ்சி ஒரு சிறந்த மருந்து.

#பலன்கள் :-

அதிகத் தாகம் எடுக்கும்போது, ஒரு துண்டு இஞ்சியை வாயிலிட்டு அடக்கிக்கொண்டால், தாகம் தீரும்.

இஞ்சியைச் சமையலில் சேர்த்துக்கொள்வது பழைமையான சமையல்கலை வழக்கங்களில் ஒன்று.

இதனால், பித்தம் மற்றும் அது சம்பந்தமான நோய்களை நீக்கி, ஜீரணத்தை எளிதாக்கும்.

குடல், இரைப்பை முதலிய உறுப்புகளின் கழிவுகளை நீக்கும் வல்லமை பெற்றது.

இரைப்பை, கல்லீரலை வலுவாக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்க, முட்டையின் மஞ்சள் கருவுடன் இஞ்சிச் சாறைக் கலந்து சாப்பிடலாம்.

உலர்ந்த இஞ்சி, ‘சுக்கு’ எனப்படும். சுக்குக் கஷாயம் ஒரு வலி நீக்கும் மருந்தாகும்.

#மிளகு

மிளகாய் வருவதற்கு முன் காரத்துக்கு மிளகு பயன்படுத்தப்பட்டது. சிறந்த மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது.

அந்தக் காலத்தில் இது ஒரு விலை உயர்ந்த பொருள்.
இதற்கு ‘கறுப்புத் தங்கம்’ என ஒரு பெயர் உண்டு.

குளிர் ஜு்ரம், கோழை, வயிற்று வலி, அஜீரணம், நரம்பு வலி ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மை மிளகுக்கு உண்டு.

#வகைகள்:

குரு மிளகு, பச்சை மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு என மிளகைப் பதப்படுத்தும் முறைகளில் மாற்றம் பெறுகிறது.

#பலன்கள் :-

மிளகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட, வாயு, கோழை, அஜீரணம் ஆகியவை சரியாகும்.

நீரில் 10-15 மிளகை இடித்துப் போட்டு, நன்றாகக் கொதிக்கவிட்டு, வடிகட்டி அந்த நீரைக் குடிக்கும்போது, காய்ச்சல் குறையும்.

சிறு பூச்சிகளால் ஏற்படும் விஷக்கடிகளுக்கு மருந்தாக, ஒரு வெற்றிலையுடன் ஏழு மிளகைச் சேர்த்து நன்றாக மென்று உண்ணலாம்.

உணவில் சேர்க்கும்போது உணவில் இருக்கும் நச்சுக்களை முறிக்கப் பயன்படுகிறது.

மிளகின் காரத்தன்மைக்கு அதிலுள்ள ‘பெப்பரைன்’ எனும் வேதிப்பொருள்தான் காரணம்.

மேலும் இதில் தயாமின், ரிபோ ஃபிளாவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் இரும்பு, பாஸ்பரஸ் முதலிய தாது உப்புகளும் உள்ளன.

#சீரகம்

உடலின் உட்புறத்தை சீராக வைத்திருக்கும் என்பதால், ‘சீரகம்’ எனப் பெயர். இதன் மருத்துவக் குணங்கள் அபாரமானவை.

#பலன்கள் :

-கடுமையான வயிற்றுவலிக்கு சீரகத்தையும் உப்பையும் சேர்த்து நன்றாக மென்று தண்ணீர் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து, காலை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது ரத்தமூலம் தீரும்.

கற்கண்டும் சீரகமும் கலந்து சாப்பிட, இருமல் உடனடியாக நிற்கும்.

சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால், விக்கல் நிற்கும்.

வெறும் வாயில் சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி அகன்று, செரிமானம் நன்றாக ஏற்படும்.

சீரகப் பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டால், பித்தம் நீங்கும்.

#கடுகு

கடுகு, பசியை நன்கு தூண்டும்.

மேலும், உமிழ்நீர் சுரத்தல், வாதம், பித்தம், கபம் ஆகியவற்றைச் சரிசெய்யவும், சுகப்பிரசவத்துக்கும் பயன்படும்.

கடுகின் வகைகள்:

சிறு கடுகு, செங்கடுகு, வெண்கடுகு எனப் பல வகைகள் உள்ளன.

வெண்கடுகு அதிகக் காரமுடையது என்பதால், இதைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை.

#பலன்கள் :-

கடுகுச் சூரணம் (சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்) 3-5 கிராம் அளவு எடுத்து, பாயசத்துடன் கலந்து சாப்பிடும்போது, உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் நீக்கப்படுகின்றன

#பலன்கள் :-

கடுகையும், முருங்கைப்பட்டையையும் சேர்த்து அரைத்து, கால்குடைச்சல், முழங்கால் அல்லது கணுக்காலில் வலி, வீக்கம் முதலியவற்றுக்குப் பற்றுப் போடலாம்.

#ஏலக்காய்

சமையலில் நறுமணத்துக்காகப் பயன்படுத்தப்படும் ஏலக்காயின் மருத்துவப் பலன்கள் ஏராளம்.

வகைகள்: சிறு ஏலம், பெரு ஏலம், காட்டு ஏலம், மலை ஏலம் என நான்கு வகைகள் உள்ளன.

#பலன்கள்

வயிற்றுத்தொல்லைகள் நீங்கும்.

செரிமானமும் நன்கு நடைபெறும்.
ஏலக்காயுடன் தேன் கலந்து சாப்பிட்டால், தொண்டை வலி, இருமல் போன்றவை குணமடையும்.

ஏலக்காய்ப் பொடி மற்றும் சந்தனப்பொடியை பேஸ்ட் போல் தயார் செய்து, தலைக்குத் தடவினால், தலைவலி குணமாகும்.

ஏலக்காய் டீ குடித்தாலும் தலைவலி குறையும்.

ஏலக்காயைப் பொடி செய்து, அதனோடு தேன் கலந்து சாப்பிட்டால், நரம்பின் பலம் அதிகரிக்கும். பார்வைத்திறன் மேம்படும்.

வாந்தி வரும் சமயம் ஏலப்பொடியுடன் துளசிச் சாறைக் கலந்து எடுத்துக்கொண்டால், வாந்தி நிற்கும்.

அன்று எல்லாம் வீட்டிலேயே மருத்துவம் இருந்தது இன்று வீதிக்கு பார்க்கும் இடம் எல்லாம் இருக்கிறது……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *