உலகில் நான்கில் ஒருவருக்கு உடல்பருமன் பிரச்சினை!

உலகளவில் நான்கில் ஒருவருக்கு உடல்பருமன் பிரச்னை இருப்பதாகவும், அப்பிரச்னை தற்போது இந்தியாவில் மூன்று மடங்கு அதிகரித்து வருவதாகவும் தற்போதைய நவீன கணக்கெடுப்புகளில் கூறப்பட்டுள்ளது என்கிறார் நெல்லை அரசு சித்த மருத்துவமனையின் மருத்துவர் உமா கல்யாணி.

உடல் பருமன் கணக்கிடல்: உடல் பருமன் என்பது உடல் குறியீட்டெண் (Body Mass Index) பிஎம்ஐ என்ற அளவீட்டை கொண்டு கணக்கிடப்படுகிறது. இது ஒருவருடைய எடையையும், உயரத்தையும் ஒப்பிடும் அளவு முறை. இதில் பிஎம்ஐ அளவு 18 முதல் 24.9 வரை இருந்தால் சரியான எடை என்றும், 25 முதல் 29.9 வரை இருந்தால் அதை அதிக உடல் எடை என்றும், 30க்கு மேல் இருந்தால் அதை அதிக உடல் பருமன் எனவும் கூறப்படுகிறது.
உடல் பருமன் எதனால்

அதிகரிக்கிறது?

இன்றைய வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணம். பிற நோய்கள் ஏற்படவும் இதுவே மூல முதல் காரணம். தற்போதைய நவீன கணக்கெடுப்புகள் நால்வரில் ஒருவருக்கு எடை அதிகரிப்பு எனும் உடல் பருமன் உள்ளதாக கூறுகிறது. உலகளவில் அதிகரித்த ஆற்றல் அடர்த்தியான உணவு (Energy dense food) எனப்படும் கொழுப்பு, சர்க்கரை அதிகமுள்ள உணவு வகைகளை உட்கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. மேலும் உட்கார்ந்தபடியே வேலை செய்வதாலும் (Sedentary lifestyle), உடற்பயிற்சிகள் இல்லாத தன்மையாலும் (Physical inactivity), அதிகரித்த வாகன பயன்பாடு ஆகியவற்றாலும் தற்போது இந்தியாவில் உடல் பருமன் மூன்று மடங்கு அதிகரித்து வருகிறது. மனஅழுத்தம் முதலான உளவியல் சார்ந்த பிரச்னைகள் அதிகரிப்பு, அதற்கான மருத்துவ முறைகளாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது.

உடல் பருமனால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?

உடல் பருமனால் நீரிழிவு, ரத்த அழுத்த பிரச்னைகள் ஏற்படுவதோடு, பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி மற்றும் உடல் ஹார்மோன்களில் ஏற்படும் சீரற்ற தன்மை அதிகரிப்பது போன்ற பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. எங்களிடம் உடல் பருமன் பிரச்னையோடு வந்த பெண்களில் 100ல் 90 சதவீதம் பேருக்கு சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை ஏற்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை மாறுபட்ட மாதவிடாய் தொந்தரவு தொடங்கி குழந்தையின்மை சிகிச்சை எடுக்கும் அளவுக்கும் இந்த உடல் பருமன் பாடாய் படுத்துகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஆரோக்கியமான உணவு பழக்கம் அவசியமா?

ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கமும், உடற்பயிற்சி முறைகளும் உடல் பருமனிலிருந்து பாதுகாக்கும் எளிய முறை என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதைதான் முன்பே சித்தர்கள் எழுதிய நூல்களில் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தேரையர் எழுதிய நோய் அணுகாவிதி ஒழுக்கம் என்ற நூலில் “முதனாளிற் சமைத்த கறி அமுதெனினும் உண்ணோம்” எனக் கூறியுள்ளார். ஆனால் இன்று நாமோ என்றோ தயார் செய்து பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, அதிகப்படியான உப்பு மற்றும் காற்று நிரப்பப்பட்ட மற்றும் சில கடைகளில் கிடைக்கின்ற பழைய பொரித்த உணவுகளை தரம் பார்க்காமல், சமைக்கும் முறை பார்க்காமல் உண்டு வருகிறோம். Street food என்று சொல்லப்படும் உணவுகளின் சுவைக்காக சேர்க்கப்படும் மோனோ சோடியம் குளூட்டமேட் தொடங்கி அதிக எண்ணெய் மற்றும் அதிக உப்பு என்று நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. இது அடுத்த தலைமுறைக்கு தவறான வழிகாட்டுதலாக உள்ளது.
மருத்துவமனையில் நாங்கள் சந்திக்கும் 90 சதவீதம் பேருக்கு உடல் பருமன் பிரச்னைக்கு காரணமாக இருப்பது தவறான உணவு பழக்கமே. இளவயது சிறுநீரக கோளாறில் ெதாடங்கி Auto immune diseases (உடல் நோய் எதிர்ப்பு சக்தியே உடலுக்கு எதிராக செயல்படுதல்) என்று சொல்லக்கூடிய நோய்கள் வரை அனைத்திற்கும் இந்த உணவு பழக்கமே காரணமாக அமைகிறது. எனவே நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவு பழக்க வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்.

சித்த மருத்துவத்தில் உணவு ஒழுக்கம்

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்ற திருக்குறளுக்கு, உண்ட உணவு செரித்தபின் பசி வருவது அறிந்து அடுத்த வேளை உணவு எடுப்பவனுக்கு மருந்து என்ற ஒன்றே தேவையில்லை என்று பொருள். சித்த மருத்துவத்தில் நித்திய ஒழுக்கம், கால ஒழுக்கம் என்று பிரித்துக் கூறுகின்றனர். ஒரு மனிதன் காலை எழுவதிலிருந்து இரவு தூங்கும் வரை கடைப்பிடிக்கும் ஒழுக்கத்திற்கு நித்திய ஒழுக்கம் என்று பெயர். இதனால் உடல் இயங்கியல் கடிகாரத்தின்படி (Biological clock) உடல் இயக்கங்கள் மாறுபாடின்றி செயல்படுகிறது. காலை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்றமும் சமப்படுகிறது. அறிவியல் ரீதியாகவும் இதனால் 24 முதல் 30 சதவீதம் உடல் இயக்கம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. காலத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை கால ஒழுக்கம் என்கிறோம். தட்பவெப்ப மாறுதலுக்கு ஏற்ப நம் உடலிலும் மாறுபாடு ஏற்படும் என்பதைக் கணித்த சித்தர்கள் அதற்கேற்ற உணவுப் பழக்கத்தை குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுதல் தொடங்கி மார்கழி மாதம் கோவில்களில் அதிகாலையில் தரும் பிரசாதம் வரை அனைத்தும் மருத்துவ முறைகளாக அமைந்திருப்பதோடு அவை நம் உடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.

இரவுக்கு எளிதில் சீரணமாகும் உணவு நல்லது

நார்ச்சத்து நிறைந்த நாட்டுக் காய்கறிகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழக வேண்டும். தொலைந்துவிட்ட வாழ்க்கை முறையை மீண்டும் பின்பற்ற ஆரம்பிக்க வேண்டும். காலை உறக்கத்திலிருந்து எழுந்த 1 முதல் 2 மணி நேரத்திற்குள் காலை உணவையும், இரவு உறங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்னதாக இரவு உணவையும் எடுத்துக் கொள்வது நல்லது. காலை எடுத்துக் கொள்ளும் உணவு சரிவிகித உணவாக புரதம் அதிகமுள்ள பயறு வகைகளை உள்ளடக்கியதாவும், இரவு கஞ்சி முதலிய எளிதில் சீரணமாகும் உணவுகளை உள்ளடக்கியதாகவும் இருப்பது நல்லது.

தமிழரின் பாரம்பரிய உணவு முறைகளைப் பின்பற்றுவோம்:

சமீப காலமாக பல வகையான உணவு கட்டுப்பாட்டு முறைகள் அதிகளவில் மக்களிடையே பின்பற்றப்படுகிறது. Intermittent fasting, Paleo diet, Keto diet என்பது போன்ற வடக்கத்திய கலாசார முறைகளை பின்பற்றிவரும் பல்வேறு விதமான உணவு முறைகளை மருத்துவர் ஆலோசனை மற்றும் முறையான வழிகாட்டுதலின்றி பின்பற்றுவதால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படுகிறது. இதில் Intermittent fasting என்பதைத்தான் நம் முன்னோர்கள் ஏகாதசி விரதம் என்றும், சோமவார விரதம் என்றும் கூறியிருப்பதோடு, குறிப்பிட்ட உணவு வகைகளை சில நாட்களில் எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளனர். எனவே தமிழர் கலாசாரப்படி நம் பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றுவதே நம் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

உடல் பருமனை சித்த வைத்தியத்தில் எப்படி தடுக்கலாம்?

முறையான உடற்பயிற்சியும், சரிவிகித உணவுப் பழக்கவழக்கமும் நம்மை உடல் பருமன் பிரச்னையிலிருந்து காத்துக் கொள்ளவும், பிற தொற்றா நோய்களான நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படாத வண்ணமும் பாதுகாக்கிறது. தற்போது எவ்வளவோ செலவு செய்து, பழைய சோறு சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது. எனவே பழமையான நம் சித்தர்களும், நம் முன்னோர்களும் சொல்லி வந்த உணவு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் உடல்பருமனை தடுக்கலாம். சித்த மருத்துவத்தில் உடல் பருமனை சரிசெய்ய உடலில் பொடி தேய்த்தல் மற்றும் திரிபலாச் சூரணம், குக்குலு சேர்ந்த மருந்துகள் போன்ற சிறந்த மருத்துவ முறைகள் உள்ளன. சீந்தில் குடிநீர், நீர்முள்ளிக் குடிநீர் முதலிய குடிநீர்களை முறையான மருத்துவ ஆலோசனையோடு எடுத்துக் கொள்வது நல்லது. உடல் பருமன் பிரச்னைக்கு நாங்கள் பெரும்பாலும் மருந்துகள் பரிந்துரைப்பதில்லை. உணவு முறை மாற்றம், யோகா மற்றும் பிரணாயாமம், நடைபயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றையே முதலில் பரிந்துரை செய்கிறோம். இவற்றோடு சேர்த்து தேவைப்படும் நபர்களுக்கு, தேவைப்படும் காலம் வரை மட்டுமே மருந்துகள் பரிந்துரை செய்கிறோம். உடற்பயிற்சிகளில் யோகா பயிற்சி மிகுந்த பலன் தரக்கூடியது. ஏனெனில் இதில் உடலும், மனமும் ஒருசேர ஒருங்கிணைவதோடு மூச்சு ஒழுங்குபடும். மேலும் உடல் உற்சாகம் பெறும். எனவே உடல் பருமன் போன்ற நோய்களை சரிசெய்ய உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை சரிசெய்து ஆரோக்கியமான சந்ததிக்கு வழி காட்டுவோம் என்கிறார் மருத்துவர் உமாகல்யாணி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *