விவாகரத்தை பத்திரிகை அடித்து கொண்டாடும் ஆண்கள்!

நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த விவாகரத்து வழக்குகள் முடிந்ததால் அதைக் கொண்டாடக் குஜராத் மாநிலத்தில் உள்ள போபாலை சேர்ந்த தொண்டு நிறுவனம் விழா ஒன்றை ஏற்பாடு செய்து அதற்கான பத்திரிகையை வெளியிட்டுள்ளது.

18 ஆண்களின் விவாகரத்து வழக்குகள் சமீபத்தில் முடிவுக்கு வந்து அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் விதத்தில் divorce invitation என்று பத்திரிகை அடித்து அதை சமூக வலைத்தளத்தில் அந்த தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

போபாலை சேர்ந்த ”பாய் நலசேவை” என்ற அமைப்பு ஆண்களுக்கான விவாகரத்து வழக்குகளைக் கையாளும் ஒரு தொண்டு நிறுவனம்.

விவாகரத்துக்கு விழா

விவாகரத்து வாங்க முடியாமல் போராடும் ஆண்களுக்கு உதவி செய்யும் இந்த நிறுவனம் சமீபத்தில் 18 ஆண்களுக்கு விவாகரத்தை வெற்றிகரமாகப் பெற்றுத் தந்துள்ளது.

இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், விவாகரத்திற்காக இதுபோன்ற ஒரு விழாவை எடுத்தால் அது விவாகரத்து வாங்கி மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு ஒரு ஊக்குவிக்கும் செயலாக அமையும் எனவும் மனம் பொருந்தாத திருமண உறவில் இருந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் அமையும் எனவும் கூறியுள்ளார்.

ஆண் எதிர்கொள்ள வேண்டியவை
இந்த விழா குறித்து மகளிர் அமைப்பிடம் கேட்டபோது, இதைப் பற்றி ஏதேனும் கருத்து தெரிவிக்கும் முன் விழாவின் நோக்கத்தைத் தீர விசாரித்து பின் கருத்து தெரிவிக்க வேண்டும் எனக் கருத்து கூற மறுத்து விட்டனர்.

ஒரு ஆணுக்கு விவாகரத்து கிடைக்க வேண்டும் என்றால் பலவகையான பிரச்னைகளை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. பொருளாதார ரீதியான பிரச்னை, சமூகரீதியான பிரச்னை, குடும்ப பிரச்னை மற்றும் மன ரீதியான பிரச்னைகளையும் ஒரு ஆண் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதன் பிறகு நீதிமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் வழக்காடல்கள் அவர்களுக்கு மேலும் மன உளைச்சலைத் தரும் சூழ்நிலையும் இங்கு நிலவுகிறது.

மீதி வாழ்க்கைக்கான மகிழ்ச்சி
அவ்வாறு பெறப்பட்ட இந்த விவாகரத்தை அவர்களின் அமைதியான மீதி வாழ்க்கைக்கான ஒரு மகிழ்ச்சியான ஆரம்பமாகக் கொண்டாடுவது மிகவும் அவசியமான ஒன்று என அந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் சிறு விழாவாக நடத்தத் திட்டமிடப்பட்டதாகவும் பின்பு இந்த பத்திரிக்கை சமூக வலைத்தளத்தில் வரலானதைத் தொடர்ந்து அதிக அளவில் ஆதரவு கிடைத்ததால் தற்போது பெரிய விழாவாக ஏற்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *