ஜெயலலிதா மரணம் தொடர்பில் சசிகலாவிடம் விசாரணை நடத்த நீதிபதி பரிந்துரை!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, அவருடைய உறவினர் டாக்டர் சிவகுமார், மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. இதனால், 4 பேர் மீதும் விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தம் தொடங்கினார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் சேர்ந்து ஆட்சி அமைத்த பிறகு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் 2017 செப்டம்பர் 25ம் தேதி தொடங்கப்பட்டு 2017 செப்டம்பர் 30ம் தேதி செயல்பட தொடங்கியது.

இந்த ஆணையம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர், டாக்டர்கள், மருத்துவ நிபுணர்கள், போயஸ் தோட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள், ஓட்டுநர்கள், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது. சசிகலா மற்றும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்கள், பொதுமக்களிடம் பெற்ற பிரமாண பத்திரங்கள், சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனது அறிக்கையை அளித்தது. பின்னர் அமைச்சரவையில் இந்த அறிக்கை முன் வைக்கப்பட்டது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அவை வருமாறு: 2016 செப்டம்பர் 20ம் தேதி ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அப்போது, சபரிமலைக்கு சென்றிருந்த டாக்டர் சிவகுமாரிடம் சசிகலா காய்ச்சல் தொடர்பாக கூறியுள்ளார். அதற்கு பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்று டாக்டர் சிவகுமார் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுத்துள்ளார். மீண்டும் இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் வழக்கமான இடைவெளியில் ஜெயலலிதாவுக்கு சசிகலா பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுத்துள்ளார். அதுவும் ஆதாரமாக உள்ளது.

  • தடுமாறிய ஜெயலலிதா
    2016 செப்டம்பர் 21ம் தேதி காலை 11 மணிக்கு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாதபோதும்  தலைமை செயலகத்தில் 7 பேருந்துகள் தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போயஸ்கார்டனை அடைந்ததும், அவர் காரில் இருந்து இறங்கும்போது தன் நிலை தடுமாறி கீழே விழவிருந்து, சமாளித்து, தனித்து வீட்டிற்குள் சென்றார். காரில் இருந்து இறங்கும்போது தன் நிலை இழந்தும், அவரால் வீட்டிற்குள் வர முடிந்தது என ஆணையம் முடிவு செய்கிறது.
  • மயங்கி விழுந்தார்
    செப்டம்பர் 22ம் தேதி சசிகலா, டாக்டர் சிவக்குமாருக்கு போன் செய்து ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் போயஸ்கார்டன் வரும்படி கூறினார். அவர் இரவு 8.45 மணிக்குப் பிறகு ஜெயலலிதாவின் வீட்டை அடைந்துள்ளார். அவர், ஜெயலலிதாவின் படுக்கை அறையில் நுழைந்தபோது, சசிகலா, ஜெயலலிதாவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு சில முறை இருமல் வந்துள்ளது. அவர் ஏற்கனவே மருந்து சாப்பிட்டதாக சசிகலா சொன்னார். பிறகு ஜெயலலிதா தன் படுக்கையில் சாய்ந்தார். அப்போது ஜெயலலிதாவின் அறையிலேயே தங்குவதாக சசிகலா கூறினார். ஆனால் ஜெயலலிதா மறுத்து விட்டார். பின்னர் ஜெயலலிதா பல் துலக்குவதற்காக (தூங்குவதற்கு முன்) குளியலறையில் சிறிது நேரம் இருந்தார். பின்னர் ஜெயலலிதா வெளியே வந்து படுக்கையை நோக்கி நடந்தார். படுக்கையை நெருங்கும்நேரத்தில் அவர் மயங்கி சசிகலா மற்றும் டாக்டர் சிவக்குமார் மீது விழுந்தார். சசிகலா அவரை படுக்க வைத்தார். சிறிது நேரத்தில் ஜெயலலிதா மயக்கமடைந்தார். அப்போது ஜெயலலிதாவின் பாதத்தில் டாக்டர் சிவக்குமார் மசாஜ் செய்ததாக சசிகலா கூறியுள்ளார்.
  • ஆம்புலன்ஸ் வந்தது
    அப்போது, டாக்டர் சிவக்குமார், அப்போலோ மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு ஜெயலலிதாவை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தேவை என்று கூறியுள்ளார். 10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. பின்னர் ஜெயலலிதா அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். சரியாக இரவு 9.45 மணிக்கு கார்டனில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 10.15 மணிக்கு மருத்துவமனையை ஆம்புலன்ஸ் அடைந்தது என மருத்துவ பதிவேடுகளில் பதிவாகியுள்ளது.
  • சுய நினைவு இல்லை
    ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்தார் என்பது டாக்டர் சினேகாஸ்ரீ சாட்சியத்திலிருந்து தெளிவாக தெரிகிறது. ஜெயலலிதாவின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்ட செப்டம்பர் 27ம் நள்ளிரவு வரை சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பின்னடைவுக்கு வழிவகுத்த இதய பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க தவறிவிட்டனர்.

8 எல்லாமே ரகசியம்!
ஜெயலலிதா மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவின் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதா பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவுநோய், ஹைப்போ தைராய்டிசம், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு சிறுநீர்த் தொற்று காரணமாக செப்சிஸ் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2016 செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. டாக்டர் சமின் சர்மா ஆஞ்சியோ செய்யத் தயாராக இருந்து, ஜெயலலிதா ஏற்றுக் கொண்ட பிறகு நுரையீரல் நிபுணரான டாக்டர் பாபு ஆபிரகாம், ஏன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவை அழைக்க வேண்டும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சர்மாவை ஏற்பாடு செய்தவர் ஜெயலலிதாவின் உறவினர் என்று கூறியுள்ளனர். ஆனால் உறவினர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை. சரியான நேரத்தில் ஆஞ்சியோ செய்யப்படாமல் இருக்க சசிகலாவால் திறமையாக உத்தி கையாளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு மிகப்பொருத்தமான சிகிச்சை முறைக்கு தேவையான அனைத்து முயற்சிகளும் சசிகலாவால் செய்யப்பட்டிருக்க வேண்டும். வியக்கத்தக்க வகையில் மற்ற அனைவரையும் புறந்தள்ளியுள்ளனர். ஜெயலலிதாவின் உடல் நிலை மற்றும் சிகிச்சையின் போக்கை பற்றிய நம்பத்தக்க, உண்மையான நிகழ்வுகளை வெளிப்படுத்தாததால் சிகிச்சையின் முழு விவரமும் வெளிப்படைத்தன்மையின்றி ரகசியமாக்கப்பட்டது. நோயாளி சுயநினைவுடன் இருந்தபோது அவரது உடல் பிரச்னைகள் மற்றும் செய்யப்பட வேண்டிய சிகிச்சை குறித்து அவருக்கு தெரிவிக்கப்படவில்லை. அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் ஏன் நம்பத்தக்கவர்களாக கருதப்படவில்லை என்பதும் புதிராகவே உள்ளது. இந்த திட்டம் அனைத்தும் அறிவார்ந்த வகையில் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • ஆஞ்சியோ ஒத்திவைப்பு
    ஜெயலலிதாவுக்கு இதயம், நுரையீரல் வீக்கம் உள்பட பல மோசமான உபாதைகள் இருந்தது குறித்த உண்மை யாருக்கும் தெரிவிக்கப்படாதது ஏன் என்பது திகைப்பூட்டுவதாக உள்ளது. மருத்துவர் ரிச்சர்டு பீலே கொடுத்த 6 பக்க அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு பக்கவாதம், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். டாக்டர் பாபு ஆபிரகாம் அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்டு ரஸ்ஸலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும்போது ரஸ்ஸல், ஆஞ்சியோ மற்றும் அறுவை சிகிச்சை செய்ய ஏற்ற நேரம் என்று அக்டோபர் 11ம் தேதி இரவு 11 மணிக்கு தெரிவித்தார். ஆனால், அது தேவையில்லை என்று டாக்டர் பாபு ஆபிரகாம் தெரிவித்ததால் அந்த சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டது. மருத்துவர்களும், அறுவை சிகிச்சை நிபுணர்களும் முரண்பட்ட கருத்துக்களிலிருந்து இணைந்து நோயாளியின் நன்மைக்காக ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் செய்யப்படவில்லை.
  • சசிகலா கட்டுப்பாட்டில்…
    அரசிடம் நம்பிக்கை கொள்ளாமல் சிகிச்சை முழு நடைமுறையும் சசிகலா மற்றும் அவரது மருத்துவ உறவினர்கள் மற்றும் ஒரு சிலரின் தனிப்பட்ட குழுவின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. சசிகலா மீது பத்திரிகையில் வெளியான செய்தியால் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சிகிச்சை தொடர்பாக யாருக்கும் தெரியப்படுத்தாமலும், ரகசியம் காத்தும் அவரின் சிகிச்சைக்காக வெளி மருத்துவர்களை வரவழைத்ததுபோல் காட்சிப்படுத்தி ஆஞ்சியோ, அறுவை சிகிச்சை செய்யவிடாமல் சசிகலா மிகவும் எச்சரிக்கையும் செயல்பட்டுள்ளதாகவே ஆணையம் கருதுகிறது.
  • வாழ்த்திய கலைஞர்
    ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் கலைஞர் அறிக்கை அளித்துள்ளபோதும், மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்த புகைப்படம் வெளியிடப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தபோதும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவர் கூறியபோதும் அது புறக்கணிக்கப்பட்டது. ஜெயலலிதாவுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் விரைவில் குணமடைய கலைஞர் வாழ்த்தினார்.
  • இறப்பு தேதி சர்ச்சை
    மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு எம்பாமிங் தொடங்கியபோது ஜெயலலிதா 10 முதல் 15 மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டார் என கண்டறிந்தார்.  
    ஜெயலலிதாவின் மருமகன் தீபக் சாட்சியத்தில் ஜெயலலிதாவின் டிரைவர் மற்றும் பூங்குன்றன் ஆகியோரின் தகவலின் அடிப்படையில் 4ம் தேதி மதியம் 3.30 மணிக்குத்தான் அவர் இறந்துள்ளார். அதன் அடிப்படையில்தான் முதலாம் ஆண்டு நினைவை அனுசரித்தேன் என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தாமதத்திற்கு சிபிஆர் மற்றும் ஸ்டெர்னோடமி என்ற செயல்முறைகள் காணமாக தந்திரமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணி இறந்த நேரம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவமனை செவிலியர்கள், பணி மருத்துவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50 மணிக்குள் ஆகும்.
  • வாரிசு…சூழ்ச்சி…
    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் தமிழக முதல்வர் பதவிக்கு தன்னை பொருத்திக்கொள்ள தயார் நிலையிலிருந்து ஜெயலலிதாவின் வாரிசாக ஓ.பன்னீர்செல்வம் தன்னை நிலைநிறுத்தி கொண்டது தற்செயலான நிகழ்வல்ல. அப்படி தோன்றவில்லை. அதிகாரமையத்தின் மர்மமான சூழ்ச்சிகளால் புதிதாக கிடைத்த பதவி அவருக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை. அதனால் தர்மயுத்தம் தொடங்கினார், சிபிஐ விசாரணை கோரினார்.
    அதன்பின்னர் துணை முதல்வர் பதவி கிடைத்தது.

அதன்பிறகு ஒரு புதிய பரிமாணத்தில், செய்தித்தாளில் வெளியான மறைந்த முதல்வரது மறைவில் மறைந்துள்ள மர்மம் பற்றிய பொதுமக்களின் அறிக்கைகள், வதந்திகள், சந்தேகங்களை கொண்ட செய்தியின் அடிப்படையிலேயே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். நேர்மையாகவும், நியாயமாவும் நிகழ்வுகளின் உண்மை சூழலை வௌிக்கொணரும் நோக்கத்துடன் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதன் காரணங்களை ஓ.பன்னீர்செல்வம் நிராகரித்தது, தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைகிறது.

  • மர்ம உறவினர் யார்?
    ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திலிருந்து இறக்கும் வரை ஒவ்வொரு கட்டமாக முதல்வரின் உடல் நிலையை ஆணையம் விரிவாக விசாரித்தது. அவருக்கு ஏற்பட்ட கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், மாறுபட்ட ரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், எரிச்சல் கொண்ட குடல் நோய்குறி, வயிற்றுப்போக்கு, மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார் என்ற பல்வேறு மருத்துவர்களின் நோயறிதலையும் ஆணையம் பதிவு செய்துள்ளது.
    டாக்டர் சமின் சர்மாவை சசிகலாவின் உறவினர்தான் அழைத்துவந்துள்ளது தெரியவந்தாலும் அந்த உறவினர் யார் என்று ஒருவரும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக மயிலாப்பூர்  எஸ்.பி.(செக்யூரிட்டி) அலுவலகத்திடம் கேட்டதற்கு எந்த விபரமும் தரப்படவில்லை. சசிகலா சம்மந்தப்பட்டதால் துறை ஏன் எதையும் வெளிப்படுத்தவில்லை என்பதை ஆணையத்தால் புரிந்துகொள்ள இயலவில்லை. வதந்திகளால்தான் இந்த ஆணையம் தேவைப்பட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினாலும் இங்கு கூறப்படும் அரசியல் குறித்த கண்ணோட்டம் தற்செயலானவை மட்டுமே தவிர தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு எந்த தொடர்பும் இல்லை. இரு கட்சிகளும் அரசியல் ரீதியாக வேறுபட்ட சித்தாந்தங்களை கொண்டிருந்தாலும் ஆணையத்தின்மீது நம்பிக்கைவைத்து விசாரணை தொடர அதன் பதவிக்காலத்தை நீட்டித்ததற்காக தமிழ்நாடு அரசுக்கும் முதல்வருக்கும் ஆணையம் நன்றி தெரிவிக்கிறது.

  • பரிந்துரை…
    மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு சசிகலாவை குற்றம்சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. இந்த அனைத்து கருத்துக்களிலிருந்தும் வி.கே.சசிகலா, டாக்டர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைக்கிறது. அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் மீதும் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • அணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள்
    ஜெயலலிதாவை சிகிச்சைக்காக ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு கொண்டு செல்லும்போது அந்த வராண்டாக்களில் இருக்கும் கேமராக்கள் அணைக்கப்பட்டுள்ளன. காவல் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி இந்த செயல்பாடுகள் நடந்துள்ளன. சிகிச்சை அளிக்கப்பட்ட மாடியில் பலத்த பாதுகாப்பு இருந்ததுடன் அங்கு நுழையும் நபர்கள் கண்காணிக்கப்பட்டனர். சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த
டாக்டர்களின் கட்டணம்
டாக்டர் ரவி வர்மா (தீவிர சிகிச்சை மருத்துவர் – ரூ.2 லட்சம்
என்.அசோக் – ரூ.1 லட்சம்
பி.வி.சந்திரசேகரன் இதய நோய் நிபுணர் – ரூ.20 ஆயிரம்
கே.சாந்தி – ரூ.1 லட்சம்
ரிச்சர்டு பீலே – ரூ.49 லட்சத்து 81 ஆயிரத்து 200
ஏ.கே.சீதாராமன் அனெஸ்தீசியா – ரூ.1லட்சம்
மவுன்ட் எலிசபெத் (ஆர்சிட் மருத்துவமனை) பிசியோதெரபி – ரூ. ஒரு கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 319

  • சுகாதார துறை செயலரின் பதிலால் எழுந்த சந்தேகம்
    நீதிபதி தனது அறிக்கையில், நோயாளியின் உடல் நிலை மோசமாகி  கொண்டிருக்கும்போது அவரை காப்பாற்றும் ஒட்டுமொத்த முயற்சியில் அவருக்கு  அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய தகவலை பெற ஆணையம் கேட்டபோது சுகாதாரத்துறை  செயலாளரின் சாட்சியம் பொறுப்பற்று, மிகுந்த வருத்தமளிக்கும் வகையில்  இருந்தது. எதுவும் முறையாக இல்லை என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக  இருந்தது. சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாதது ஏன் என்று  கேட்டபோது அத்தகைய நடவடிக்கை நமது இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்தும் செயலாக இருக்கும் என்று அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் பதிலளித்தது வியப்பில் ஆழ்த்தியது. வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதை தவிர்ப்பதற்காகவே  இந்திய மருத்துவர்கள் அவமதிப்பு என்ற கருத்தை சுகாதாரத்துறை செயலாளர் முன்வைத்தார். இது மிகவும் தவறானது என்று கூறியுள்ளார்.
  • இளநீர், வாழைப்பழம்
    2016 நவம்பர் 6 மற்றும் 7ம் தேதி ஆப்பிள், ரொட்டி, இளநீர் 70 மி.லி. காலை 11 மணிக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம், 12 மணிக்கு உருளைக்கிழங்கு ஒரு கப், 12.25 மணிக்கு பிஸ்தா ஐஸ்கிரீம் தலா 1 ஸ்பூன் மற்றும் இளநீர் 100 மி.லி. மற்றும் 2.30 மணிக்கு பிளாக் டீ 10 மி.லி. இரவு 4 ஸ்பூன் தயிர் சாதம், உருளைக்கிழங்கு மற்றும் மலை வாழைப்பழம், 7 மற்றும் 8.11.2016 நாட்களின் இது போன்ற உணவுகளே வழங்கப்பட்டது. காலையில் கிச்சடி, இளநீர், ஆப்பிள் துண்டுகள், திராட்சை, உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ், சாதம்,ஐஸ்கிரீம் மற்றும் உருளைக்கிழங்கு பொரியல் போன்றவை 1200 கலோரிகள் என்று வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டது. 6.11.2016 மற்றும் 7.11.2016 ஆகிய நாட்களில் மருத்துவர்களின் அனுமதியுடன் சாம்பார் சாதம்,உருளைக்கிழங்கு, பிஸ்தா, வெண்ணிலா மற்றும் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு வழங்க வேண்டிய உணவை அவர் மட்டுமே முடிவு செய்தார்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு தேவையான உணவு வழங்கப்பட்டது. அவர் எடுத்துக்கொண்ட உணவிற்கும் அவரது இருதய செயல் இழப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே உணவு இருந்தது என தலைமை உணவு நிபுணர் தெரிவித்தார். ஜோஸ்னமோல் ஜோசப் என்ற செவிலியர் தான் மெனுவை கூற அப்போலோ கேன்டீன் அவற்றை அனுப்பி வைக்கும். அவர் கேக் அல்லது இனிப்பு பொருட்களை எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் ஒருமுறை அல்வா எடுத்துக்கொண்டார். ஜெ. விருப்பத்திற்கேற்ப உணவு வழங்கப்பட்டது என மருத்துவர் பாபு ஆபிரகாம் கூறினார்.

இதில் முக்கியமாக கவனிப்படவேண்டியது என்னவென்றால் பெட்டாசியம் மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொள்வது அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு கட்டுப்படுத்த வேண்டி இருந்தாலும் எவ்வித உணவு கட்டுப்பாடுமின்றி மேற்கூறிய உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உணவு – ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்காமல் இருந்ததால் அவருடைய உடல்நிலை வேகமாக மோசமடைந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா வெளிநாடு சென்றிருந்தால் மருத்துவமனையில் சாதாரண நோயாளிகளை போல இருந்திருப்பார். ஜெயலலிதாவைவிட செவிலியர்கள் அதிகம் அதிகாரம் செலுத்தியிருப்பார்கள் என மருத்துவர் பாபு ஆபிரகாம் தெரிவித்தது இந்த ஆணையம் நினைவு கூர்கிறது. அப்போலோ மருத்துவனையில் இருந்ததால் ஜெயலலிதா உணவு கட்டுப்பாட்டில் உணவியல் நிபுணரால் வலியுறுத்த முடியவில்லை.

  • ஜெயலலிதா- சசிகலா உறவு இயல்பானதாக இல்லை
    நீதிபதி ஆறுமுகசாமி தனது அறிக்கையில், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு தனது போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா தனியாக வசித்து வந்தார். ஜெயலலிதாவின் நெருங்கிய ஆலோசகரான சசிகலா போயஸ்கார்டனுக்கு இடம்பெயர்ந்தார். இருவருக்குமிடையே இணக்கம், ஒற்றுமையினால் அவர்களிருவரும் உடன்பிறவா சகோதரிகள் என்றழைக்கப்பட்டனர். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் கட்சியையும் முதல்வர் பதவியையும் அபகரிக்க சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் பெங்களூரில் ரகசிய திட்டம் தீட்டியதாக ஒரு பத்திரிகையில் செய்தி வௌிவந்ததன் அடிப்படையில் 2011 ஜனவரியில் அதிமுக மாநாட்டில் சசிகலாவை கடுமையான வார்த்தைகளால் தாக்கினார் ஜெயலலிதா. நம்பிக்கை துரோகம் செய்ததாக வெளிப்படையாக குற்றம்சாட்டப்பட்டார் சசிகலா.

அவருடன் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் எவ்வித தொடர்பும் வைக்கக் கூடாது  என்று எச்சரிக்கப்பட்டனர். இருவருக்கும் இடையேயான நட்புரிமை மறைந்து பிரவினை ஏற்பட்ட இந்நிகழ்வு, சில சமயங்களில் உண்மை, கற்பனையிலும்  வலிமையானது என்பதை தெளிவாக்குகிறது. பின்னர் ஜெயலலிதாவிடம்  நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டு மீண்டும் ஒன்றாக வசிக்கத் தொடங்கினர். ஆனால், சசிகலாவின் குடும்ப உறுப்பினர்களை கார்டனுக்குள் ஜெயலலிதா திரும்ப  அனுமதிக்கவில்லை. இருவருக்கும் இடையேயான உறவு இயல்பானதாக தோன்றினாலும், பிளவிற்கு முன்னர் இருந்ததைப் போல நட்புரிமை இல்லை என்பதை கிடைக்கப் பெறும் பதிவுகளில் இருந்து அறியலாம். ஜெயலலிதா 2016 செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை சசிகலா குழப்பநிலையிலேயே இருந்து வந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.  

  • பாராசிட்டமால் மட்டும் கொடுத்த டாக்டர்
    நீதிபதி தனது அறிக்கையில், 2016 செப்டம்பர் 22ம் தேதி காலை 11 மணிக்கு கார்டனில் இருந்து அழைப்பு வந்ததும் ஜெயலலிதாவின் தனிப்பட்ட மருத்துவரான டாக்டர் சிவக்குமார் போயஸ்கார்டனுக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து  விசாரித்தார். நலமாக இருப்பதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் நோயாளியை நேரடியாக பரிசோதிக்கவில்லை. வேறு மருத்துவரிடமும் ஆலோசனை பெறவில்லை, வேறு மருத்துவமனைக்கு செல்லவும் அறிவுறுத்தவில்லை. ஜெயலலிதா இரண்டு நாட்களுக்கும் மேலாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால், அவருக்கு போதுமான கவனிப்பு மற்றும் அதிக எச்சரிக்கையுடன் அவரது காய்ச்சலுக்கான காரணம் மற்றும் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை முறையைப் பரிந்துரைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்திருந்தால் 22ம் தேதி காலையிலேயே அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர் பாதிக்கப்பட்ட நோய்க்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களால் பரிசோதித்து, சிகிச்சையை முடிவு செய்திருக்க முடியும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சாதாரண நபர் அல்ல. மாநிலத்தின் முதல்வர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு இடைவிடாத காய்ச்சல் இருந்தது. அதற்காக பாராசிட்டமால் மட்டும் அளிக்கப்பட்டது. அன்று காலை அவரை ஏன் பரிசோதிக்கவில்லை என்பதற்கு டாக்டர் சிவகுமாரிடம் இருந்து பதில் இல்லை. சிகிச்சைக்காக பரிசோதித்திருக்க வேண்டும். எதிர்கால சிகிச்சையின் போக்கையும் பரிந்துரைக்க ஜெயலலிதாவிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஆணையத்தின் பார்வையில் இது சுத்த அலட்சியம் எனலாம் என கூறியுள்ளார்.

  • ஒரே நபரின் குற்றம்
    அப்போதைய  தலைமைச் செயலாளர் ராமமோகன ராவைப் பொறுத்தவரை பல்வேறு நாட்களில் 21  படிவங்களில் கையொப்பமிடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை என்பதைத் தவிர அவருக்கு எதிராக குறைகள் எதையும் காணவில்லை. நிச்சயமாக இது ஒரு நபரால் செய்யப்பட்ட மாபெரும் குற்றமாகும். இது  முதல்வரின் உயிர் தொடர்பானது என்பதால் அதற்கான விளைவுகளை நிச்சயம் பெறுவார் எனவே விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *