இலங்கையின் இரத்தினக்கல் சந்தையில் 15 சதவீதம் போலிக் கற்கள்!


(எம்.எல்.எஸ்.முஹம்மத்)
நிவித்திகல கரவிட்ட காமினி மத்திய மகா வித்தியாலயத்தில் வர்த்தகப் பிரிவில் உயர் கல்வியைத் தொடர்ந்த நீல் பெர்னான்டோ அழகு சாதன பொருட்களுக்கான இரத்தினபுரி மாவட்ட விற்பனை பிரதிநிதியாக தொழில் உலகிற்கு நுழைகிறார்.தனது அறிவு மற்றும் திறன்கள் ஊடாக மிகக் குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியில் முன்னேறிய நீல் பல கிழக்காசிய நாடுகளுக்கும் தனது வர்த்தகம் தொடர்பில் பல விஜயங்களை மேற்கொண்டு உள்நாட்டில் பல அழகு சாதன நிலையங்களை ஆரம்பித்து தனது வியாபாரத் துறையை மேம்படுத்துகிறார்.
இரத்தினபுரி நகரில் நீல் ஆரம்பித்திருந்த அழகு சாதன நிலையத்திற்கு இளைஞர்கள் மற்றும் யுவதிகள் உட்பட மாணிக்க வியாபார சமூகத்தை சார்ந்த பலரும் அடிக்கடி வருகை தர ஆரம்பித்தனர்.மாணிக்க வியாபாரிகளுடன் ஏற்பட்ட தொடர்ச்சியான உறவும் நெருக்கமும் நீலையும் அவ்வியாபாரத்தில் இணைத்துக் கொண்டது.தான் அறிந்த சமூகத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்த பலரும் எந்தவொரு கல்வி அறிவும் இன்றி மாணிக்க வியாபாரத்தின் ஊடாக பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்திருந்ததுடன் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் சமூக அங்கீகாரத்தையும் கொண்டிருந்ததை அவதானித்த நீலும் தனது தனது நேரத்தையும் முயற்சியையும் மாணிக்க வியாபாரத்தில் செலவிட ஆரம்பித்தார்.
தனக்கு மிகவும் அறிமுகமான ஒருசில நண்பர்களுடன் ஒன்றினைந்து தினமும் காலையில் நிவித்திகல மாணிக்க சந்தைக்கும் அதன் பின்னர் இரத்தினபுரி மற்றும் பெல்மதுல்ல மாணிக்க சந்தைகளுக்கு செல்வதற்கும் மாணிக்கக் கற்களை கூட்டாக வாங்குவதற்கும் என தன்னை நன்றாக பழக்கப்படுத்திக் கொண்ட நீல் பெர்னான்டோ ஆயிரம் பத்தாயிரம் ஒரு லட்சம் மற்றும் ஐந்து லட்சம் ரூபா என தனது மாணிக்க வியாபாரத்தின் ஊடாக எதிர்பார்க்காத இலாபங்களையும் பெற்றுக் கொள்கிறார்.தனது வியாபார நடவடிக்கைகள் அனைத்தையும் மாணிக்க வியாபாரமாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பதை அறிந்திருந்த அவரின் நண்பர்கள் பலரும் அதற்கு ஊக்கமளித்துக் கொண்டிருந்தனர்.
இரத்தினக்கல் சந்தைகள்
அன்று வழமை போல காலை 6 மணிக்கு நிவித்திகல மாணிக்க சந்தைக்கு சென்றிருந்த நீலுக்கு எதிர்பாரதவிதமாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு மாணிக்க வியாபாரியை சந்திக்க நேர்ந்தது.மாணிக்கம் தொடர்பில் நீலுக்கிருந்த ஆர்வத்தையும் அவனின் பொருளாதார வளர்ச்சிகளையும் பற்றி நீலின் நண்பர்கள் ஊடாக அறிந்திருந்த தாய்லாந்து நாட்டு மாணிக்க வியாபாரி நீலுடன் தொடர்ச்சியாக மாணிக்க வியாபாரத்தை முன்னெடுக்க ஆரம்பித்தான்.வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வரும் மாணிக்க வியாபாரத்தின் உத்திகளை நன்கு அறிந்திருந்த தாய்லாந்து நாட்டு மாணிக்க வியாபாரி நீலுக்கு 15 கரட் பெறுமதியான சிவப்பு ஸபாயா மாணிக்கக் கல்லொன்றை 35 இலட்சத்திற்கு விற்க முயற்சித்தான்.சிவப்பு ஸபாயாவின் உயர்வையும் அதற்கான சந்தைக் கேள்வியையும் பற்றி அறிந்திருந்த நீல் அதை தனது நண்பர்கள் எவருக்கும் சொல்லாமல் உடனடியாக பணம் கொடுத்து வாங்கிக் கொண்டான். 35 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்ட அந்த தாய்லாந்து நாட்டு மாணிக்க வியாபாரி மறுநாள் அதிகாலையிலேயே தான் தாயகம் செல்ல இருப்பதாகவும் அங்கிருந்து நீலுக்கு இன்னும் பல சிவப்பு ஸபாயா கற்களை கொண்டுவந்து தருவதாகவும் குறிப்பிட்டே தனது வியாபாரத்தை அவன் மேற்கொண்டுள்ளான்.
பாரிய நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் மேற்படி சிவப்பு ஸபாயா மாணிக்கக்த்தை கொள்வனவு செய்த நீல் இரண்டு வாரங்களின் பின்னர் தனக்கு மிகவும் அறிமுகமான ஒரு நண்பனின் உதவியுடன் குருவிட்ட பகுதியிலுள்ள பிரபல மாணிக்க வியாபாரி ஒருவருக்கு 1 கோடி ரூபாய்க்கு அக்கல்லை விற்பனை செய்யும் நோக்குடன் அவனிடம் சென்றான்.
நீல் தன்னிடமிருந்த சிவப்பு மாணிக்கத்தை மேற்படி பிரபல மாணிக்க வியாபாரிக்கு காட்டியபோது அந்த மாணிக்கம் தொடர்பிலும் அதன் உண்மைத் தன்மை தொடர்பிலும் தனக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி ஆய்வுகூட சான்றிதழை பெற்று வருமாறு நீலை அந்த பிரபல மாணிக்க வியாபாரி திருப்பி அனுப்பினார்.
நீல் தனக்குள் ஒரு தடுமாற்றத்துடன் ஆய்வுகூட சான்றிதழுக்காக அந்த சிவப்பு மாணிக்கத்தை சமர்ப்பித்தார்.காலையில் பரிசோதனைக்கு சமர்பித்த அந்த சிவப்பு மாணிக்கத்திற்கு அன்று மாலையாகும் போது சான்றிதழ் கிடைக்குமென அவன் உறுதியுடன் நம்பியிருந்தான்.ஆனால் நீலின் அந்த மாணிக்கக் கனவும் நம்பிக்கையும் அது தொடர்பான அனைத்து எதிர்பார்ப்புக்களும் வெறும் ஐந்து மாணித்தியாலயங்களில் அழிந்து போனது.மாணிக்க ஆய்வு கூடம் அவனுக்கு சான்றிதழ் வழங்க மறுத்தது.அது விஞ்ஞான ஆய்வு கூடம் ஒன்றில் சிவப்பு நிற மாணிக்கத்திற்குரிய இரசாயன மூலக்கூறுகளை பயன்படுத்தி மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை மாணிக்கம் அன்றி பூமியிலிருந்து கிடைக்கப்பெற்ற இயற்கை மாணிக்கம் அல்ல என நீலுக்கு அறிவிக்கப்பட்டது.
இலங்கைக்கு எப்படி வருகின்றன?

சிவப்பு மாணிக்கம் என்ற பெயரில் போலி செயற்கை மாணிக்கத்திற்காக 35 லட்சம் ரூபாவை பறிகொடுத்த நீல் நிவித்திகல பொலிஸ் நிலையத்தில் தனது முறைப்பாட்டையும் பதிவு செய்தார்.எனினும் குறித்த தாய்லாந்து வியாபாரி தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இல்லாததால் விசாரணைகள் எதனையும் தொடர்ந்து முன்னெடுக்க முடியாதுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தனக்கு மேற்படி நிகழ்வு தொடர்பில் நீல் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கிறார்.
இரத்தினக்கல் வியாபாரம் தொடர்பில் சட்ட ரீதியான நடைமுறைகள் எதுவும் இல்லாததால்தான் போலியான கற்கள் சந்தைகளுக்கு வருகின்றன.நானும் மாணிக்க வியாபார நுணுக்கங்கள் பற்றி பெரிய அளவில் எதனையும் அறிந்திருக்கவும் இல்லை.நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு மாணிக்க வியாபாரம் தொடர்பிலும் சட்ட ரீதியான அங்கீகாரம் காணப்படுமானால் பெரிய அளவில் இதைக் கட்டுப்படுத்த முடியும்.இரத்தினக்கல் வியாபார சமூகம் இந்த விடயம் தொடர்பில் தமது முன்னெடுப்புக்களை விரைவு படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கிறார்.
நீல் பெர்னான்டோவின் கோரிக்கை தொடர்பில் இரத்தினபுரி மாணிக்க வர்த்தக சங்கத்தின் தலைவர் அத்துகொரள லியனகேயை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு பதில் தருகிறார்.
கடந்த பல தசாப்தங்களாக மிகவும் கௌரவமாக மேற்கொள்ளப்பட்டுவந்த இரத்தினக்கல் வியாபாரம் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.அதிலும் குறிப்பாக நாட்டில் நிலவிய கொரோனா பாதிப்புக்கள் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் உட்பட அரசின் பொருளாதார வீழ்ச்சி ஆகிய முக்கிய காரணங்களால் நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு மாணிக்க வியாபாரிகள் பலர் இலங்கை வர தயங்குகின்றனர்.இதனால் எமது வியாபாரம் மிகவும் வீழ்ச்சி கண்டு வருகிறது.எமது வியாபார சமூகமும் முன்னைய மரபு வழிமுறைகளிலிருந்து விடுபடத் தயாரில்லை.நாம் பல தடவைகள் எமது பிரச்சினைகள் தொடர்பில் அரச தரப்பினருடன் பல சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கின்றோம்.ஒருசில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் போலி மாணிக்க கற்களின் வருகையை கட்டுப்பத்துவதற்கு அவை போதுமானதாக இல்லை என்கிறார் அவர்.

போலி மாணிக்கக் கற்களால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குருவிடயைச் சேர்ந்த அஸ்லம் பாரூக் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
“பேங்கொக்,ஹொங்கொங் மற்றும் பல ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கைக்கு செயற்கை மாணிக்கக் கற்கள் கொண்டு வரப்படுகின்றன.சில போது தபால் மூலம் கொண்டு வரப் படுகிறது.இரத்தினக் கற்கள் தொடர்பில் நீண்ட அனுபமும் முதிர்ச்சியும் மிக்கவர்களால் மாத்திரமே இக்கற்களை மிக இலகுவாக இணங்கண்டு கொள்ள முடிகிறது.சிலபோது போலியாக தயார் செய்யப்பட்ட சர்வதேச சான்றிதழ்களையும் அவர்கள் வைத்திருக்கின்றனர்.இரத்தினக்கல் வியாபாரத்தில் இணைந்துள்ள இளம் தலைமுறையினரை சேர்ந்த பலரே மேற்படி மோசடிக் காரர்களால் ஏமாற்றப்படுகின்றனர்.எப்படியிருப்பினும் எமது மாணிக்க வியாபாரம் நம்பிக்கை நாணயம் என்ற விசுவாசத்தின் அடிப்படையிலேயே அது கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.அதுதான் அதன் வியாபார மரபும் ஆகும்.ஆனால் இப்போது போலி மாணிக்கக் கற்களின் வருகையினால் நாம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.இது தொடர்பில் அரசாங்கம் உரிய அவதானம் செலுத்த வேண்டும்”, என்றார் அவர்.
புதிய சட்டங்கள் அவசியம்
கடந்த மூன்று வருடங்களாக மாணிக்க வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் அதன் ஆரம்ப நிலை வர்த்தகர் அப்துல் ஜப்பாரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
“நாங்கள் மிகவும் சாதாரண நிலையிலேயே எமது வியாபாரத்தை முன்னெடுக்கின்றோம்.மிகவும் பெறுமதியான மாணிக்கக் கற்களை வாங்குகின்ற அளவுக்கு எம்மிடம் பணம் இல்லை.பத்தாயிரம் ரூபாவுக்கு குறைந்த பெறுமதியுடைய கற்களையே நாம் கொள்வனவு செய்கின்றோம்.கொள்வனவு செய்யும் எல்லாக் கற்களுக்கும் சான்றிதழ்களை எம்மால் பெற முடியாது.கல்லின் தரம் பற்றிய ஒரு அடிப்படை சான்றிதழை பெறுவதற்கு ஆயிரம் ரூபா அளவில் செலுத்தப்பட வேண்டியுள்ளது.இது எமக்கு சாத்தியம் அற்றதாகும்.சந்தைக்கு உண்மையான மாணிக்கக் கற்களுக்கு சமமான முறையில் பல வடிவங்களிலும் போலி மாணிக்கக் கற்கள் வந்துள்ளன.நான் எனது மாணிக்க வியாபாரததை ஆரம்பித்த போது இப்படியான பல போலி மாணிக்கக் கற்களால் பல ஆயிரக்கணக்கான ரூபாக்களை இழந்துள்ளேன். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்”, என அவர் தெரிவிக்கிறார்.

இரத்தினக்கல் வியாபாரத்தை பகுதி நேர தொழிலாக மேற்கொண்டு வரும் திஹாரியைச் சேர்ந்த இப்ராஸ் அப்துல் லத்தீபை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு பதில் தந்தார்.
“மாணிக்கக் கற்களை விற்பனை செய்யும் பல வெப் தளங்கள் உள்ளன.அதேபோல் மாணிக்கக் கற்களை ஏலத்தில் விற்பனை செய்யும் வெளிநாட்டு இணைய தளங்களும் உள்ளன.அவைகள் அனைத்தும் தாம் விற்பனை செய்யும் மாணிக்க கற்கள் தொடர்பில் தெளிவான விளக்கங்களையும் போதிய தகவல்களையும் படங்களுடன் காட்சிப்படுத்துகிறன்றன. சில போது இலங்கையின் நீல மாணிக்கம் மற்றும் சிவப்பு ரூபி உட்பட மஞ்சள் மாணிக்கம் ஆகியனவும் ஐந்து அமெரிக்க டொலர்களுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.அத்துடன் மேற்படி பெறுமதிமிக்க கற்களுக்கு இந்திய மாணிக்க ஆய்வுகூடமொன்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களையும் வைத்திருக்கின்றனர்.நாம் வங்கி அட்டைகள் ஊடாக குறித்த கட்டணங்களை செலுத்தும் போது எமக்கு அந்த மாணிக்கக் கற்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படுகிறது.எமக்கான தபால் செலவையும் அவர்களே பொறுப்பேற்கின்றனர். இந்த அடிப்படையில்தான் இலங்கைக்கு செயற்கை மாணிக்கக் கற்கள் கொண்டு வரப்படுகின்றன என அவர் கருத்து தெரிவிக்கிறார்.
போலிச் சான்றிதழ்கள்
இப்ராஸ் அப்துல் லத்தீப் குறிப்பிட்ட தகவலுக்கிணங்க இணையம் ஊடாக ebey.com இடம்பெறும் போலி மாணிக்கக் கற்களை சந்தைப் படுத்தும் முயற்சிக்கு ஆய்வு கூட சான்றிதழ்களை வழங்கி வரும் https://gemslaboratory.com என்ற வெப்தளம் தொடர்பில் எமது ஆய்வினை முன்னெடுத்த போது பல புதிய தகவல்களை அறிய முடிந்தன.

மேற்குறித்த ஆய்வு கூட வெப்தளம் ஊடாக பெறுமதி அற்ற பல செயற்கை மாணிக்கக் கற்களுக்கு தொடர்ச்சியாக பல போலிச் சான்றிதழ்களை வழங்கி வருகிறது.இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் குர்கன் மாவட்டத்தைச் சேர்ந்த ஸுனில் குமார் என்பவரை தொடர்பு படுத்தி உலகளவில் இடம்பெறும் போலி மாணிக்க கற்களை சந்தைப்படுத்தும் மோசடிக்கு மேற்குறித்த வெப்தளமே பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.அத்துடன் குறித்த நிறுவனம் வழங்கும் சான்றிதழில் இரத்தினக்கல் தொடர்பில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல நிறுவனங்களின் அடையாளச் சின்னங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.மேலும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள QR குறியீட்டை பயன்படுத்தி மாணிக்க கற்களின் தரம் பற்றியும் போலியாக உறுதிப்படுத்துகிறது. https://photos.app.goo.gl/AWF9jMXkoEsu75UL8
கொழும்பு பம்பலபலபிட்டியிலுள்ள இரத்தினக்கல் பரிசோதனை ஆய்வு கூடமொன்றின் உயர் அதிகாரி அஹமத் ஷரீபீடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் மாணிக்கக் கற்கள் தொடர்பில் கேட்ட போது அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
“மாணிக்கக் கற்களின் உண்மைத் தன்மை மற்றும் அதன் அமைப்பு பற்றி பரிசோதனைகளை மேற்கொள்ளும் இரசாயன ஆய்வுகூடங்கள் இரத்தினபுரி,பேருவலை மற்றும் கொழும்பு உட்பட காலி போன்ற நகரங்களில் அமையப் பெற்றுள்ளன.அரசாங்க பரிசோதனை ஆய்வு கூடங்கள் காணப்படுவது போல் தனியார் ஆய்வு கூடங்களும் உள்ளன.மாணிக்க கற்கள் பரிசோதனை தொடர்பில் ஐநூறு ரூபா முதல் ஐயாயிரம் ரூபா வரை அறவிடப்படுகிறது.பொதுவாக மிக உயர் தர மாணிக்கக் கற்கள் மாத்திரமே பரிசோதனைக்காக எம்மிடம் சமர்பிக்கப்படுகிறது.அத்துடன் பொதுவாக உண்மையான மாணிக்கக் கற்களுக்கு மாத்திரமே ஆய்வு கூடங்கள் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுகின்றன.நம்பிக்கையின் அடிப்படையில் மாணிக்க வியாபாரம் இடம்பெற்றாலும் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு வியாபாரத்தை முன்னெடுக்கும் நிலையும் வளர்ந்து வருகிறது.இது மிகவும் ஆரோக்கியமான மாற்றமாகும்.எம்மிடம் மாதாந்தம் நூற்றுக்கணக்கான மாணிக்கங்கள் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்படுகின்றன.அவற்றில் 10 சதவீதம் முதல் 15 சதவீதமான மாணிக்கக் கற்கள் போலியான மாணிக்கக் கற்கள் எனவும் இணங்காணாப்படுகின்றன.நாம் அவற்றிற்கு எந்தவொரு சான்றிதழையும் வழங்குவதில்லை” என அவர் தெரிவிக்கிறார்.
தீர்வு முயற்சிகள்-
போலி மாணிக்கக் கற்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றி இரத்தினக்கல் அதிகார சபையின் சபரகமுவ பிராந்திய நிலைய உயர் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கெட்ட போது அவர் பின்வருமாறு பதில் அளித்தார்.
“இலங்கை இரத்தினக்கல் தொடர்பில் மிகவும் புகழ் பெற்ற ஒரு நாடாகும்.எமது நாட்டில் காணப்படும் நீல மாணிக்கம் தொடர்பில் உலக அளவில் அதிகூடிய விலையும் சிறப்பும் இருக்கிறது.எமது நாட்டின் மொத்த தேசிய வருமானத்திலும் இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மூலம் கூடுதலான அந்நிய செலாவனிகள் கிடைக்கப் பெறுகின்றன.உலகின் பல நாடுகளின் செயற்கை மாணிக்கக் கற்களின் விற்பனை அங்கீகாரம் காணப்படுகின்ற போதிலும் இலங்கை எமது மாணிக்கம் தொடர்பில் அதன் நற்பெயரை பாதுகாக்கும் நோக்குடன் ஆய்வுகூட செயற்கை மாணிக்கக் கற்களை விற்பனை செய்வதை முற்றாக தடுத்திருக்கிறது.அதனை குற்றமாகவும் கருதுகிறது.எனினும் ஆபரணங்கள் தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் அதனைப் பயன்படுத்துலதற்கு தடைகள் இல்லை.எப்படியாக இருப்பினும் பல வடிவங்களில் பல வகையான போலி மாணிக்கக் கற்கள் நாட்டில் உள் நுழைந்திருப்பதையும் அதனால் உண்மையான மாணிக்க வியாபார சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளனர் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம்,
விரைவில் நிகழ்நிலை மூலம் மாணிக்கக் கற்களுக்கான சான்றிதழ்களை மிகக் குறுகிய நேரத்தில் பெறுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதன் மூலம் போலி மாணிக்கக் கற்களின் பாதிப்புக்களையும் ஆபத்துக்களையும் ஓரளவு கட்டுப்படுத்தம் முடியும்” என்கிறார் அவர்.
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர் இந்திக ஹஸித வீரவர்தனவிடம் இப்பிரச்சினை தொடர்பில் கேட்ட போது அவர் இவ்வாறு பதில் அளிக்கிறார்.
“உலக மாற்றங்கள் அனைத்தையும் நாம் பொருளாதார நோக்குடன் மாத்திரம் அணுகக் கூடாது.சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் மனித நேயம் பற்றியும் சந்திக்க வேண்டும்.இலங்கையின் மாணிக்கக் கற்களுக்கு சர்வதேச அளவில் அதிக விலை இருக்கிறது என்பதற்காக நாளாந்தம் பாரிய அளவில் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.இதனால் இரத்தினபுரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் தொடர்ச்சியான இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நிகழ்வதற்கு இவ்வகழ்வு முயற்சிகள் காரணமாக அமைகின்றன.எமது இரத்தினபுரி மாவட்டத்தில் மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கான காணிகள் இல்லை.அனைத்து இடங்களிலும் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.இந்தப் பின்னணியுடன் நாம் செய்கை மாணிக்கக் கற்களின் பயன்பாடு தொடர்பில் நேர் சிந்தனையுடன் நோக்க வேண்டும்”, என அவர் தெரிவிக்கிறார்.

சர்வதேச ரீதியில் இரத்தினக்கல் வியாபாரத்தில் இடம்பெற்று வரும் ஆரோக்கியமான மாற்றங்கள் எமது நாட்டிலும் இடம் பெற வேண்டும்.இன்னும் நாம் புதிய தொழில் நுட்ப உத்திகளையும் விஞ்ஞானக் கருவிகளையும் பயன்படுத்தி மாணிக்க வியாபாரத்தை மேற்கொள்வதற்கு தயாரில்லை.வெறும் மரபு ரீதியான முறைகளைப் பயன்படுத்தி மாத்திரமே மாணிக்கக் கற்களை இணங்காண்பதற்கு முயற்சிக்கிறோம்.நாம் இதனை மாற்றி அமைக்க வேண்டும்.எமது இளம் தலை முறையினருக்கு இரத்தினக்கல் தொடர்பான பாடநெறிகள் பாடசாலை மட்டத்திலிருந்தே அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.அவர்களிடம் வியாபாரத் திறமைகளை உருவாக்க முயற்சிக்கின்ற அதே நேரம் நல்ல மனப்பாங்குளையும் தோற்றுவிக்க வேண்டும்.இதன் மூலம் அவர்கள் என்றும் பிறரை ஏமாற்றி உழைப்பதையும் அதற்கு உதவி செய்வதையும் நிச்சயம் தவறாகவும் குற்றமாகவும் கருதுவர்.இப்பபடியான உள ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தப்படுகின்ற அதே நேரம் அரசு மாணிக்க வியாபார சமூகத்தை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளையும் ஆரம்பிக்க வேண்டும் என இரத்தினபுரி மாணிக்க வியாபாரிகள் சங்கதின் பிரதிநிதி அல்ஹாஜ் ஸனீர் தெரிவிக்கிறார்,
இரத்தினக்கல் வியாபார சந்தைகள் அனைத்தும் மரபு ரீதியான சந்தை முறைகளை கொண்டுள்ள போதிலும் அத்துறையில் இணைந்து கொள்வோர் தொடர்பாக சட்ட ரீதியான பதிவு நடவடிக்கைகள் மற்றும் வியாபார அனுமதிப் பத்திரங்களை வழங்குவதன் மூலம் அத்துறையில் இடம்பெறும் மோசடிகளையும் தவறுகளையும் கட்டுப்படுத்த முடியும்,அத்துடன் மாணிக்கக் கற்கள் தொடர்பில் புதிய வரி கட்டணங்கள் மற்றும் அவசர மாணிக்க கற்கள் பரிசோதனை முறைகளையும் அறிமுகப்படுத்துவதன் மூலம் மாணிக்க வியாபார சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப் படுத்த முடியும் என்பதுடன் அது தொடர்பாக இடம்பெறும் மோசடிகளையும் கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *