நூற்றாண்டில் கால் பதிக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நூற்றாண்டு தாண்டி தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் நாளை 2023/01/19 ஆம் திகதி நூற்றாண்டுக்கான விழா அதன் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி அவர்களது தலைமையில் இடம் பெறவுள்ளது.

BMICH அரங்கில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டிற்கு இலங்கையின் மேதகு ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாகவும் மற்றும் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாட்டிற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஆலிம்கள், பிரமுகர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் வருகை தரவுள்ளனர்.

ஜம்இய்யா கடந்து வந்த வரலாற்றுப் பாதையை தெளிவுபடுத்தி ஜம்இய்யத்துல் உலமா சபை ஆனது மனித நேயமிக்க ஓர் அமைப்பு என்பதை இலங்கை மக்களுக்கு எத்தி வைத்தல் எனும் தொணிப் பொருளில் இம்மாநாடு இடம் பெறவுள்ளது.

ஓர் அமைப்பு நூற்றாண்டு காலம் தாண்டி செயற்பாடுகளை தொடராக முன்னெடுத்து வருகின்ற செய்தி மிகவும் முக்கியத்துவப் படுத்திப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஜம்இய்யாவின் நூற்றாண்டு கால வரலாறு என்பது இலங்கை வாழ் முஸ்லிம்களின் சமய, சமூக,கலாசார விழுமியங்களை தாங்கி நிற்கும் வரலாறாகும்.

எமது நாட்டிற்கு முஸ்லிம் சமூகம் செய்த சேவையினை தெளிவூட்டும் வரலாறாகும்.

சமூகத்தின் இருப்பு அது கடந்து வந்த கசப்பான பாதைகள், இடர்கள், சாதனைகள் என பல முக்கியமான விடயங்களை தாங்கிய பதிவுகளை இளையோருக்கு அறிவுபுகட்டும் வரலாறாகும்.

வரலாற்று ஆவணங்களையும் தடயங்களையும் பாதுகாப்பதில் பெரிதும் சிரத்தை எடுக்காத எமது நாட்டு முஸ்லிம் சமூகத்தில் நூற்றாண்டு காலம் தாண்டிய ஜம்இய்யத்துல் உலமா சபையின் வரலாற்று ஆவணம் சிறந்ததொரு செய்தியை பதிவிடும் என்பது திண்ணம்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் அறபுக்கல்லூரிகள் உருவாகி இருந்தன அதில் பலர் கல்வி கற்று தமது பிரதேசங்களில் பொருத்தமான அமைப்பில் மார்கப் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தில் மார்க்க விவகாரங்களில் தெளிவினைப் பெற்றுக் கொள்வதில் அதிக முனைப்பு காணப்பட்டது இதனைக் கண்ணுற்ற இலங்கை ஷாஃபிஇ ஆலிம்கள் காலி பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரியில் 1924 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை மக்களுக்கு மார்க்க விவகாரங்களில் தெளிவினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்ற அமைப்பினை உருவாக்கிக் கொண்டனர் என்ற செய்தி ஆவணங்களில் பதியப் பட்டுள்ளது.

சுமார் 60 ஆலிம்கள் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரியின் அதிபர் மர்ஹூம் அஷ்ஷேய்க் அப்துல் ஹமீத் பஹ்ஜிஅவர்களைத் தலைவராக தெரிவு செய்து கொண்டனர்.

ஆரம்ப காலங்களில் இவ்வமைப்பிற்கு தெரிவு செய்யப்படும் தலைவர், செயலாளர்களின் வதிவிடங்களின் முகவரிகளை சபையின் தொடர்பாடல் விலாசங்களாகக் கொண்டு கார்யாலய வசதி இன்றி இயங்கி வந்தது.

80 களின் ஆரம்ப பகுதியில் இதற்கான கார்யாலய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு மருதானையில் ஓர் இடம் கிடைக்கப் பெற்ற பொழுதிலும் 2015 ஆண்டு முதல் ஜயந்த விஜயசேகர மாவத்தை கொழும்பு 10 இல் சகல வசதிகளும் கொண்ட தலைமையக கார்யாலயத்தைக் கொண்டு ஜம்இய்யா சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இச்சபை ஃபத்வா,பிறை விவகாரம் மற்றும் பொது வழிகாட்டல்கள் போன்ற விடயங்களில் ஆரம்ப காலங்களில் கவனத்தை ஈர்த்து செயற்பட்ட போதிலும் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் தேவையின் தன்மை அதிகரித்த போது பரவலாக சமூகம் மற்றும் தேசியம் சார்ந்த பல்வேறு விடயங்களில் ஜம்இய்யா கவனம் செலுத்தி பல சேவைகளைச் செய்து எமது நாட்டின் தவிர்க்க முடியாத ஓர் அமைப்பாக காணப் படுகிறது.

ஜம்இய்யாவின் சொயற்பாடுகளில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதலான செயற்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவை மிகவும் நேர்த்தியான அமைப்பில் விடயங்களை முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

ஜம்இய்யாவின் உப கிளைகளூடாக சமூக சேவைப் பணிகள், கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள், ஆய்வு மற்றும் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள், அனர்தகால செயற்பாடுகள்,அறபுக் கல்லூரி ஒருங்கிணைப்புக்குழு போன்ற பல உப குழுக்கள் ஊடாக தமது செயற்பாடுகளை செய்து வருகிறது.

ஜம்இய்யாவின் செயற்பாடுகளின் மூலம் தேசிய ரீதியாக முஸ்லிம் சமூகம் பற்றிய பிழையான அபிப்பிராயங்கள் களையப் பட்டு ஆரோக்கியமான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.

சுனாமி, அனர்தம், கலவரம்,கொரணாபோன்ற இடர்பாடுகள் கொண்ட காலங்களில் ஜம்இய்யாவின் தலைமையிலான செயற்பாடுகள் மிகவும் சிறப்பாக அமைந்தது.

ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்வைக்கப் பட்ட அனைத்து பாதகமான எண்ணக் கருத்துக்களையும் துடைத்தெறிந்த வரலாற்றுகுச் சொந்தக்காரர்கள் உலமாக்கள் அடங்கிய ஜம்இய்யதுல் உலமா சபையே சாரும்.

ஜம்இய்யாவின் வரலாற்றில் பலர் தலைவர், பொதுச் செயலாளர்களாக இருந்து பணியாற்றியுள்ளனர்.அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் நற்கூலி வழங்கி கௌரவிக்க பிரார்த்திப்போம்.

அதேவேளை முன்னாள்த் தலைவர் மர்ஹூம் அஹ்மத் முபாரக் மதனி, முன்னாள் பொதுச் செயலாளர் மர்ஹூம் எம்.ஜே.எம். றியாழ் கபூரி போன்றோரின் செயற்பாடுகள் சிறப்பித்துப் பார்க்கப் படுகின்றன.

அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் இருந்த ஜம்இய்யத்துல் உலமா சபையினை தமது நிருவாகத் திறமையினால் தலைநகரில் வேரூண்றவும் ஆலிம் களின் வகிபங்கினை இலங்கையில் முதன்மைப் படுத்துவதற்கும் கால் கோளாக அமைத்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்ட இச்சபை மாவட்ட, பிரதேச கிளைகளுடன் 10000க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டு பிரமாண்டமான அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

2000 ஆம் ஆண்டு முதல் தலைமைத்துவம் வகிக்கும் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி அவர்களின் ஆளுமை இவ்வமைப்பின் முக்கியத்துவத்தினை சர்வதேசம் வரை பரவச் செய்துள்ளது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரணாக,உலமாக்கள் பெற்றிருக்கும் திறமையை ஒருமுகப்படுத்தி இச்சபயை அவர் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
அல்லாஹ் அவருக்கு தேகாரோக்கியத்தைக் கொடுக்க பிரார்த்திப்போம்

ஜம்இய்யாவின் நிறைவேற்று,உபகுழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் இயங்கி அமைப்பின் இயக்கத்திற்கு துணை நிற்கின்றனர்.

எதிர்காலத்தில் இவ்வமைப்பு பிரதேச மற்றும் மாவட்டக் கிளைகளை உள்ளடக்கி பிராந்திய சபைகளை தலைமையகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

குறைந்தது நான்கு பிராந்தியங்களாக பிரித்து செயற்பாடுகளை பரவலாக்கி முன்னெடுத்தால் மிகவும் இலகுவான அமைப்பில் ஜம்இய்யாவின் செய்தி மக்களுக்கு கிடைக்க வழியேற்படும்.

இவ்வமைப்பின் உயர்வுக்கும் கீர்த்தி க்கும் துணை நின்ற அத்தனை உள்ளங்களையும் அல்லாஹ் பொருந்தி சிறந்த நற்கூலி கொடுப்பானாக.

நூற்றாண்டு விழா சிறப்புற பிரார்த்திக்கிறேன்.

நன்றி: எம்.எல்.பைசால் (காஷிபி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *