அமெரிக்காவை அச்சுறுத்தும் வரலாறு காணாத பனிப்புயல்!

அமெரிக்காவை அச்சுறுத்தும் பனிப்புயலால் மக்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளனர்.
அமெரிக்காவில் தலைமுறைக்கு ஒருமுறை வரும் கடும் பனிப்புயலைச் சமாளிக்க மில்லியன் கணக்கானோர் தயாராகின்றனர்.
பனிப்புயலால் இதுவரை இல்லாத குளிர்நிலையை நாடு எதிர்நோக்கக்கூடும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் அடுத்த 2 நாள்களுக்கு நாட்டின் வடகிழக்குப் பகுதியை உறையவைக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய நகர்களிலும் நியூ இங்கிலாந்தின் வடக்குப் பகுதியிலும் பலத்த குளிர் காற்று வீசுகிறது. பல்லாண்டுகளில் முதல்முறையாக அங்குத் தட்பநிலை உறைநிலைக்குக்கீழ் சுமார் 45 டிகிரி செல்சியஸுக்குக் குறையக்கூடும்.
டெக்சஸ் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து வீசும் பனிப்புயலால் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் அவதியுறுகின்றனர்.
இன்று இரவு வரை போஸ்டன் நகரில் குளிர்கால நெருக்கடிநிலை நடப்பிலிருக்கும்.
அங்கு அனைத்துப் பொது பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருப்பதோடு கடுங்குளிரை எதிர்நோக்கத் தயாராக இருக்கும்படியும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.