ராஷ்மிகாவிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வோர்னர்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்  கிரிக்கெட்டில் மட்டுமல்லாது தற்போது சினிமா பாடல்களை ரீல்ஸ் செய்வதிலும் சிக்சர் அடித்து வருகிறார். முன்னதாக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ பட பாடலை ரீல்ஸ் செய்து வெளியிட்டிருந்தார். இது பலராலும் ரசிக்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது போக அவ்வப்போது இதுபோன்று வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வந்த வார்னர் இம்முறை ஒரு படி மேலே போய் நடிகர்களின் முகத்திற்குப் பதிலாக அவரது முகத்தை எடிட் செய்து கிண்டலாக வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றாக ராஷ்மிகாவின் பாடலை, ராஷ்மிகாவின் முகத்திற்குப் பதிலாகத் தனது முகத்தை எடிட் செய்து கிண்டலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவின்  கமெண்டில் ராஷ்மிகாவை டேக் செய்து “சாரி” என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார். 

ராஷ்மிகா மந்தனா இதற்கு விரைவில் கிண்டலாக ஏதாவது ரிப்ளை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா, தற்போது தமிழில் விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இதனிடையே இந்தியில், ‘மிஷன் மஜ்னு’, ‘அனிமல்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தில் நடிக்கவுள்ளார். 

இதனிடையே ராஷ்மிகா அவரது சிறு வயதில் குடும்பச் சூழலைப் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியது, “சிறு வயதில் அதிகம் கஷ்டப்பட்டோம். 2 மாதத்துக்கு ஒருமுறை வீடு மாறிக்கொண்டே இருப்போம். வாடகைக்குப் பணம் இருக்காது. எனக்குப் பொம்மை கூட வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமையில் இருந்துள்ளோம். சிறு வயதிலிருந்தே போராட்டங்களைச் சந்தித்திருக்கிறேன். நான் மனதளவில் இன்னும் பொம்மை வாங்க முடியாத அதே குழந்தையாகவே இருக்கிறேன். நடிப்புக்காக எனக்குக் கிடைக்கும் சம்பளம், அங்கீகாரம் அனைத்தையும் மதிக்கிறேன். இது நிலையானதல்ல என்பதை அறிந்திருப்பதால் என் சிறுவயது அனுபவங்கள், இந்தச் சாதனைகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதைத் தடுக்கின்றன” எனப் பேசியுள்ளார். ராஷ்மிகாவின் இந்தப் பேச்சும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *