கொழும்பில் பதற்றம் கண்ணீர்ப்புகை பிரயோகம்

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவை உறுப்பினர்கள் இன்று (16) பிற்பகல் தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்தனர்.
பயங்கரவாதச் சட்டத்தை நீக்குதல், வரிச்சுமை மற்றும் பொருட்களின் விலைகளைக் குறைத்தல், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலியின் விடுதலை போன்ற பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகளும் தடைப்பட்டுள்ளன. துன்முல்லை சந்தியிலிருந்து பௌத்தலோக மாவத்தைக்கு செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எவ்வாறாயினும், காலிமுகத்திடலில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து யூனியன் பிளேஸ் ஊடாக காலிமுகத்திடல் நோக்கி நுழைவதற்கு நீதிமன்றால் தடை விதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், காலிமுகத்திடலுக்குள் பிரவேசிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் குறித்த உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.