70 வருட ராஜ குடும்ப காதல் முடிந்தது!

இளவரசியோ, மகாராணியோ, சாதாரண மனிதனோ… காதல் எப்பொழுதும் காதல்தான். அப்படியான காதல் வாழ்க்கைதான் மறைந்த பிரிட்டனின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்க்கையும்.அவரது காதல் கணவர் இளவரசர் பிலிப், கடந்த 2021 ஏப்ரலில் மறைந்தார்.

சரியாக 17 மாதங்கள் கழித்து தனது 96வது வயதில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தும் மறைந்துள்ளார். இந்த தம்பதியின் காதல் கதைக்கு வயது 70 ஆண்டுகள்! 1939ம் ஆண்டு பிரிட்டன் ராயல் கடற்படை கல்லூரியில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அப்போது எலிசபெத்துக்கு வயது 13 மட்டுமே. இளவரசர் பிலிப்புக்கோ 19 வயது.

முதல் சந்திப்பிலேயே காதல் என்று இவர்களின் கதையைத் தொடங்கலாம். என்றாலும் இருவரும் தாங்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறோம் என்று உணர்ந்தது முதல் சந்திப்பில் அல்ல.

அதுபோலவே 1939க்கு முன்பே இருவரும் சந்தித்துள்ளனர். அப்பொழுது எலிசபெத்துக்கு வயது 7; பிலிப்புக்கு வயது 13. ஒரு திருமணத்தில் அப்போது அவர்கள் சந்தித்தனர். இத்தருணத்தில் இருவருமே குழந்தைகளாக இருந்தனர். என்றாலும் பரஸ்பரம் மனம் கவர்ந்த ஃப்ரெண்ட்ஸ் ஆக மாறினர்.

இவ்விரு சந்திப்புக்கு அடுத்து இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்து உச்சத்தில் இருந்தது. அப்போது கடிதம் வழியாக இருவரும் பரஸ்பரம் தொடர்பு கொண்டு உரையாடத் தொடங்கினர். இந்த கடிதப் பரிமாற்றத்தின்போதுதான் ஒருவரையொருவர் காதலிக்கிறோம் என்பதே இருவருக்கும் புரிந்தது!என்றாலும் பரஸ்பரம் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் இருவருமே இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றனர். யுத்தம் இவர்களைப் பிரித்தது; மனமோ இருவரையும் இணைத்தது.

எனவே 1943ம் ஆண்டு எலிசபெத் ராணியை திருமணம் செய்துகொள்ள பிலிப் முடிவு செய்தார். இதுகுறித்து தத்தம் பெற்றோர்களிடம் இருவருமே 1946ம் ஆண்டு ஒரு நன்னாளில் எடுத்துரைத்தனர். இரு வீட்டாரும் சம்மதித்தனர். ஆனால், அதில் ஒரு பிரச்னை இருந்தது.பிலிப், பிறக்கும் போதே டென்மார்க், கிரீஸ் ஆகிய நாடுகளின் இளவரசர். எனவே,  ஏதேனும் ஒரு நாட்டின் அரசராக அவருக்கு நிச்சயம் வாய்ப்புகள் இருந்தது.

ஆனால்,  இங்கிலாந்து மன்னர் 6ம் ஜார்ஜுக்கு ஆண் வாரிசு இல்லை. இரண்டு பெண்  குழந்தைகள்தான். அவர்களில் எலிசபெத், இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூட  வாய்ப்பிருந்தது.

எனவே, தன் மகள் எலிசபெத்தை திருமணம் செய்யவிருக்கும் பிலிப்பிடம் நிலைமையை  எடுத்துச் சொன்னார் இங்கிலாந்து மன்னரான 6ம் ஜார்ஜ்.

சூழலைப் புரிந்துகொண்ட பிலிப், கொஞ்சமும் யோசிக்கவில்லை. தன் காதலி, கிரேட் பிரிட்டனின் மகாராணியாகத் திகழ  வேண்டும் என்பதற்காக தன் டேனிஷ் மற்றும் கிரேக்க அரச பதவியைத் தூக்கி எறிந்தார். அத்துடன் தன்  அரச குடும்பத்து பெயரையும் துறந்து, தன் தாய் வழி தாத்தாவின் பெயரான  மவுண்ட்பேட்டன் என்ற நாமத்தை சூட்டிக் கொண்டார்.
இப்போது பிலிப், எந்த அரச குடும்பத்தின் வாரிசும் அல்ல. சாதாரண குடிமகன். ராஜாவாக பிறந்தவர் தன் காதலுக்காக ஒரே இரவில் வெகு வெகு சாதாரண குடிமகனானார்.

இதனைத் தொடர்ந்து 1946ல் இருவருக்கும் ரகசியமாக திருமண நிச்சயம் நடந்தது. 1947ல் உலகப் போர் முடிந்த கொஞ்ச காலத்திலேயே 2000 விருந்தினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். தன் காதலனின் இந்த அளப்பரிய தியாகத்தை அறிந்த எலிசபெத், அதிர்ந்தார்; நெகிழ்ந்தார்; கசிந்துருகினார். பின்னாளில் – 1952ல் –  தான், மகாராணியாக முடிசூடப்பட்டதும், ‘டியூக் ஆஃப் எடின்பர்க்’ என்ற பட்டத்தை தன் காதல் கணவரான பிலிப்புக்கு வழங்கினார்.

காதலிக்கும் காலத்திலிருந்தே இருவரும் குதிரை ஓட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். அது திருமணத்துக்குப் பிறகு ஓய்வு நாட்களில் தொடர்ந்தது. போலவே இணைந்து நடனமாடுவது, ஊர் சுற்றுவது… என காதலில் இறுதி வரை மூழ்கி முத்துக் குளித்தனர். கிட்டத்தட்ட 70 ஆண்டு காலம்… இவர்களது காதல் வாழ்க்கை தொடர்ந்தது.

கருத்து வேறுபாடுகள் இவர்களுக்கு இடையிலும் ஏற்படவே செய்தது. ஆனாலும் அதை உடனுக்குடன் களைந்ததுதான் இவர்களது வெற்றியின் ரகசியம். காதல் வாழ்க்கைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த இவர்களை காலம்தான் பிரித்தது. 99 வயதான இளவரசர் பிலிப், கடந்த ஆண்டு இயற்கை எய்தினார்.96 வயதான எலிசபெத் மகாராணி, உடல்நலக் குறைவால் செப்டம்பர் 8, 2022ல் இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *