119 நாட்கள் 18,200 கிமீ தூரம் மோட்டார் சைக்கிளில் ஹனிமூன் சென்ற தம்பதி!

ஒன்றோ… இரண்டோ அல்ல. 23 மாநிலங்கள். ஐந்து யூனியன் பிரதேசங்கள். தவிர, நேபாளம். மொத்தமாக சுமார் நான்கு மாதங்கள், 18 ஆயிரத்து 200 கிமீ என இந்தியா முழுவதையும் சுற்றி வந்திருக்கின்றனர் தமிழகத்தைச் சேர்ந்த லோகேஸ்வரி – பிரேம் தம்பதியர். அதுவும் டூவீலரில்! ‘‘தீபாவளிக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் சென்னை வந்து சேர்ந்தோம்.

இன்னமும் உடல்ல அலுப்பு இருக்கிறமாதிரி ஓர் உணர்வு இருக்கு. அதைவிட போயிட்டு வந்த நினைவுகளையும் சந்தோஷங்களையும் பேசித் தீர்க்கிறதே அலாதி சுகமா இருக்கு…’’ உற்சாகமாகச் சொல்லும் லோகேஸ்வரி, எப்படி தொடங்கியது இந்தப் பயணம் என விவரித்தார்.

‘‘எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் நீடாமங்கலம். பி.இ முடிச்சிருக்கேன். அடிப்படையில் நான் மாணவர் பத்திரிகையாளராக இருந்து மீடியாவிற்குள் வந்தேன். சென்னையில் வேலைக்கு வந்தப்ப என் தோழிகளுடன் அவுட்டிங் போறதுனு 2014ல் ஆரம்பிச்சேன். முதல்ல மாசத்திற்கு ஒரு பயணம்னு தொடங்கினது. அது 2016-17ல் வாரத்திற்கு ஒண்ணுனு மாறுகிற அளவுக்கு ஆர்வமாகிடுச்சு. கிடைக்கிற லீவு நாட்கள்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடுனு பார்க்க வேண்டிய இடங்களுக்குப் போயிட்டு வந்தேன். 

2020 ஆகஸ்ட்ல பிரேம் உடன் திருமணமாச்சு. கொரோனா நேரத்துலதான் கல்யாணம். எங்களது நிச்சயிக்கப்பட்ட திருமணம். ஆனா, மாப்பிள்ளையை நான்தான் தேர்ந்தெடுத்தேன். ஒரு மேட்ரிமோனியல் வெப்சைட்ல பார்த்தப்ப இவரின் டிராவல் போட்டோ இருந்தது. அது வித்தியாசமா இருக்கவே எனக்கு பிடிச்சிப் போய் பேசினப்ப அவருக்கும் பயணத்துல ஆர்வம்னு தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம், வீட்டுல பேசித் திருமணம் பண்ணிக்கிட்டோம்.

பிரேமிற்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி. அவர் அனிமேஷன் பீல்டுல பெங்களூர்ல வேலை செய்தார். நான் சென்னையில் வேலை செய்திட்டு இருந்தேன். திருமணத்திற்குப்பிறகு சென்னைக்கு வந்தோம். அந்நேரம் லாக்டவுன்.

எங்கேயும் போகமுடியல. அப்புறம், டைம் கிடைச்சப்ப வண்டியில் போயிட்டு வந்தோம். அப்பதான் ஒரு ஐடியா வந்தது. ஏன், பயணம் சம்பந்தமான ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கக்கூடாதுனு தோணுச்சு. கடந்த ஆண்டு டிசம்பர் மாசம் ‘டிராவல் ஜங்கிஸ்’ என்கிற பெயர்ல தொடங்கினோம். அப்ப ஆந்திரா, கர்நாடகா பகுதிகள்ல கொஞ்சம் உள் அடங்கிய பகுதிகளா தேர்ந்தெடுத்துப் போனோம்.

அந்தமாதிரி போயிட்டு இருந்தப்ப திருமணமாகி பெரிசா எங்கேயும் வெளியே போகலயேனு ஒரு குறை மனசுல ஏற்பட்டுச்சு. அதுதான் இந்தப் பயணத்திற்கான விதை… சொல்லப்போனா எங்க ஹனிமூன் டிரிப்னு கூட சொல்லலாம்…’’ என்கிறவர் நிதானமாகத் தொடர்ந்தார்.‘‘2021ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஒரு ஆல் இண்டியா ட்ரிப் மாதிரி போகலாம்னு பேசிட்டு இருந்தோம். ஓராண்டாக எங்கே, எப்படி போறதுனு மட்டுமே திட்டம் போட்டு வந்தோம். யூடியூப் சேனல் ஆரம்பிச்சப்ப அது இன்னும் வேகமெடுத்தது.

சென்னையில் தொடங்கி சென்னையில் முடிக்கிற மாதிரி ப்ளான் பண்ணினோம். ஆனா, போகிற இடங்கள்ல எங்கே தங்குறோம்னு முடிவெடுக்கல. ஏன்னா, திடீர்னு மழை பெய்தால் என்ன செய்யமுடியும்? அப்ப பக்கத்துல தங்குறதுபோல ஆகிடும். அப்புறம், முக்கியமானது பணம். கொரோனாவுக்குப் பிறகு எல்லா பொருட்களின் விலையும் ஏறிடுச்சு. குறிப்பா, பெட்ரோல். அதனால, பணத்தை சேமிச்சிட்டு ட்ரிப் போகலாம்னு முடிவெடுத்தோம். அதுக்காக ரெண்டு பேருமே கடுமையா உழைச்சோம்.

நாங்க திருமணத்தை சிம்பிளாதான் பண்ணினோம். அதுல கொஞ்சம் பணம் மிச்சமிருந்தது. அப்புறம், நாங்க வச்சிருந்த மத்த சேமிப்புப்பணம் எல்லாத்தையும் இதுல போட்டோம்.

எனக்கு டூவீலர் ரொம்பப் பிடிக்கும். அதுவும் ராயல் என்ஃபீல்டுல போறதுனா அலாதி ப்ரியம். நான் எல்லா பைக்குகளையும் ஓட்டுவேன்.

ஆனா, இந்த ராயல் என்ஃபீல்டு மட்டும் வெயிட் அதிகம் என்கிறதால ஓட்ட பயம். பிரேமிற்கும் பைக் ரொம்பப் பிடிக்கும். அவர் சைக்கிள்லயே தமிழ்நாடு முழுவதும் சுற்றியிருக்கார். சிக்கிம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்குத் தனியாக பைக்ல பயணிச்சிருக்கார். அதனால, இந்த இந்தியா பயணத்தை பைக்ல போகலாம்னு முடிவெடுத்தோம். இதுக்காகவே ஹிமாலயன் என்ஃபீல்டு பைக்கை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம்.

அடுத்து, இந்தியா முழுவதும் சுத்தப்போறோம். அதை வெறும் ட்ரிப்பாக செய்யாமல் ஒரு விழிப்புணர்வு மாதிரி செய்வோம்னு தோணுச்சு. அதனால, மார்பகப் புற்றுநோய் பற்றி ஒரு விழிப்புணர்வு பண்ணலாம்னு நினைச்சு அப்பல்லோ மருத்துவமனையிடம் அணுகினோம்.

அவங்க உற்சாகமாக மார்பகப் புற்றுநோய் பத்தின துண்டுப் பிரசுரங்கள் எல்லாம் தந்தாங்க. இந்தியா முழுவதும் எங்கெல்லாம் போறோமோ அங்க கொடுக்க சொன்னாங்க. சென்னையில் இருந்தே துண்டுப்பிரசுரங்கள் கொடுத்திட்டு கிளம்பினோம்…’’ என்கிறவர், பைக் அனுபவங்களைப் பகிர்ந்தார். 

‘‘முதல்ல சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக முர்தேஸ்வர் போனோம். அங்கே அரபிக்கடல் ஓரத்தில் இருக்கும் சிவன் சிலை பிரசித்தி பெற்றது. அங்கிருந்து கோவா போயிட்டு மும்பை சென்றோம். ஆனா, நாங்க போன நேரம் மும்பையில் செம மழை. அங்க முன்னாடியே மழைக்காலம் தொடங்கிடுச்சு.

எங்களால் எங்கும் வெளியே போகமுடியல.அங்கிருந்து குஜராத் போகிற ப்ளான் வேறு இருந்தது. ஆனா, அங்கும் வெள்ளம். அதனால நாங்க திட்டத்தை மாற்றி சீரடி வழியாக அவுரங்காபாத் போயிட்டு மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைப் பிடிச்சோம். அப்புறம், மழை குறைஞ்சதும் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் போனோம்.

அங்கிருந்து ஜோத்பூர், ஜெய்சல்மர், தார் பாலைவனம் எல்லாம் பார்த்தோம். தார் பாலைவனம் அருமையான அனுபவம். இங்க டூரிஸம், நான்- டூரிஸம்னு ரெண்டு இருக்கு. டூரிஸம்னா கைடாக எப்படி சுத்திக்காட்டுவாங்களோ அப்படி சுத்திப்பார்க்கலாம். அவங்களே தங்குற இடம், உணவு எல்லாம் கொடுத்திடுவாங்க.

நான்-டூரிஸம்னா நானும் அவரும் மட்டும் இருப்போம். நாங்க போக ரெண்டு ஒட்டகம். அதை ஓட்டிட்டு வர்ற இருவர், அந்த ட்ரிப்பை உருவாக்கித் தருபவர்னு மொத்தம் ஐந்துபேர்தான். அப்படியாக சுமார் பத்து கிமீ சுற்றுளவுல தார்பாலை வனத்துல பயணிச்சோம். இரவும் அங்கேயே தங்கினோம். அந்த மணற்பரப்புல வெறும் தார்ப்பாயை விரிச்சு படுத்துறங்கினோம். அங்கேயே சமைச்சு சாப்பாடு தந்தாங்க.

திரும்ப வரும்போது உள்அடங்கிய ஒரு பாலைவன கிராமத்திற்கு அழைச்சிட்டு போனாங்க. அந்த அனுபவம் அலாதியானது. ஒட்டுமொத்தமாகவே ராஜஸ்தான் ரொம்ப அருமையான சுற்றுலாத்தலம். ஆறு நாட்கள் ராஜஸ்தான்ல இருக்க ப்ளான் செய்த நாங்க, 13 நாட்கள் இருந்தோம்.அங்கிருந்து ஜெய்ப்பூர், ஆக்ராவில் தாஜ்மஹால்னு தரிசித்து விட்டு தலைநகர் தில்லி வந்தோம். பிறகு வாகா எல்லையைப் பார்த்திட்டு ஜம்மு-காஷ்மீர்ல அடியெடுத்து வச்சோம்.

இங்க இந்தியாவின் மற்ற மாநில சிம் கார்டுகள் வேலைசெய்யாது. அதனால, அங்கபோய் புது சிம் வாங்கணும். லே, லடாக்ல நிறைய நாட்கள் இருப்போம்னு ஆரம்பத்துலேயே குறிச்சு வச்சிருந்ததால 15 நாட்கள் தங்கினோம்.  பிறகு எங்க நீண்டநாள் கனவான லே பகுதிக்குப் போனோம். அடுத்து லடாக். அது வேற லெவல் அனுபவம். ஒவ்வொரு நிமிடத்திற்கும் அங்க கிளைமேட் மாறிட்டே இருக்கும். ஒரே சாலைதான். ஆனா, ஒரு நூறு மீட்டர் போயிட்டு திரும்பி அதேசாலை வழியா வந்தீங்கனா வேறு மாதிரியான ஃபீல் கிடைக்கும். அதை விவரிக்கவே முடியாது.

லே, லடாக்கை முடிச்சிட்டு மணாலி வந்தோம். அங்கிருந்து இப்ப பிரபலமாகிட்டு வரும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கிற்குப் போனோம். இது ரொம்ப ஆபத்தான பகுதி. நூறு கிமீ தூரம் சாலையே கிடையாது. பாறைகளும், கல்லுமாக மண் சாலை இருக்கும். திரும்பவும் அதே வழியில்தான் வரணும். இந்த சாலை ஆறுமாசம் திறந்திருக்கும், ஆறுமாசம் மூடியிருக்கும். குளிர்காலத்துல மூடிடுவாங்க. கஷ்டப்பட்டு போனோம். அது த்ரில் அனுபவமா இருந்தது.

அங்கே ஹிக்கிம் பகுதியில்தான் உலகின் உயரமான தபால்நிலையம் இருக்கு. அந்தத் தபால் நிலையத்திற்குப் போய் நண்பர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பினோம்.
அப்புறம், ரிஷிகேஷ். கேதார்நாத், பத்ரிநாத் போனப்ப அங்க சாலைகளை பிளாக் பண்ணிட்டாங்க. அப்புறம், வாரணாசி வந்தோம். அங்க கோரக்பூர் பக்கத்துல நேபாள எல்லை இருக்குனு மேப்ல பார்த்தோம்.

சரி, இவ்வளவுதூரம் வந்துட்டோம். ஒரு எட்டு நேபாளமும் பார்த்திடுவோம்னு வண்டியை அங்க ஓட்டினோம். நேபாளத்துல ஐந்து நாட்கள் தங்கினோம். அங்கேயும் புதுசா சிம் கார்டு, தவிர பெர்மிட்டும் வாங்கணும். எங்க ப்ளான்படி நாங்க பீகார் வழியா டார்ஜிலிங் போறதுதான். ஆனா, காத்மாண்டு போயிட்டு அங்கிருந்து டார்ஜிலிங் வந்தோம். பிறகு, சிக்கிம் போனோம். அங்க சீனா எல்லையைப் பார்த்திட்டு இறங்கும்போது ஒரு விபத்தாகிடுச்சு…’’ என்கிறார் வருத்தமாக.

‘‘பிரேம் வண்டியை மெதுவாகத்தான் ஓட்டினார். ஆனாலும் மழையில் வண்டி ஸ்கிட்டாகி கீழ விழுந்து எனக்கு எட்டு தையல் போடும்படி ஆகிடுச்சு. நல்லவேளை இடதுபக்கமா விழுந்தோம். வலது பக்கமா விழுந்திருந்தால் அவ்வளவுதான், பெரிய பள்ளத்தாக்குல மாட்டியிருப்போம். அங்க ஒரு குடும்பம் வந்து உதவி செய்தாங்க.

அந்த ஏரியா  முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டுலதான் இருக்கு. என்னை ராணுவ ஆஸ்பிட்டல்ல சேர்த்து தையல் போட உதவினாங்க. அங்க நிறைய பேர் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள். நம்மூர் ஆட்களைப் பார்த்ததும் சந்தோஷமா இருந்தது. நிறைய பேசினோம். அவங்களும் நிறைய உதவிகள் செய்தாங்க.

அங்க குளிர் அதிகம். எவ்வளவு குளிர் அதிகமாகுதோ அவ்வளவுக்கு கைவலியும் அதிகமாகும். எங்களுக்கு நேரமும் இல்ல. சிக்கிம் பெர்மிட் வாங்கி இருக்க வேண்டிய இடம். அதனால, அங்கிருந்து கிளம்ப வேண்டியதாகிடுச்சு. வலியுடனே பயணத்தைத் தொடர்ந்தேன். மேற்கு வங்கம் சிலிகுரி வந்து ஒரு ஆஸ்பிட்டல்ல காட்டினதும் அவங்க, ‘தையல் எல்லாம் பழைய மாடல்ல போட்டிருக்காங்க.

இப்படி இருக்கக்கூடாது. தினமும் டிரஸ்ஸிங் பண்ணணும்’னு சொன்னாங்க. அதனால, ரெண்டு நாட்கள் அங்க தங்கும்படி ஆனது. ஆனா, அங்க கை வீங்கி டாக்டர்கள் பத்து நாட்கள் ரெஸ்ட் தேவைனு சொல்லிட்டாங்க. வேறு வழியில்லாமல் நான் விமானத்துல சென்னைக்கு வரவேண்டியதாகிடுச்சு…’’ என்கிறவர், 12 நாட்கள் கழித்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்.

‘‘பிரேம் அங்கிருந்து வண்டியில் ஒரிசா, தெலுங்கானா, ஆந்திரா எல்லாம் போயிட்டு 12 நாட்கள் கழிச்சு பெங்களூர் வந்தார். எனக்கும் கைவலி சரியானது. நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் பெங்களூர்ல சந்திச்சோம். அங்கிருந்து தமிழ்நாடு, கேரளானு திட்டமிட்டிருந்த பகுதிகளைச் சுத்திப் பார்த்திட்டு சென்னைக்கு வந்து பயணத்தை நிறைவு செய்தோம். மொத்தம் 119 நாட்கள் ஆனது. அதாவது நான்கு மாதங்கள் பயணிச்சிருக்கோம். ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாச்சு. இதுல தங்கும் செலவுதான் அதிகம்…’’ என்கிற லோகேஸ்வரியிடம் அடுத்து என்ன என்றோம்.

‘‘இப்ப இந்த அனுபவங்களை எல்லாம் எங்க யூடியூப் சேனல்ல அப்லோடு செய்திட்டு வர்றோம். இதன்பிறகு, நாங்க போனதுல ராஜஸ்தான், லே, லடாக், வடகிழக்கு மாநிலங்கள்னு சில பகுதிகள் தனிப்பட்ட முறையில் ரொம்பப் பிடிச்சது. அதை மறுபடியும் பார்க்கணும்னு நினைச்சிருக்கோம்.

அதாவது, முழுவதும் பனியாக இருக்கிறப்ப ஜம்மு-காஷ்மீர் எப்படியிருக்குனு பார்க்கணும். அதேமாதிரி ஏழு வடகிழக்கு மாநிலங்கள்ல நடக்கிற திருவிழா கொண்டாட்டங்களை ரசிக்கணும். இப்படி சில ஆசைகளிருக்கு. அதை முடிச்சதும் பைக்லயே பங்களாதேஷ், பர்மா, மலேசியா, சிங்கப்பூர்னு அந்த நாடுகளுக்கு பயணிக்கலாம்னு ஒரு ப்ளான் வச்சிருக்கோம்…’’ ஆர்வமாகச் சொல்கிறார் லோகேஸ்வரி பிரேம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *