குடி எனும் முதலை!

ஒரு ஊரில் பெரிய பலசாலி ஒருவன் இருந்தான். ஊருக்குள் அவனுக்கு நல்ல செல்வாக்கும் இருந்தது. அந்த செல்வாக்கை இன்னும் அதிகரித்துக் கொள்ள அவன் விரும்பினான். எனவே ஏதேனும் ஒரு பயங்கரமான காட்டு மிருகத்தைப் பிடித்து வளர்த்து , அதை எப்போதும் தன்னுடன் வைத்துக் கொண்டால் தனது மதிப்பு இன்னும் உயரும் என்று நம்பினான்.

ஒரு நாள் அவன் ஆற்றில் குளிக்கும் போது கரையில் ஒரு குட்டி முதலை ஒதுங்கியது. ஆவலுடன் அதைக் கையில் பிடித்து வீட்டுக்கு எடுத்து வந்தான்.
முதலைக் குட்டியைக் கண்டு திடுக்கிட்ட அவனது மனைவியும் , நண்பர்களும் திடுக்கிட்டுப் போனார்கள் . அது விபரீத விளையாட்டு என்று சொல்லி எச்சரிக்கை செய்தார்கள் . அவனோ அதை அலட்சியப்படுத்திவிட்டு முதலையை செல்லமாக வளர்க்கத் தொடங்கினான்.

எங்கே சென்றாலும் அவன் முதலைக் குட்டியோடுதான் சென்று வந்தான். போகும் இடமெல்லாம் மக்கள் மிரண்டு போய்ப் பின் வாங்குவது அவனுக்குப் பெருமையாக இருந்தது. நாளுக்கு நாள் முதலை வளர்ந்த போதிலும் அவன் அதைத் தூக்கி சுமப்பதை விடவேயில்லை.

முதலை இப்போது ஐந்தடி நீளம் வளர்ந்துவிட்டது. எவ்வளவு இறைச்சி போட்டாலும் சாப்பிட்டு விடுகிறது. ஆனால் முதலையின் காரணமாக அவனது மனைவி , பிள்ளைகள் அவனை விட்டு விலகிப் போனார்கள். நண்பர்களும் வருவதில்லை. இருந்தாலும் மற்றவர்கள் அவனைப் பார்த்து பயப்படும் பயம் அவனுக்குப் பிடித்திருந்தது.

ஒரு நாள் முதலைக்குத் தீனி போதவில்லை . இப்போது அது ஆறடி வளர்ந்திருந்தது. அவனோ நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். பசியில் அவனையே கடித்துத் தின்னத் துவங்கியது . நன்கு வளர்ந்துவிட்ட முதலையின் வலிமையோடு அவனால் போராட முடியவில்லை . இரண்டே கடியில் அவன் உயிர் பிரிந்தது..

குடிப் பழக்கமும் இந்தக் குட்டி முதலை போலத்தான் ஆபத்தில்லாத ஒன்று போல வாழ்வில் நுழைந்து ஒரு நாள் நம்மையே விழுங்கி விடும் .
அதில் கிடைக்கும் பெருமையும் , மகிழ்ச்சியும் சில நாள் தான். சீக்கிரமாய் குடி நம்மை அழித்து விடும். குடித்து அழிந்தவர்களும், குடியினால் பிச்சைக்காரர்களானவர்களும் விளையாட்டாய் குட்டி முதலையை வீட்டுக்குள் கொண்டு வந்தவர்கள்தான்.
என்றைக்கானாலும் அதற்கு அவர்கள் இரையாகப் போவது நிச்சயம் . எனவே, குடி எனும் முதலையை இப்போதே கொன்று விடுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *