உயிரிழக்கும் போது நால்வரை வாழ வைத்த இலங்கை நபர்!

பதுளை பொது வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மூளைச்சாவு அடைந்த நபர் ஒருவரின் முக்கிய உறுப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பாக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

இலங்கை விமானப்படை மற்றும் சுகாதார அமைச்சுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி, நேற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதற்காக இலங்கை விமானப்படையின் பெல் 412  உலங்கு வானூர்தி அம்புலன்ஸாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

ஹசலக, மஹாஸ்வெத்தும கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எம்.ஜி.சமிந்த (48), ஹசலக்க பிரதேச சபையின் சாரதியாக கடமையாற்றிவந்தார்.

அவர், பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, கடந்த 26 ஆம் திகதி பேரூந்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த குறித்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

எவ்வாறாயினும் அவர் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்தமையால், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய வைத்தியர்கள் அனுமதி கோரியிருந்தனர்.

இந்தநிலையில் மருத்துவமனையில் உள்ள அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் முடிவு செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பிரகாரம், பதுளை பொது வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் சம்பவம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அறிவித்து, தேவையான ஏற்பாடுகளை தயார் செய்தனர்.

அதனையடுத்து, விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளி கொண்டுசெல்லப்பட்டார். அவரது இதயம் வெளிநாட்டு வைத்தியர் குழுவின் உதவியுடன் மற்றுமொரு நோயாளிக்கு பொருத்தப்பட உள்ளது.

அத்துடன், அவரது நுரையீரல் மற்றும் கல்லீரல் கண்டி வைத்தியசாலையில் உள்ள நோயாளி ஒருவருக்கும், இரண்டு சிறுநீரகங்களும் பதுளை பொது வைத்தியசாலையில் உள்ள இரண்டு நோயாளர்களுக்கும் பொருத்தப்பட உள்ளதாக பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

நோயாளியின் முக்கிய உடல் உறுப்புகள் அகற்றப்பட்டதன் பின்னர் உடலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *