இலங்கையில் மதிய உணவிற்காக தேங்காய் கொண்டு வந்த மாணவி!

மினுவாங்கொடையில் உள்ள பாடசாலையொன்றில் உணவுக்காக தேங்காய்களை கொண்டு வந்த மாணவி ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிறுவர்கள் படும் சிரமங்கள் முடிவற்றவை என்பதை மறைக்க வேண்டிய விடயம் அல்ல.

பசியால் பாடசாலையில் மிளகாய்ப் பொடி தூவி சாதம் சாப்பிட்ட மாணவி பற்றிய தகவல் வெளியாகி நீண்ட நாட்களாகவில்லை.

இவ்வாறானதொரு சூழலில் மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள கனிஷ்ட இடைநிலைப் பாடசாலையொன்றில் பாடசாலை மதிய உணவிற்கு தேங்காய் கொண்டு வந்த மாணவியொருவர் தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளது.

இவர் இப்பள்ளியில் மாணவியர் தலைவி என்றும், 9ம் வகுப்பு படித்து வருவதாகவும், இவரது தந்தை கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று, பாடசாலை மதிய உணவு நேரத்தில், இந்த மாணவி தனது தோழிகளுடன் தேங்காய் சாப்பிடுவதை வகுப்பு ஆசிரியர் பார்த்துள்ளார்.

பின்னர், இது குறித்து பள்ளியின் மற்ற ஆசிரியர்களிடம் ஆசிரியை பேசி, பள்ளியிலேயே இதுபோன்ற சில குழந்தைகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.

மினுவாங்கொடையில் உள்ள பல குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின் பிள்ளைகள் இந்த கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைக்கு வருகின்றனர்.

இப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, மதிய உணவு வழங்கும் திட்டமும் உள்ளது.

அதன்படி நேற்று அந்த பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவாக சோறும் பருப்பு வழங்கப்பட்டதாகவும், பின்னர் பருப்பு தீர்ந்து போனதால் 3ம் தரம் பயிலும் மாணவர்களுக்கு சோறு மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் கோசல கருணாரத்ன, போசாக்கு குறைபாடு மற்றும் வளர்ச்சி குன்றிய சிறுவர்கள் தமது வைத்தியசாலைக்கு வருவது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, குடும்ப சுகாதார பணியகத்தின் தாய் மற்றும் குழந்தை சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலிதா சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *