உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தை அதிகரிக்க தீர்மானம்!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 20-20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நாளை (13) இடம்பெறவுள்ள நிலையில், குறித்த போட்டிக்காக மேலதிக நேரத்தை அதிகரிக்க சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.

எனினும் இறுதிப் போட்டி நடைபெறும் நாளில் மெல்போர்னில் மழை பெய்ய 100% வாய்ப்பு இருப்பதாக அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இறுதிப் போட்டி மழையால் குறுக்கிடப்பட்டால், நாளை மறுநாள் திங்கட்கிழமை (14) மேலதிக நாளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மெல்போர்னில் நாளை மறுதினமும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

போட்டி இடம்பெறும் தினத்தில் வழங்கப்படும் கூடுதல் நேரத்தை 4 மணி நேரமாக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

இறுதிப் போட்டியில், இரு அணிகளும் தலா 10 ஓவர்கள் விளையாட வேண்டும், இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால், அடுத்த நாள் போட்டி நிறைவடைந்த இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பமாகும்.

அந்த நாளிலும் மழை குறுக்கிட்டால் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தின் சம்பியனாக இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணையாக அறிவிக்கப்படும்.

இதேவேளை, இவ்வருடத்திற்கான 20-20 உலகக்கிண்ண கிரிக்கட் அணியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளின் தலைவர்கள் சம்பியனுக்கான கிண்ணத்துடன் இன்று உத்தியோகபூர்வ புகைப்படம் ஒன்றுக்கு தோன்றினர்.

அந்த புகைப்படமானது மெல்போர்ன் மைதான பார்வையாளர் அரங்கின் கூரை மேலிருந்து பிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *