பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாவிட்டால் இலங்கை என்ற நாடே எஞ்சாது!

அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும், தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான உரிய திகதியை இதுவரை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற விவாதத்தில் இன்று (23) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அரசியலுக்கு அன்றி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே தான் முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாவிட்டால் நாடொன்று எஞ்சாது எனவும் வலியுறுத்தினார்.

இங்கு மேலும் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் இன்று வாக்கெடுப்பொன்றை கோரியுள்ளனர். பொதுவாக இவ்வாறு வாக்கெடுப்பு கோருவதில்லை. மின்சக்தி என்பது அத்தியாவசிய சேவை. ஏன் இதனை எதிர்க்கிறார்கள்? ஏன் இந்த சேவைகளை எதிர்க்கிறார்கள். தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதை எதிர்க்கட்சி எதிர்க்கிறதா? இதுகுறித்து விவாதம் தேவையெனில் அதனை வழங்க முடியும். ஆனால், அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விவாதம் கோரவில்லை. தேர்தலை ஒத்திவைப்பதாகக் கூறியே விவாதம் கேட்டிருந்தனர். தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. ஒத்திவைப்பதற்கு தேர்தல் ஒன்று இல்லை.

பொதுவாக இந்த விவாதத்தில் கலந்துகொள்வதில்லை என்று நான் அறிவித்திருந்தேன். ஏனென்றால் எனக்கு அரசியல் தேவையில்லையென்று நான் கூறியிருந்தேன்.

எனினும், தேர்தல் ஆணைக்குழுவும் இன்று நீதிமன்றத்திற்கு சென்று, தேர்தல் ஒன்றை நடத்த முடியாது என்று கூறுகிறது. எனினும், சத்தியக் கடதாசியொன்று வழங்கியிருப்பதால் இதுகுறித்து பேச நினைத்தேன். அப்படியில்லையெனில், எனக்கு கீழுள்ள நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாரிய அநீதி ஏற்படும்.

தேர்தலை நடத்துவதற்கான நிதியை வழங்க முடியாதிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு திறைசேரியின் செயலாளர் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உண்மையில்லை.

முதலில் இந்த நாட்டின் பொருளாதார நிலைமையையும், தேர்தல் ஒன்றை நடத்த பணம் இல்லை என்பதையும் அதேபோல் இது பொருளாதாரத்திற்கு உகந்தல்ல என்றும், உறுப்பினர் எண்ணிக்கை 5,000இற்கு குறைந்தபின்னர் தேர்தலை நடத்துமாறும் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நான் அறிவித்திருந்தேன். நானே அவர்களுக்கு முதலில் இதுபற்றி அறிவித்தேன். இதுகுறித்து நான் விளக்கமளித்திருந்தேன். இது சாதாரண ஆணைக்குழு அல்ல என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *