தேர்தல் பிரச்சார செலவுகளை கட்டுப்படுத்த விரைவில் புதிய சட்டம்!

இலங்கையில் தேர்தல் பிரச்சார செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் சட்டம் இயற்றப்படவுள்ளது.

அதற்கமைய, வேட்பாளர் ஒருவர் பரப்புரைகளுக்காக எவ்வளவு தொகையை செலவிட வேண்டும் என்பதை தேர்தல் ஆணைக்குழுவே நிர்ணயிக்கும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல்,  நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகிய நான்கையும் மையப்படுத்தியே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது எனவும்,  தேர்தலின் பின்னர் வேட்பாளர்கள் கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் கூறினார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தேர்தல் காலங்களில் பலகோடிகளை செலவளிக்கும் வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைக்கின்றது என்பது தெரியாது. சிலவேளை மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். இதற்கு ஊடகங்களும் துணைநிற்கின்றன. 

எனவேதான் ஊழலுக்கு வழிவகுக்கும் விரும்பு வாக்கு முறைமை இல்லாதொழிக்கப்பட்டு, தொகுதிக்கு பொறுப்புகூறக்கூடிய தேர்தல் முறைமை உருவாக்கப்படும் என்ற உறுதிமொழியை 1994 தேர்தலின்போது சந்திரிக்கா அம்மையார் வழங்கினார். 

2015 ஆம் ஆண்டில் தேர்தலை முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் முற்பட்டோம். இதற்காக 20 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் எம்மால் அப்பணியை தொடர முடியாமல்போனது.

எனவேதான் தற்போது தேர்தல் பிரச்சார செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தயாரிக்கும் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. 

இதற்காக சட்டவரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தல்,  நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகிய நான்கையும் மையப்படுத்தியே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

அந்தவகையில் ஒரு வேட்பாளர் செலவளிக்ககூடிய தொகையை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்கும். ஒவ்வொரு தேர்தலுக்கு அந்த சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமைய செலவீடு அமையும். அரச சொத்துகள் மற்றும் அரச அதிகாரிகளை பயன்படுத்த முழுமையாக தடைவிதிக்கப்படும்.

தேர்தலில் வெற்றி பெற்றாலோ தோல்வி அடைந்தாலோ தேர்தல் நடைபெற்று 3 வாரங்களுக்குள் செலவீடு தொடர்பான கணக்கறிக்கையை சத்திய கடதாசியுடன் சமர்ப்பிக்க வேண்டும். எங்கிருந்து நிதி கிடைத்தது, எவ்வளவு நிதி கிடைத்தது என்பன விவரிக்கப்பட வேண்டும். போலி தகவல்களை வழங்கினால் அபராதம் விதிக்கப்படும். பதவிகூட இல்லாமல் போகலாம். அதேபோல போலி ஆவணங்களையும் முன்வைக்க முடியாது. அது குற்றவியல் குற்றமாக கருதப்படும். – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *