கணவருக்கு முன்னாள் காதலியை திருமணம் செய்து வைத்த மனைவி!

ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் டக்கிலி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் டிக்டாக் பிரபலமான கல்யாண். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளம் மூலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த விமலாவுடன் பழகி காதல் திருமணம் செய்துள்ளார்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்பவர் அம்பேத்கர் நகருக்கு வந்தார். அவர் விமலாவை தனியாக சந்தித்து பேசினா். அப்போது அவர், ‛நானும் கல்யாணும் டிக்டாக்கில் ஒன்றாக வீடியோ வெளியிட்டு வந்தோம். இருவரும் காதலித்தோம் ஆனால் சிறு கருத்துவேறுபாட்டால் பிரிந்துவிட்டோம். நான் அவரை தேடியும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் தான் தொடர்ந்து விசாரித்ததில் அவருக்கு திருமணமாகி இருந்தது தெரியவந்தது. இதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். மேலும் உங்களின் வாழ்க்கையில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. கல்யாணை என்னால் மறக்கமுடியவில்லை. இதனால் தான் தேடி வந்துவிட்டேன். எங்களை சேர்த்து வையுங்கள்’ எனக்கூறி கண்கலங்கி உள்ளார்.
இதைக்கேட்ட விமலா அவரை சமாதானம் பேசி அனுப்பினார். இந்த விஷயத்தை விமலா தனது கணவரான கல்யாணிடம் கூறாமல் இருந்தார். விமலா தனது இயல்பான நிலையை மறந்து சோகமாக காணப்பட்டதால் சந்தேகம் அடைந்த கல்யாண் சோகத்தின் பின்னணி பற்றி தெரிவிக்கும்படி கேட்டுள்ளார்.
அப்போது விமலா முன்னாள் காதலி நித்யஸ்ரீ தன்னை சந்தித்தது பற்றி தெரிவித்தார். இதைக்கேட்ட கல்யாண் நித்யஸ்ரீ கூறியது உண்மை எனத் தெரிவித்துள்ளார். பின்னர் தனது கணவரான கல்யாணுக்கு முன்னாள் காதலியான நித்யஸ்ரீயுடன் கோவிலில் 2வது திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.
மேலும் கல்யாண், நித்யஸ்ரீயின் கழுத்தில் தாலி கட்டி அவரை 2வது மனைவியாக ஏற்றுக்கொண்டார். மூவரும் சேர்ந்து செல்போனில் போட்டோக்கள் எடுத்து கொண்டனர். இந்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.