பவித்ராவுக்கு புதிய பதவி!

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவுசெய்யப்பட்டார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்துக்கான நிர்வாகிகளைத் தெரிவுசெய்வதற்கான விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவின் தூதுவர் டெனிஸ் சைபி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பதி, ஹெக்டர் அப்புகாமி ஆகியோர் இலங்கை-ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய செயலாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

ஐரோப்பிய ஒன்றியமானது வறுமை ஒழிப்பு, ஜனநாயக ஆட்சி, உள்நாட்டு அபிவிருத்தி, விவசாயம், நீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மீட்சி மற்றும் மறுசீரமைப்புக்குப் பல்வேறு உதவிகளை வழங்கியிருப்பதுடன், 2014 முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அபிவிருத்தி உதவியின் ஊடாக நிதி உதவிகளை வழங்கியிருப்பதாக இங்கு உரையாற்றிய சபாநாயகர் குறிப்பிட்டார். நாட்டில் கொவிட்-19 தொற்றுநோய் நிலவிய காலப் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.

ஆசியாவில் ஜனநாயகத்தின் தாயாக இலங்கை விளங்குகிறது என தாம் நாம்புவதாகவும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கையின் மீள்தன்மை ஜனநாயகம் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றும் தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயற்பட எதிர்பார்ப்பதாக இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவர் அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *