முகக்கவசம் அணிவது கட்டாயம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு!

புதுச்சேரியில் இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரி மார்பு நோய் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலெக்டர் வல்லவன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:

உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட்- 19 ஒமிக்ரான் BF.7) பரவல் அதிகரித்து வருகிறது. எனவே புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட காலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வரும் 1ம் தேதி அதிகாலை 1 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், ஓட்டல்கள், பார்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை விடுதிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றி தங்களின் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும்போது மாணவர்கள், ஆசிரியர்கள், இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தனியார் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களும் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களில் கொரோனா தடுப்புக்குரிய நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *