மழையால் பாதிக்கும் உலக கிண்ணப் போட்டிகள் அச்சத்தில் அணிகள்!

உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டங்கள், கனமழை காரணமாக அடுத்தடுத்து ரத்தாவது அணிகளின் வெற்றி வாய்ப்பை பாதிப்பதுடன் ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 2020ம் ஆண்டு நடைபெற இருந்த  டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2022க்கு தள்ளி வைக்கப்பட்டு கடந்த 16ம் தேதி தொடங்கியது.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில், முதலில் நடந்த தகுதிச் சுற்றில் 8 அணிகள் 2 பிரிவுகளாகக் களம் கண்டன. அந்த சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் தகுதிச் சுற்றுடன் மூட்டை கட்டியது.

அடுத்து சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் பல ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. ஜிம்பாப்வேக்கு எதிராக தென் ஆப்ரிக்காவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், ஆட்டம் கைவிடப்பட்டு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி நம்பிக்கையுடன் இலக்கை துரத்திய நிலையில், துரதிர்ஷ்டவசமாக மழை குறுக்கிட… டி/எல் விதிப்படி தோற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதே நாளில் நடைபெற இருந்த நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், மெல்போர்னில் நேற்று நடைபெற இருந்த ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து, இங்கிலாந்து – ஆஸ்திரேலியா ஆட்டங்களும் மழையால் ரத்தாகின. இப்படி தொடர்ச்சியாக பல ஆட்டங்கள் மழையால் ரத்தாவது, அணிகளின் வெற்றி வாய்ப்பையும் அரையிறுதி கனவையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

இதனால் வீரர்களும், ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், எஞ்சியுள்ள ஆட்டங்களாவது திட்டமிட்டப்படி முழுமையாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *